இராகவன் கருப்பையா- இரவு நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்தாலே ஒருவித அச்சம் ஆட்கொள்கிறது. காலையில் புவனத்தைப் பார்க்கவே சிலருக்கு பயமாக இருக்கிறது – கைகள் நடுங்குகின்றன.
மலேசியாவில் வெகுசன மக்களின் அன்றாட நிலைப்பாடு தற்போது இப்படித்தான் உள்ளது.
கோறனி நச்சிலின் கொடூரம் மிக அதிகமான மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் சூழலில் கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் வேதனயான ஒன்றாகவே இருக்கிறது என்றால் அது மிகையில்லை.
பெற்ற தாய் தந்தையரை அடுத்தடுத்து இழக்கும் குழந்தைகள், அன்பு செல்வங்களைப் பறிகொடுக்கும் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை இழந்து தவிப்போர் மட்டுமின்றி எண்ணற்ற உறவுகளையும் நட்புகளையும் இந்தக்கொடிய அரக்கனிடமிருந்து காப்பாற்ற முடியாதவர்களும் படும் வேதனைக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்றாட தொற்று 20,000த்தைக் கடந்து விட்ட நிலையில், இந்த ஒன்றரை ஆண்டுகளாக 1.2 மில்லியனுக்கும் மேற்பட்டோர், அதாவது நாட்டின் மக்கள் தொகையில் 3.7 விழுக்காட்டினர் இந்நோயின் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
மருத்துவமனைகளில் சோதனை மேற்கொள்ளாமல் சுயமாகவே தனிமைப்படுத்திக் கொள்வோரைச் சேர்த்தால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட எல்லா மருத்துவமனைகளிலும் தீவிரக் கண்காணிப்புப் படுக்கைகளுக்கான பற்றாக்குறை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால் யாரை முதலில் காப்பாற்றுவது என்ற சிக்கலான முடிவை எடுக்க வேண்டிய சூலநிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இத்தகைய சூழலில் இளையோருக்கே முக்கியத்துவம் வழங்கப்படுவதால் நோய்த் தொற்றுக்கு இலக்காகும் சற்று வயது முதிர்ந்தோர் தங்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு மத்தியில் இத்தகைய நெருக்கடியை எதிர்நோக்கிய சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான படுக்கைகளைக் கொண்ட தற்காலிக மருத்துவமனைகளை ஒரே வாரத்தில் கட்டி முடித்தது.
அதே போல இந்திய அரசும் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான படுக்கைகளைக் கொண்ட வசதிகளை வெறும் 72 மணி நேரங்களில் அமைத்து மக்களைக் காப்பாற்ற வழி வகுத்தது.
ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் நம் நாட்டிலும் மேற்கொள்ளப்டுகிறதா எனத் தெளிவாகத் தெரியவில்லை.
மலேசியாவைவிட இரட்டிப்பு மக்கள் தொகை, அதாவது 70 மில்லியன் பேரைக்கொண்ட தாய்லாந்தில் இதுவரையில் 7 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.
அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தாய்லாந்து அரசாங்கம் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
நம் நாட்டில் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ள மரண எண்ணிக்கை எத்தனை அரசியல்வாதிகளை அசைத்தது என்று தெரியாது.
குடும்ப உறுப்பினர், அண்டை வீட்டார், நெருங்கிய உறவினர் ஆருயிர் நண்பர், இவ்வாவராக பலருடைய மரணச் செய்திகள் வந்த வண்ணமாக இருக்கும் நிலையில் ரண வலியை இதயத்தில் சுமந்து கொண்டு மலேசியர்கள் பெரும் பீதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
முடிந்த அளவு ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் எனும் வேட்கையில் மருத்துவப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராடி வரும் வேளையில் நிலைமையைச் சீர் செய்வதற்கான எல்லா வசதிகளையும் கடப்பாடுகளையும் கொண்ட அரசியல்வாதிகளின் நிலைப்பாடு இவ்விவகாரத்தில் என்னவென்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
இப்படிப்பட்ட சூழலில் தொலைக்காட்சியில் பிரதமர் பேசப் போகிறார் எனும் அறிவிப்பு ஒரு சாராரை உற்சாகப்படுத்தியது ஏதோ உண்மைதான்.
பட்டினியில் வாடும் பி40 தரப்பினருக்கு விமோசனம் பிறக்கப் போகிறது, வெள்ளைக் கொடி இயக்கத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கப் போகிறது, சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளுக்கு மறுவாழ்வு மலரப் போகிறது, மருத்துவ வசதிகள் உடனடியாக மேம்பாடு காணவிருக்கிறது என்றெல்லாம் பெரும் கற்பனையில் தொலைக்காட்சியின் முன் அமர்ந்த மக்களுக்குப் பேரதிர்ச்சிதான் காத்திருந்தது.
கோட்டுச் சூட்டுடன் விறைப்பாகக் காட்சியளித்த தனது அமைச்சர்கள் புடை சூழப் புன்முறுவலோடு வந்த மஹியாடின் தன்னுடைய பிரதமர் பதவியைப் பற்றிதான் பேச வருவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
தனக்குப் போதுமான ஆதரவு உள்ளது எனவும் பிரதமர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் செய்த அறிவிப்பு எத்தனை பேரை உற்சாகப்படுத்தியது என்று தெரியாது.
ஆனால் தினந்தோறும் நொடிப் பொழுதில் ஒடிந்து போகும் குடும்பப் பந்தங்களின் மரண ஓலங்களுக்கிடையே தள்ளாடும் மக்களின் அவலத்திற்குக் கண்ணுக்கு எட்டிய வரையில் ஒரு தீர்வையும் காணோம் என்பதுதான் தெளிவு.