ஹெபடைடிஸ்- சி வைரஸை (Hepatitis C virus) கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகள் 2020 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசை (Nobel Prize in Medicine or Physiology) வென்றுள்ளனர். இவர்கள் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹக்டன் (Michael Houghton). மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஹார்வி ஆல்டர் (Harvey Alter) மற்றும் சார்லஸ் ரைஸ் (Charles Rice) ஆவார்.
அவர்களின் கண்டுபிடிப்புகள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளதாக நோபல் பரிசு குழு தெரிவித்தது.
இந்த வைரஸ் கல்லீரல் புற்றுநோய்க்கான பொதுவான காரணமாகும். மேலும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதற்கான முக்கியக் காரணமாகவும் அமைவதும் இந்த வைரஸ்தான்.
1960-களில் இரத்தமாற்றம் செய்பவர்கள் ஹெபடைடிஸ் என்ற மர்மமான கல்லீரல் பாதிப்பை எதிர்நோக்குகின்றனர் என்று அறியப்பட்டது.
இரத்தமாற்றம் செய்வது அக்காலக்கட்டத்தில் “ரஷ்யன் ருலெட்” (Russian roulette) போல் இருந்தது என்கிறார்கள் நோபல் பரிசு குழுவினர்.
துல்லியமான இரத்தப் பரிசோதனை செய்ய முடிவதால் இதுபோன்ற சம்பவங்கள் உலகிலுள்ள பல நாடுகளில் நீக்கப்பட்டுவிட்டன. அதுமட்டுமல்லாமல், குணப்படுத்தக்கூடிய அன்டி வைரல் (Antiviral) மருந்தையும் இவர்கள் கண்டுபிடித்தனர்.
வரலாற்றில் முதன்முதலாக இந்நோயைக் குணப்படுத்தி உலகத்திலிருந்து இந்நோயை முற்றிலும் அழித்துவிட முடியும் என்கிறார்கள் இந்தப் பரிசுக் குழுவினர்.
இருப்பினும், தற்போது சுமார் 70 மில்லியன் மக்கள் ஹெபடைடிஸ் சி வைரஸால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி ஆண்டுக்குச் சுமார் 400,000 பேரின் இறப்பிற்கும் இந்த வைரஸ் காரணமாக இருக்கின்றது.
ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய வைரஸ்கள் 1960 களில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால், பேராசிரியர் ஹார்வி ஆல்டர், 1972 ஆம் ஆண்டில் அமெரிக்கா தேசியச் சுகாதார நிறுவனத்தில் இரத்தமாற்ற நோயாளிகளை ஆராய்ச்சி செய்யும் பொழுது மற்றொரு மர்மத் தொற்று இருப்பதைக் கண்டுபிடித்தார். இரத்தமாற்றம் செய்த நோயாளிகளின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்தத்தை எடுத்துச் சிம்பேன்ஸிகளுக்கு (chimpanzees) கொடுத்ததில் அவைகளும் அதே நோயினால் பாதிக்கப்பட்டன.
சிரோன் என்ற மருந்து நிறுவனத்தில் இருந்த பேராசிரியர் மைக்கேல் ஹக்டன்போது, 1989 ஆம் ஆண்டில் வைரஸின் மரபணு வரிசையைத் தனிமைப்படுத்தினார். இது ஒரு வகை ஃபிளேவைரஸ் (flavivirus) என்று அறியப்பட்டு அதற்கு ஹெபடைடிஸ் சி என்றும் பெயரிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, 1997 இல் பேராசிரியர் சார்லஸ் ரைஸ், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில், மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட ஹெபடைடிஸ் சி வைரஸைச் சிம்பன்ஸிகளின் கல்லீரலில் செலுத்தி இந்த வைரஸ் கல்லீரல் செயலழிப்பிற்கு வழிவகுக்கும் என்பதைக் காட்டினார்.
தற்போது கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் ஹாக்டன் தனது அனுபவத்தை நினவு கூறுகையில், “அப்போது எங்களிடம் இருந்த கருவிகளை வைத்து வைக்கோலில் ஊசியைத் தேடுவது போல் இருந்தது” என்று பிபிசியிடம் கூறினார்.
“கல்லீரல் மற்றும் இரத்தத்தில் இருக்கும் வைரஸின் எண்ணிக்கையின் அளவும் கருவிகளின் நுட்பங்களும் குறைவாக இருந்ததால் கண்டுபிடிக்க நெடுநாட்கள் எடுத்தன.” என்கிறார்.
அவர்கள் பலமுறை முயற்சி செய்து ஏழு ஆண்டுகளில் 30 அல்லது 40 வெவ்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இறுதியில்தான் வெற்றிகரமாகக் கண்டுபிடித்தனர்.
இந்த அறிவிப்பு குறித்துக் கருத்துரைத்த, உலகப் பொதுச் சுகாதாரத்திற்கான மருத்துவக் ஆலோசகரும், ரோயல் மருத்துவ கழகத் துணைத் தலைவருமான டாக்டர் கிளேர் பேன்டன், இக்கண்டுபிடிப்பு மிகவும் போற்றப்படக்கூடிய சாதனை என்கிறார்.
இக்கண்டுபிடிப்பின் வழி இரத்தமாற்றத்தின் திறமையான சிகிச்சை முறை அறியப்பட்டு உலகில் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நம் உலகிற்கு எவ்வளவு முக்கியம் என்று இக்கண்டுபிடிப்பின் வழி நாம் அறியலாம்.
(தகவல்: பிபிசி.காம்)