முழு உறைவிடப் பள்ளிகளில் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கற்க வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

குணசேகரன் கந்தசுவாமி – முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh) 80-களில் இருந்து மலேசியாவில் செயல்படுகின்றன. புறநகர் மாணவர்களுக்கு நிலையான மற்றும் உகந்த பள்ளிச் சூழலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முதலில் இப்பள்ளி திட்டம் உருவாக்கப்பட்டது.

நாட்டில் முழு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இன்று, சபா மற்றும் சரவாக்கில் உள்ள 5 முழு உறைவிடப் பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் ஒரு பள்ளிக்குச் சராசரியாகச் சுமார் 800 மாணவர்கள் கொண்ட 69 பள்ளிகளில் 55,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கிறார்கள். முழு உறைவிடப் பள்ளிகள், முழுமையாகக் கல்வி அமைச்சின் முழு உறைவிடப் பள்ளிகள்  பிரிவால் நிர்வகிக்கப்படுகின்றன. குறிப்பாக, படிவம் 1 முதல் படிவம் 5 வரையிலான இடைநிலைக்கல்வியில் மட்டுமே இப்பிரிவு கவனம் செலுத்துகிறது.

அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசியக் கல்விக் கொள்கைக்கு இணங்க, முழு உறைவிடப் பள்ளிகள் ஏன் தாய்மொழிப் பள்ளிகளிலும் (SJK) தேசியச் சமயப் பள்ளிகளிலும்   பயிலும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்பதில்லை? தாய்மொழிப் பள்ளிகள் கல்வி அமைச்சால் நிர்வகிக்கப்படும் பாடத்திட்டத்திற்கு ஒத்த உள்ளடக்கத்தைக் கொண்ட பள்ளிகளாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முழு உறைவிடப் பள்ளிகளில் இம்மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் கொள்கையானது நாடு முழுவதும் உள்ள 1200-க்கும் மேற்பட்ட தேசிய வகை சீனப்பள்ளியிலும் (SJKC)  500-க்கும் மேற்பட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளியிலும் (SJKT) படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பில் பாகுபாடு காட்டுவதாக அமைந்துள்ளது. இச்செயல் பொதுக் கல்வி முறையின் கீழ் வேறு பள்ளியில் படிக்க விரும்புகிறார்கள் என்பதால், மலேசியக் குடிமக்களான இவர்களுக்கு அரசாங்க நிதியின் வழி கிடைக்கும் கல்வி வாய்ப்பில் முட்டுக் கட்டை போடும் வண்ணமாக அமைந்துள்ளது.

முழு உறைவிடப் பள்ளிகளில் சேருவதற்குத் தாய்மொழிப் பள்ளிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குத் தடை போடுவது  அதிக நேரம், வளம், ஆற்றல் போன்றவற்றைச் செலவழித்து மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதாகக் கூறும் கல்வி அமைச்சின் செயலைப் பாசாங்குத்தனமிக்கதாகப் பார்க்கத் தோன்றுகிறது. இது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. ஒற்றுமையை உருவாக்குவது என்பது இருவழிப் பாதை. ஒற்றுமை மற்றும் இனப் பன்முகத்தன்மையைப் பாராட்டுவது, குறிப்பாக, கல்வி போன்ற முக்கியமான துறைகளில், கொள்கை செயல்பாட்டின் அனைத்து மட்டங்களின் கூட்டுப் பொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களும் முழு உறைவிடப் பள்ளிகளில் சேரத் தகுதி பெறுவதற்கு முன், ஒரு பொது நுழைவுத் தேர்வுக்கு  (Ujian Kemasukan Sekolah Berasrama Penuh (UKSBP))  உட்படுத்தப்படுவதன் வழி ஒரு சமத்திவமான  வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

‘மலேசியக் குடும்பம்’ மற்றும் அனைவரின் நலன்களையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ள, மலேசியப் பிரதமரின் கொள்கையை நிலைநாட்டக் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிடம் இந்த அவசர வேண்டுகோளைச் சமர்ப்பிப்பதாகக் அவர்கள் தம் ஊடக  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த இந்த முனைப்பை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்:

 தியோ நீ சிங் – குலை நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் கல்வித்துறை துணை அமைச்சர்

  சிவராசா ராசையா – சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர், புறநகர் மேம்பாட்டு துறை முன்னாள் துணை அமைச்சர்

 சிவகுமார் – பத்துக் காஜா  நாடாளுமன்ற உறுப்பினர்

டத்தோ டாக்டர். ஹாசன் பஹ்றோம் – தம்பின்  நாடாளுமன்ற உறுப்பினர்

 இஸ்னரைசா முனிரா – கோத்த பெலூட் நாடாளுமன்ற உறுப்பினர்