பள்ளிகளைத் திறப்பது பிள்ளைகளுக்கு ஆபத்தா?

இராகவன் கருப்பையா – நாடளாவிய நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவில்லை எனும் தகவல் நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 3ஆம்  தேதி தேசிய அளவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுவே இறுதி முடிவு எனவும் தெரிகிறது.

இத்தகைய சூழலில் சுமார் 2100 ஆசிரியர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள மறுப்பதாக கல்வியமைச்சர் முஹமட் ரட்ஸி செய்த அறிவிப்பு பெற்றோர்கள் மட்டுமின்றி நம் எல்லாருக்குமே வியப்பையும் கோபத்தையும் கூட ஏற்படுத்துகிறது.

நாட்டில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் கிட்டதட்ட இந்த ஒரு விழுக்காட்டினர் மட்டும் ஏன் இப்படி அடம் பிடிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு பிரச்சினையைக் கலைவதற்குத் தக்க நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த எண்ணிக்கையில் எத்தனைப் பேர் சமயப் பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள் என்ற விவரத்தை அமைச்சர் வெளியிடவில்லை. அதே வேளை அவர்களுடையப் பிடிவாதத்திற்கு சமய நம்பிக்கை ஒரு காரணமா அல்லது வேறு எதாவது காரணங்கள் உண்டா என்றும் அரசாங்கம் கண்டு பிடிக்க வேண்டும்.

எது எப்படியாயினும் இவ்விவகாரம் நமதுப் பிள்ளைகளின் உயிர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விசயம். எனவே இதில் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்கும் போக்கை அரசாங்கம் கொண்டிருக்கக் கூடாது. மாணவர்களின் நலனுக்குப் பங்கம் ஏற்படக்கூடிய எத்தகைய செயலாக இருந்தாலும் அதற்கெதிராக கல்வியமைச்சு உடனடி நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதே சாலச்சிறந்தது.

பள்ளிகளைத் திறப்பதற்கு இன்னும் ஏறக்குறைய ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் அரசாங்கம் அதிரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இந்த 2100 பேரும் 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளும் வரையில் அவர்களை இடை நீக்கம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிப்பது நல்லது.

அவர்களுடைய அடையாளங்கள் தெரியாத நிலையில் எந்த ஆசிரியரைப் பார்த்தாலும் நமக்குச் சந்தேகம் எழத்தான் செய்யும். எனவே அச்சத்தின் பேரில் பெற்றோர்கள் தங்களுடையப் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அப்படி ஒரு சூழல் ஏற்படுமேயானால் அரசாங்கம்தான் அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இவ்வளவு நாள் கழித்து மீண்டும் பள்ளிகளைத் திறக்கும் நடவடிக்கை தோல்வியில் முடிந்துவிடக்கூடாது என்பதே எல்லாருடைய எதிர்பார்ப்பாகும்.

ஜொகூர் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 800 ஆசிரியர்கள் தடுப்பூசிப் போட்டுக் கொள்ள மறுக்கின்றனர் எனக் கடந்த மாதம் செய்தி வெளியாகியிருந்தது. மேற்குறிப்பிட்ட 2100 பேரில் இவர்களும் அடங்குவரா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

இத்தகையருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும் என ‘பேஜ்’ மற்றும் ‘மேக்பி’ எனப்படும் கல்வி தொடர்பான இரு அரசு சாரா இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன. பள்ளிகளுக்குள் நுழைய அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதே அவ்வியக்கங்களின் பரிந்துரையாகும்.

அவசரப்பட்டு பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டும் கூட இம்மாதத் தொடக்கத்தில் ஆலோசனைக் கூறினார்.

இவ்வாண்டு மத்தியில் முழு முடக்கம் என்று அறிவித்துவிட்டு நோன்புப் பெருநாளுக்கு முன்னைய சந்தைகளையும் தொழிற்சாலைகளையும் திறந்தே வைத்திருந்ததால் ஏற்பட்ட விபரீதத்தைத்தான் இப்போது நாம் அனுபவிக்கின்றோம்.

அரசியல் சுயநலத்தை முன்வைத்து கண்மூடித்தனமாகச் செய்யப்பட்ட அத்தகை முடிவுகளினால் வரம்பு மீறிய நோய்த்தொற்றும்  அதனாலான மரணங்களும் இன்றுவரையில் நம்மை வாட்டி வதைக்கின்றன.

பிரதமர் மட்டுமே தற்போது மாறியுள்ளாரேத் தவிர அந்த சமயத்தில் விபரீத முடிவுகளைச் செய்த அதே அமைச்சர்கள்தான் இப்போதும் முடிவு செய்கிறார்கள் என்று நினைக்கும் போது ஒருவித பீதி நம்மை ஆட்கொள்ளத்தான் செய்கிறது.

வெகுசன மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த அரசாங்கம் எம்மாதிரியான முடிவெடுத்தாலும் அதில் ஐயப்பாடு இருக்கவே செய்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது.

ஆக பள்ளிக்கூடங்களைத் திறக்கும் விவகாரத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பைப் பணயம் வைக்கும் எவ்விதமான நடவடிக்கையாக இருந்தாலும் மக்கள் அதனைக் கூர்ந்து கவனிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.