நீலப் பெருங்கடல் வியூகம் – பாகம் 6

இராமாயணத்தில் ஒரு கொசுறு கதை. சத்தியவிரதன் என்பவன் கெட்டவன். ஆயினும் பஞ்சகாலத்தில் மாமுனி விசுவாமித்திரரின் குடும்பத்தைக் காப்பாற்றியவன். முனிவர் விசுவாமித்திரர் அவனுக்கு மனித உடலுடன் சொர்க்கம் செல்ல வரம் அருளுகின்றார். அவனைச் சொர்க்கத்தின் உள்ளே நுழைய விடாமல் இந்திரன் தடுக்கின்றான். அப்போது, இப்புவிக்கும் அந்தச் சொர்க்கத்திற்கும் இடையில் சத்தியவிரதனுக்காக ஒரு ‘திரிசங்கு’ சொர்க்கத்தைப் படைக்கின்றார் விசுவாமித்திரர்.

இக்கதையைப் படித்தபோது எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நீலப் பெருங்கடல் வியூகம்.

சொர்க்கத்திற்குச் செல்வதில்தான் மனிதர்களுக்கு இடையே போட்டாப் போட்டி நிலவுகிறது. எனவே, எதற்கு போட்டாப் போட்டி? நானே புதியதைப் படைத்துக் கொள்கிறேன் எனும் சிந்தனைதான் நீலப் பெருங்கடல் வியூகத்திற்கு அடிப்படை.

புதியதைப் படைக்கும்போது அதில் புத்தாக்கம் இருக்க வேண்டும். இதுவரை வேண்டாம் என்று சொன்னவர்களும் இனி வேண்டும் என்று உங்களை நாடி வரவேண்டும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். அத்தகைய ஈர்ப்புகளை உங்களுடையப் புத்தாக்கம் கொண்டிருக்க வேண்டும்.

அந்த ஈர்ப்புகள் வாடிக்கையாளர்களின் (1) உற்பத்தித் திறனை உயர்த்த வேண்டும் (2) பணியை எளிமையாக்க வேண்டும் (3) வசதியைப் பெருக்க வேண்டும் (4) இடர்களைக் குறைக்க வேண்டும் (5) மதிப்பையும் (கெளரவம்), மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அதிகரிக்க வேண்டும் (6) நட்பான சூழலை உருவாக்க வேண்டும்.

அண்மையில் கோறனிப் பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிக் கண்டுபிடித்துக் கொள்ளை பணம் சம்பாதித்துக் கொண்டன மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள். ஆனாலும், அந்தத் தடுப்பூசியில் பல இடர்கள் இருக்கின்றன. அவை சிலருக்குப் பக்கவிளைவை ஏற்படுத்துகின்றன. 100 விழுக்காடு பாதுகாப்பு உறுதியை அவை வழங்கவில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்குச் சிலர் அஞ்சுகின்றனர். சிலருக்கு ஊசி என்றாலே அழற்சி. தடுப்பூசிப் போட்டப்பிறகும் தொற்றுக்கு ஆளானவர்களும் இருக்கின்றார்கள். தடுப்பூசிப் போட்டுக்கொள்வதும் அத்துனை வசதியாக இல்லை. நடக்க முடியாதவர்கள், நோயாளிகள் தடுப்பூசிப் போடும் நடுவங்களில் காத்திருக்க முடியாத சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். சிறார்களுக்கு இப்போதுதான் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.

வீட்டில் இருந்தபடியே வலியோ, அச்சமோ இல்லாமல் தானே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் வகையில் அல்லது இன்னும் எளிதாக மாத்திரை வடிவில் இருக்குமாறு புத்தாக்கம் செய்யப்பட்டால், இந்தத் தடுப்பு மருந்துக்கான வரவேற்பு அதிகரிக்கும்.

இப்பொழுது பள்ளிக்கூடம் பக்கம் செல்வோம்.

தமிழ்ப்பள்ளிக்கான 50 % பெற்றோர்கள், தமிழ்ப்பள்ளியை மறுதலித்துவிட்டு, தேசியப் பள்ளிக்கு அல்லது சீனப்பள்ளிக்கு அனுப்புகின்றனர்.

தமிழ் உணர்வு அற்றவர்கள் என வேண்டுமானால் இவர்களைச் சாடலாம். ஆனால், அதைப்பற்றி அவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். உணர்வைவிட தேவையை அவர்கள் அதிகம் விரும்புகின்றனர். அவர்களிடையே எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன. அந்த எதிர்ப்பார்ப்புகள் என்ன என்பதையும் நாம் கண்டு பிடித்தால் அதையொட்டி புத்தாக்கம் செய்யலாம்.

நீலப் பெருங்கடல் வீயூகம் தோல்வியடையாமலிருக்கத் திட்டமிடல் நிலையில் உள்ளபோதே பல இடர்களைக் கண்டுபிடித்து விடலாம். அவற்றைச் சரிசெய்தும் விடலாம்.

விசுவாமித்திரர் படைத்த திரிசங்கு சொர்க்கம் சத்தியவிரதன் ஒருவனுக்காக மட்டும்.

ஆனால், நீல வியூகத் திட்டத்தால் அதிகமானோர் பயன்பெற வேண்டும், அது அதிகமானோரை ஈர்க்க வேண்டும்.

ஆக்கம் :- முனைவர் இரா. குமரன் வேலு