பினேங் மாநிலத்தில் உள்ள இந்திய மரபியல் அருங்காட்சியகத்தைப் போல சிலாங்கூர் மாநிலத்திலும் ஒரு நிலையம் உருப்பெற்று வருகிறது.
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் பினேங்கின் நகர மையத்தில் உள்ள மெக்கலிஸ்தர் சாலையில் நாட்டின் முதல் தமிழர் அருங்காட்சியகம் திறப்பு விழாக்கண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
அம்மாநிலத்தின் இந்து அறப்பணி வாரியம் நிர்வகிக்கும் அந்த அருங்காட்சியகத்தைப் போலவே சிலாங்கூரின் கோலசிலாங்கூர் மாவட்டத்தில் மற்றொரு இந்தியர் பொருட்காட்சி சாலையை அமைப்பதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அருங்காட்சியக ஆர்வலரான இடைநிலைப் பள்ளி ஆசிரியர் குணநாதன் ஆறுமுகம் மற்றும் அவருடைய நண்பர் வேளாங்கண்ணி மாசிலாமணி ஆகிய இருவரும் இதர பல ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு இம்மாபெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
தேவையான காட்சிப் பொருள்களை தற்போது சேகரித்து வருவதாகக் கூறிய குணநாதன் பயன்பாட்டில் இல்லாத இந்தியப் பாரம்பரியப் பொருள்களை நன்கொடையாகக் கொடுத்து உதவும்படி பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவில் இது போன்ற அருங்காட்சியகங்கள் ஆங்காங்கே அமைக்கப்படுவது அவசியமாகும். இல்லையெனில் நம் நாட்டில் இந்தியர்கள் வாழ்ந்ததற்கான சுவடு எதிர்காலத்தில் இல்லாமல் போகக் கூடும் என்றார் அவர்.
குறிப்பாக தோட்டப்புறங்களில் நம் இனத்தவர்கள் அதிக அளவில் வாழ்ந்த காலத்தில் பால் மரம் சீவ பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களையும் கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் சேகரித்து வருவதாக குணநாதன் தெரிவித்தார்.
அது மட்டுமின்றி தங்களுடைய வீடுகளில் அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய எண்ணெய் விளக்குகள், சமையலரை சாமான்கள், இஸ்திரிப் பெட்டி மற்றும் இதரத் தளவாடப் பொருள்களோடு தோட்டப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட கரும்பலகை மற்றும் சுண்ணத்துண்டு போன்ற உபகரணங்களையும் காட்சிக்கு வைக்க இவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்.
அதோடு சம்பளச் சீட்டு, ரசீதுகள் போன்ற இதரப் பத்திரங்களையும் வைத்திருப்பவர்கள் இந்தப் பொருட்காட்சி சாலை வெற்றி பெறக் கொடுத்து உதவ வேண்டுமாய் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேற்கொண்டு பாரம்பரிய சிகையலங்காரக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்துப் பொருள்களும் வரவேற்கப்படுகின்றன. அவை எல்லாமே எதிர்காலச் சந்ததியினருக்கு பயனானப் பாடமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நாட்டில் நாம் ஒரு சிறுபான்மை சமூகமாக இருந்து வந்துள்ள போதிலும் காலங்காலமாக நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நாம் ஆற்றிவரும் அர்ப்பணிப்பு நிறைந்தப் பங்கு நிகரற்றது.
ஆனால் பல நிலைகளில் நம்மவர்களின் சரித்திரமும் சாதனைகளும் இங்கு சன்னம் சன்னமாக மறைக்கப்பட்டு வருகிறது என்பது நாம் அனைருமே அறிந்த நிதர்சனமான உண்மை.
இத்தருணத்தில் இது போன்ற முயற்சிகள் நாம் எல்லாருமே ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அளப்பரிய ஒன்றுதான் என்றால் அது மிகையில்ல.
இந்த அருங்காட்சியகத்திற்குப் பாரம்பரியப் பொருள்களை நன்கொடையாக வழங்க விரும்புவோர் அதன் நிறுவனர்களை கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்:
குணநாதன்: 012-2668416
வேளாங்கண்ணி: 011-23650632