கட்சி தாவும் அரசியல் தவளைகளும், சட்டமும் – கி.சீலதாஸ்

கட்சி தாவல் அல்லது சட்ட அவைத் தரையைக் கடப்பது என்பது மலேசியாவுக்கே உரிய அரசியல் கலாச்சாரமல்ல. பல நாடுகளில் கட்சி தாவல் நிகழ்வது சர்வசாதாரணம். நம் நாட்டில் கட்சி தாவலில் ஈடுபடுவோரை “தவளைகள்” என்று இழிவாக வர்ணிக்கப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

தவளை எனும்போது அது இயல்பாகவே ஒரே கிணற்றில் தம் காலத்தைக் கழிக்கும் என்பார்கள். வேறொரு கிணறுக்குத் தவளை தாவுவது சிரமம்தான். கட்சி தாவல் என்றால் ஒரு கட்சியை விட்டு வேறொரு கட்சிக்குத் தமது விசுவாசத்தை மாற்றிவிடும் சட்ட அவை உறுப்பினர்களைக் குறிக்கிறது.

கட்சி தாவல் முறைகேடான நடத்தையாகக் கருதப்படுகிறது. ஆனால், சட்டம் இழிவாகக் குறிப்பிடாமல் தரையைக் கடப்பது என்று கவுரமாகச் சித்தரிக்கின்றது.

ஒரு கட்சியின் வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேறு கட்சிக்கு மாறினால் அவர் தமது சட்ட அவை உறுப்பியத்தை இழந்து விடுவார் என்று சில நாடுகளின் அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின் 46(2)ஆம் பிரிவானது ஒரு கட்சியின் தேர்தலில் வெற்றி பெற்ற அவை உறுப்பினர் அந்தக் கட்சியிலிருந்து விலகினாலோ, நீக்கப்பட்டாலோ அவை உறுப்பியத்தை இழப்பார் என்கிறது.

நாட்டில் ஒருமைப்பாடு தேவை என்ற நோக்கம் அல்லது போர் கடும் அவசரகால சூழ்நிலைகளால் எழலாம். அப்படிப்பட்ட காலகட்டத்தில் எதிரும் புதிருமாகச் செயல்படும் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் ஒரு குறுகிய அரசியல் அட்டவணைக்கு உட்பட்டு செயல்படுவது உண்டு.

இது கட்சி தாவல் அல்ல. அதுபோலவே, பொதுத் தேர்தலுக்கு முன்னர் பல்வேறு கட்சிகள் வெவ்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும் ஒரு பொது எதிரியைத் தோற்கடிக்கும் பொருட்டு தேர்தல் உடன்பாடு காண்பது உண்டு. இதுவும் கட்சி தாவல் அல்ல, மாறாக, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற அரசியல் அணுகுமுறை எனலாம். நாட்டு நலனைக் கருத்திற்கொண்டு சில சமயங்களில் கட்சி வேறுபாடின்றி ஒரு சட்டத்தை அல்லது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குக் கட்சி கட்டுப்பாடு தளர்த்தப்படுவது உண்டு. மனசாட்சிக்கு ஏற்றவாறு வாக்களிக்க சட்ட அவை உறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதும் கட்சி தாவல் அல்ல.

இது நாள் வரை ஒரு கட்சியில் இருந்தவர், ஆளும் கட்சியைக் கடுமையாக வைதவர் பணம், பதவி என்ற மயக்கும் சக்திகளுக்கு இறையாகி ஆளும் கட்சிக்குப் போய் விடுவார், மாறிவிடுவார் அல்லது மேலே குறிப்பிடப்பட்ட மயக்கு சக்தியை வாரி வழங்க தயாராகிவிட்டனர்.

ஒரு புது அமைப்பு ஆளும் கட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டி, ஆளுங்கட்சி உறுப்பினர்களைக் கவர்ந்து விடுவது ஒன்றும் விநோதமல்ல. அப்படிப்பட்ட சட்ட அவை உறுப்பினர்களைத்தான் “தவளைகள்” என்கிறார்கள். கிணற்றுத் தவளை அதை விட்டு வெளியே வந்தால் அது பாம்புக்குத் தீனியாகிவிடும் என்பார்கள்.

அதுபோல காலங்காலமாக ஒரு அரசியல் கட்சியில் இருந்தவர் வேறொரு கட்சிக்குப் போனால் அவர் அங்கு பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல்தான் என்கிறார்கள். தவளையுடன் ஒப்பிடுவதை விட குரங்குடன் ஒப்பிடுவதே பொருந்தும். கிளைக்குக் கிளை தாவும் குணம் குரங்கினத்துக்கு இயற்கையானது. சுயநல அரசியல்வாதியின் குறி தன்னலமே. ஆதாயம் எங்கிருக்கிறதோ அதுவே சுயநல அரசியல்வாதியின் இலக்காகும்.

பல நாடுகள் கட்சி தாவலைத் தடை செய்துள்ளன. அதே சமயத்தில், சில நாடுகள் கட்சி தாவலைத் தடை செய்த போதிலும் பிறகு அந்தச் சட்டத்தை ரத்து செய்துவிட்டன.

கட்சி தாவல் வேண்டுமா, வேண்டாமா என்பது மிகுந்த சிக்கலான கேள்வியாகும். காரணம் ஒரு சட்டப்பூர்வமான அரசியல் கட்சியோடு இணைந்து கொள்ளும் உரிமை நாட்டு குடிமக்களுக்கு உண்டு. உரிமை எனும்போது அது ஒருவர் சுதந்திரமாக வாழ்வதற்கு அனுமதிக்கிறது எனலாம். எனவே, ஒருவர் எந்த அரசியல் இயக்கத்தோடு இணைய விரும்புகிறார் என்பது அவரைச் சார்ந்ததாகும். இந்தச் சுதந்திரத்தைக் குடிமக்களிடமிருந்து பறிக்க முடியாது. இந்த உரிமையை எடை போடும்போது அதற்கு எதிராகச் சட்டம் இயற்றினால் அது அரசமைப்புச் சட்டம் நல்கும் பாதுகாப்பை உதாசீனம் செய்கிறது என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது.

ஒரு சட்ட அவை உறுப்பினர் எந்தக் கட்சியின் சார்பில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதே கட்சியில் தன் அவை உறுப்பினர் கெடு முடியும் வரை நீடிக்க வேண்டும். வாக்காளரிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதுதான் நியாயம்.

அதைவிடுத்து, நடப்பு சட்ட அவையின் ஆயுள் காலம் முடியாதபோது கட்சி தாவுவது வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட மோசடி என்ற கருத்தும் பலமாகவே இருக்கிறது. இந்த இரு வகையான கருத்துக்கள் மக்களைக் குழப்பும்போது அரசியல் வாழ்க்கை நடத்தும் சிலர் கட்சி தாவலைச் சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

இறுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை உறுப்பினர் ஒருவர் தாம் இணைந்திருந்த கட்சியை விட்டு விலகினால் அல்லது அவரது கட்சிய உறுப்பியம் பறிக்கப்பட்டால் அவர் சட்ட அவை உறுப்பியம் இழந்துவிடும்போது அவரின் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அந்த இடைத்தேர்தலில் கட்சி மாற்றம் அல்லது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவை உறுப்பினர் பங்கு பெறுவதைத் தடுக்கும் சட்டமும் தேவை. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் பங்கு பெற முடியாது என்ற சட்டம் பொருத்தமானதாகும்.

தேர்தல் சட்டத்தில் கட்சி தாவலைத் தடை செய்யும் விதி புகுத்தப்பட்டால் அது அரசமைப்புச் சட்டம் தரும் உரிமையைப் பறிக்கிறது. எனவே, அது செல்லாது என்று வழக்கு தொடுத்தால், நீதிபதிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு மரியாதை அளித்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

காரணம், அவர்களின் கடமை அரசமைப்புச் சட்டத்தைத் தற்காப்பதே! அப்படியானால், கட்சி தாவலைச் சட்டத்தின் வழியாகத் தடை செய்ய இயலாதா என்றால் முறையே அரசமைப்புச் சட்டத்தில் திருத்தத்தைச் செய்தால் அதை நீதிமன்றம் மதிக்கும் எனலாம்.

எனவே, கட்சி தாவலைத் தடுக்க சட்டம் வேண்டும் என்பது நியாயமானதாக இருக்கலாம். ஏனெனில், சமீப கால அனுபவம், மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஆட்சி கவிழ்ப்பில் மும்முரமாகக் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

இது நாட்டுக்கு நல்லதன்று; மக்களின் வேதனை தொடரும். அதை நீக்க வேண்டும். அரசியல்வாதிகள் சாதாரண மக்களின் நலனில் கவனம் கொள்ளாது தங்களின் நலனில் மட்டும் கவனம் கொண்டிருந்தால் மக்கள் அவர்களை அடையாளம் கண்டு புறக்கணிப்பார்கள் என்பது திண்ணம்.