வேலியே பயிரை மேயும் அரசியல் நியமனங்கள்!       

இராகவன் கருப்பையா – நாட்டின் பொருளாதார மந்த நிலை சீரடைந்து  வருகிறது எனச் சில அரசியல்வாதிகள் வெறுமனே மார்தட்டிக் கொண்டிருக்கும் போதிலும் இன்னமும் நிறைய பேர், குறிப்பாகப் பி40 தரப்பினர் அன்றாட உணவுக்குக் கூட அவதிப்படுவதை நம்மால் காண முடிகிறது.

அண்மைய வாரங்களாகக் கிடு கிடுவென வரம்பு மீறி ஏற்றம் கண்டுள்ள அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகவே உள்ளது.

நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மட்டும்தான் இது குறித்துக் கண்டனக் குரல் எழுப்பி வருகிறார்களே தவிர மற்றவர்களுக்கு எவ்வளவுதான் உரக்கச் சொன்னாலும் உறைக்கவில்லை என்றே தெரிகிறது.

இத்தகைய சூழலில் மக்களின் வரிப் பணத்தைத் தேவையில்லாமல் விரயமாக்கும் வகையில் அநாவசிய அரசியல் நியமனங்களைத் தான்தோன்றித்தனமாக மேற்கொள்ளும் பிரதமர் சப்ரியின் போக்கில் மக்கள் விரக்தியடையத் தொடங்கிவிட்டனர்.

உலகிலேயே மிகப் பெரிய அமைச்சரவைகளில் ஒன்றைக் கொண்டுள்ள மலேசியா அதன் 69 அமைச்சர்களுக்கும் துணையமைச்சர்களுக்கும் மாதம்தோறும் மில்லியன் கணக்கில் செலவிடுவதால் ஏற்கெனவே மக்கள் சினமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தனது ஆட்சிக்கு ஆதரவு வழங்கியுள்ள அரசியல் கட்சிகளுக்கு நன்றிக்கடனைப் போன்ற செயல்பாட்டில் மேலும் 7 அநாவசிய நியமனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சம் மூன்றரை இலட்சம் ரிங்கிட் செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அந்தஸ்தைக் கொண்ட சிறப்புத் தூதர்களாக 4 பேரும் பிரதமரின் சிறப்பு ஆலோசகர்களாக இருவரும் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு ஆலோசகர் விரைவில் நியமனம் பெறவுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக விளங்குவது முன்னாள் ம.இ.கா. தலைவர் சாமிவேலுவின் நியமனம்தான் என்று நம்பப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சாமிவேலுவின் நீண்டநாள் சேவைக்குப் பரிசாக அவரைத் தெற்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராக அப்போதைய பிரதமர் நஜிப் நியமித்தார்.

இந்தியா, பாகிஸ்தான், வங்காளத் தேசம், நேப்பாளம், இலங்கை போன்ற தெற்கு ஆசிய நாடுகளின் தூதர்கள் தங்களுடைய பணிகளைச் செவ்வனே ஆற்றிவந்த சூழலில் சாமிவேலுவின் நியமனம் கொஞ்சம் கூட நியாயப்படுத்த முடியாத, முற்றிலும் தேவையில்லாத ஒன்றாகவே அப்போது கருதப்பட்டது.

அதற்கேற்றவாறு அப்பதவியை வகித்த 8 ஆண்டு காலத்தில் அவரும் பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

கடந்த 2018ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான், இதுவெல்லாம் மக்கள் பணத்தை விரயமாக்கும் அநாவசிய நியமனம் என்ற அடிப்படையில் சாமிவேலுவை உடனடியாகப் பதவி நீக்கம் செய்தது.

ஆனால் கடந்த ஆண்டுத் தொடக்கத்தில் கொல்லைப் புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய மஹியாடின், பிரதமர் பதவியில் அமர்ந்தவுடன் நிலைமை ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்றாகிவிட்டது.

வெறும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு தனது ஆட்சிக்கு ஆதரவளித்த பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்ஙை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக மஹியாடின் நியமித்தார்.

ஆனால் ஹாடி ஒரு தீவிரவாதி எனச் சில அரபு நாடுகள் முத்திரை குத்தியுள்ளதால் இன்று வரையிலும் அந்தப் பக்கமே தலைகாட்ட முடியாமல் முடங்கிக் கிடக்கிறார் அந்தப் பாஸ் தலைவர்.

இருந்த போதிலும், தான் புதிய ஆட்சியமைத்த போது ஹாடியை மீண்டும் அதே பதவியில் சப்ரி நிலைநிறுத்தியது மக்களை மேலும் கோபத்திற்குள்ளாக்கியது.

அதே போலச் சரவாக்கின் முற்போக்கு ஜனநாயகக் கட்சித் தலைவர் திங் கிங் சிங்ஙைச் சீனாவுக்கான சிறப்புத் தூதராகவும் ஐக்கிய மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ரிச்சர்ட் ரியோட்டை கிழக்காசியாவுக்கான சிறப்புத் தூதராகவும் மஹியாடின் செய்த நியமனங்களைச் சப்ரி தொடர்ந்து நிலைப்படுத்தினார்.

அது மட்டுமின்றி ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் தெற்கு ஆசியாவுக்கான சிறப்புத் தூதராக இரு மாதங்களுக்கு முன் சப்ரி அவரை நியமித்தார். இந்தப் பதவியில் அமர்வதற்கு விக்னேஸ்வரனுக்கு என்ன தகுதி உள்ளது என ஜெலுத்தோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். நேதாஜி ராயர் அவையில் கேள்வி எழுப்பியதும் நியாயமான ஒன்றுதான்.

ஏறக்குறைய அதே காலக்கட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் அஸ்லினாவை சட்டம் மற்றும் மனித உரிமைக்கான சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்தார். அப்படியென்றால் தனது சட்டத்துறை அமைச்சர் மீது சப்ரிக்கு நம்பிக்கை இல்லை போலும் என எதிர் கட்சியினர் கிண்டலடிப்பதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது.

‘யார் என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்லை’ எனும் நிலைப்பாட்டில் கெடா மாநில அம்னோ தலைவர் ஜமில் கிர் பஹ்ரோமை சமய விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகராகக் கடந்த மாதம் சப்ரி நியமித்தார். ஏற்கெனவே பாஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் சமய விவகாரங்களுக்கான அமைச்சராகவும் துணையமைச்சாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போலச் சுகாதார அமைச்சருக்கு அப்பாற்பட்டுச் சிறப்பு சுகாதார ஆலோசகர் ஒருவர் நியமனம் பெறவிருப்பதாக வெளியாகியுள்ள செய்தியினால் நாட்டின் மீது அக்கறையுள்ள மக்கள் மேலும் கொதிப்படைந்துள்ளனர்.

இந்த நியமனம் யாரைச் சமாதானப்படுத்துவதற்குச் செய்யப்படுகிறது, என்ற வினாவுக்கு, அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற பி.ரம்லியின் கருப்பு வெள்ளை திரைப்படம்தான் நினைவுக்கு வருகிறது.