மஇகா-வின் எதிர்காலம், உரிமை போராட்டத்தில்தான் உள்ளது!

இராகவன் கருப்பையா – ம.இ.கா.விற்கு தற்போது இருக்கும் ஒரு முழு அமைச்சர் பதவியோடு துணையமைச்சர் நியமனம் ஒன்றும் கிடைக்கப்போகிறது என்று எண்ணி ஆவலோடு காத்திருந்த அதன் உறுப்பினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வார இறுதியில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுப் பேரவையில் கலந்து கொண்ட பிரதமர் சப்ரி அந்த நியமனத்தை அறிவிப்பார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக அவர் எதுவுமே சொல்லவில்லை.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி செய்த காலத்தில் 4 முழு அமைச்சர்களும் 1 துணையமைச்சரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் பாரிசான் அரசாங்கத்தில் இரு வெவ்வேறு காலக்கட்டங்களில் ம.இ.கா.வைப் பிரதிநிதித்து 2 முழு அமைச்சர்களும் இதர சமயங்களில் குறைந்த பட்சம் 2 துணையமைச்சர்களும் பணியில் இருந்தனர்.

இருந்த போதிலும் இவர்கள் எல்லாருமே உண்மையில் தார்மீக ரீதியில் நம் சமுதாயத்தைப் பிரதிநிதித்தார்களா என்பது வேறு விசயம்.

நிலைமை இவ்வாறு இருக்கக் கடந்த ஆண்டு முற்பகுதியில் பக்காத்தான் ஆட்சி கவிழ்க்கப்பட்டுப் புறவழி அரசாங்கம் அமைந்த போது ம.இ.கா.விற்கு ஒரு முழு அமைச்சர் பதவி மட்டுமே கிடைத்தது. அக்கட்சிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்திருந்தாலும் நிலைமையில் மாற்றம் இருந்திருக்காது.

ஏனெனில் மலாய்க்காரர்கள் மட்டும்தான்  நாட்டை நிர்வாகம் செய்ய வேண்டும் எனும் இன அடிப்படையிலான நிபந்தனையின் பேரிலேயே பாஸ் கட்சி கூட்டணியில் இணைந்தது.

அதே போன்ற நிலைப்பாட்டைத்தான் பெர்சத்து கட்சியும் இன்று வரையில் கொண்டிருக்கிறது. மலாய்க்காரர் அல்லாதாரைப் புறந்தள்ளிக் கருத்துகள் வெளியிடுவதில் அவர்களும் சளைத்தவர்கள் அல்ல.

இப்படிப்பட்ட சூழலில் மொத்தம் 69 பேரைக்கொண்ட அமைச்சரவையில் இன்னொரு துணையமைச்சரை நியமனம் செய்வது அரசாங்கத்திற்குக் கடினமான காரியம் ஒன்றுமில்லை. ஆனால் பாஸ் கட்சியும் பெர்சத்துவும் விரும்பாத ஒரு செயலை அவ்வளவு சுலபத்தில் சப்ரி செய்துவிட முடியாது என்பதுதான் உண்மை.

ஏனெனில் ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொண்டிருக்கும் ம.இ.கா.வின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து அவ்விரு கட்சிகளின் கோபத்திற்கு ஆளாகச் சப்ரி நிச்சயம் விரும்பமாட்டார்.

எனவே ம.இ.கா. இதுபோன்ற எதிர்பார்ப்புகளை உடனே நிறுத்திக் கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டும்.

மலாக்காவின் காடெக் சட்டமன்றத் தொகுதியில் கிடைத்த வெற்றியில் களிப்படைந்த அக்கட்சி, இந்தியர்கள்  ஆதரவு தன் வசம் திரும்பிவிட்டது எனும் மாயையில் இருந்து முதலில் விடுபட வேண்டும்.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிட்டத்தட்ட ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆதரவையும் இழந்துவிட்ட ம.இ.கா. பெருமளவிலான உருமாற்றம் காணவேண்டியுள்ளது. அப்போதுதான் ஓரளவாவது இந்தியர்களின் ஆதரவை ஈர்க்க முடியும்.

கடந்த காலங்களைப் போலத் தொடர்ந்து வாய்ப்பேச்சு வீரர்களாகவே காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தால் பழைய ஆதரவு திரும்பிவிடாது. நீண்ட நாள்களாக அதிக அளவில் புண்பட்டுள்ள நம் சமூகத்தினர் தற்போது விழிப்படைந்துள்ள நிலையில் ஆக்ககரமான செயலாக்கத்தையே எதிர்பார்க்கின்றனர்.

ஆக இத்தகைய சூழலை முதலில் நிவர்த்தி செய்து பழைய மாதிரி குறைந்த பட்சம் 4 நாடாளுமன்றத் தொகுதிகளையாவது கைவசம் வைத்திருந்தால்தான் எந்தக் கூட்டணியிடமும் துணிச்சலாகப் பேரம் பேசிக் கூடுதலான பதவிகளைப் பெற முடியும். ஆனால் அது ஒரு இயலாத காரியமாகதான் இருக்கும்.

அம்னோ மட்டுமின்றிப் பாஸ் மற்றும் பெர்சத்து போன்ற தீவிர இனவாதப் போக்குடைய கட்சிகளிடம் ‘வெறும் கையில் முழம் போட முடியாது’ என்பதை நன்கு உணர்ந்திருப்பது அவசியமாகும்.

மஇகா-வின் இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு காரணம், இனவாதற்ற அரசியலின் வழிதான் இனவாத கொண்ட அரசியலுக்கு முடிவு கட்ட இயலும் என்ற எதிர்ப்பார்ப்பாகும். ஆனால், ஆழமான இனவாத அரசியல்தான் மலாய்காரர்களை ஆட்டிபடைக்கிறது.

மஇகா இனிவரும் காலங்களில், தேசிய இனவாத அரசியலில் ஒரு தலையாட்டும் பொம்மையாக மட்டுமே செயல் பட இயலும். மாற்றம் வேண்டும் என்றால் அது இனவாத அரசியலில் இருந்து விடுபட்டு உரிமை சார்ந்த அரசியல் வழியில் போராட வேண்டும்.