அரசியல் கட்சி தொடங்குவது, அடிப்படை உரிமை!

இராகவன் கருப்பையா – முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தொடங்கியுள்ள ‘மூடா’ எனும் அரசியல் கட்சியின் பதிவு தொடர்பான இழுபறி ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், மக்களின் ஜனநாயக உரிமை படும் அவஸ்தையும் அம்பலமாகியுள்ளது.

மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி எனும் பொருள் கொண்ட அந்தக் கட்சியை கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் சைட் சாடிக் தோற்றுவித்தார்.

உள்துறையமைச்சு அக்கட்சியைப் பதிவு செய்யாமல் நீண்ட நாள்களாக இழுக்கவைத்ததால் வேறு வழியின்றி நீதிமன்ற உதவியை நாடினார் சைட் சாடிக். பதிவில் ஏன் தாமதம் என ஓராண்டுக்கும் மேலாகப் பல தடவை அரசாங்கத்தை அவர் அதிகாரப்பூர்வமாக வினவிய போதிலும் எவ்வித பதிலும் அவருக்குக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இரண்டே வாரங்களில் அக்கட்சி பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் செலவுத் தொகையான 10,000 ரிங்கிட்டும்  சைட் சாடிக்கிற்கு வழங்க வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். முறையான காரணம் ஏதுவுமின்றி அரசாங்கம் அதன் பதிவை மறுக்கமுடியாது.

இருந்த போதிலும் அதிகாரத்தில் இருக்கும் குறிப்பிட்ட சிலரின் விருப்பு வெறுப்பின் பேரில் இத்தகைய இழுக்கவைப்பு நடைபெறுவது வருந்தத்தக்க ஒன்றாகும். இத்தகையரின்  சுயநலப் போக்கினால் கடைசியில் அரசாங்கத்தின் பணமும் நீதிமன்றங்களின் பொன்னான நேரமும்தான் விரயமாகிறது.

முன்னாள் பிரதமர் மகாதீர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தோற்றுவித்த ‘பெஜுவாங்’  கட்சிக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டது என்பதை நாம் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களும் நீதிமன்றம் வரையில் போய் வந்த பிறகுதான் இவ்வாண்டு ஜூலை மாதத்தில் அக்கட்சி பதிவு பெற்றது.

பொது மக்களின் சிந்தனை ஆற்றலையும் விழிப்புணர்வு நிலையையும் தாழ்த்தி மதிப்பிட்டால் எப்படிப்பட்ட எதிர்மறையான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

இருந்த போதிலும் அதிகாரம் கையில் இருக்கின்ற மமதையில் குறிப்பிட்ட சிலர் தன்னிச்சையாகச் செய்யும் இவ்வாரான முடிவுகளினால் பல்வேறுத் தரப்பினர் தேவையில்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டில் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த போது பக்காத்தான் ஹராப்பான் தனதுக் கூட்டணியின் பொதுவான சின்னத்தைப் பதிவு செய்ய அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்தது.

ஆனால் ஏதேதோக் காரணங்களைக் காட்டி வெறுமனே சாக்குப் போக்குச் சொல்லி கடைசி வரையிலும் அந்த ஜனநாயக உரிமையை அப்போதைய பாரிசான் அரசாங்கம் மறுத்தது.

வேறு வழியின்றி பக்காத்தான் கூட்டணியிலிருந்த எல்லாக் கட்சிகளும் பி.கே.ஆர். கட்சியின் சின்னத்தை பயன்படுத்தி தேர்தலில் களமிறங்கின. இதனால் அதிக அளவிலான அனுதாப வாக்குகளும் பட்காத்தானின் பக்கம் சரிந்தது குறிப்பிடத்தக்கது.

ஏதோ நிறையத் திறமையாக முடிவு செய்கிற நினைப்பில் அரசாங்கம் செய்த இதுபோன்றத் தவறுகளினால் ஏற்பட்ட பாதகமான விளைவுகள் பாரிசானின் வரலாறுக் காணாதத் தோல்விக்கு இட்டுச் சென்றது நாம் எல்லாருமே அறிந்த ஒன்றுதான்.

ஆக நடப்பு அரசாங்கம் அதனை ஒரு பாடமாக இன்னமும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அடுத்தப் பொதுத் தேர்தலில் ‘மூடா’  போன்ற இளம் கட்சி கூட பயனடையும் என்பது உறுதி.

இன்னமும் 30 வயது கூட நிறைவு பெறாத சைட் சாடிக் பல்லினங்களைக் கொண்ட இளைஞர்களைத் தனது  கட்சிக்கு உறுப்பினர்களாகத் திரட்டி வருகிறார்.

வாக்களிப்புக்கான வயது வரம்பு 18ஆகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் இளையோரின் ஆதிக்கம் ஓங்கியிருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.

எனவே அரசாங்கத்தின் போக்கிற்கு எதிரான அவர்களுடைய சிந்தனை மாற்றங்களும் அதிக அளவில் நிகழும் என்றும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்நாட்டில் பல சமயங்களில் ஆளும் கட்சிகள் தங்களுக்கு ஏற்றவாறு ஜனநாயகத்தை வளைத்து மக்களின் உரிமைகள் எல்லாம் தாங்கள் வைத்ததுதான் சட்டம் எனும் போக்கில் செயல்படும் வேளையில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள்தான் எல்லாருக்கும் அரணாக உள்ளது.

அண்மைய காலமாக அதிகாரமாக்கப் பல அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்களின் சில முடிவுகளில் மக்கள் அவ்வளவாகத் திருப்தியடையவில்லை என்ற போதிலும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதில் நீதிமன்றங்கள் செவ்வனே செயலாற்றுகின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க வேண்டும், ஜனநாயகத்தின் அடையாளமாக நீதிமன்றங்கள் விளங்க வேண்டும்.