விடியல் அரசின் அகதிகள்!

சென்னையின் பிரதான பகுதியான வில்லிவாக்கம் இரயில் நிலையம் அருகில் கடந்த ஜி.கே.எம். காலனி கொளத்தூர் பூம்புகார் நகர் வினாயகபுரம் உள்ளிட்ட ஆண்ட ஆளுகின்ற கட்சிகளின் அரசியல் புள்ளிகளால் உருவாக்கப்பட்ட பல்வேறு நகர்களுக்குப் பிரதான நுழைவாயில் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கொளத்தூர் அவ்வை நகரில் (GKM colony 35 th street) வசித்து வரும் மக்களின் குடியிருப்புகளை ஒட்டி இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. அப்போது மக்களின் கடுமையான எதிர்ப்பால் அந்தத் திட்டம் அதிமுக அரசால் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் கடந்த 15 ஆண்டுகளாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் திரு மு.க ஸ்டாலின் அவர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கொளத்தூர் இரயில்வே மேம்பாலத் திட்டம் குடியிருப்புகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கொளத்தூர் இரயில்வே பாலம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. அரசு முதலில் இந்த அவ்வை நகர் பகுதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சாலையின் மையத்தில் இருந்து இருபுறமும் 3 மீட்டர் அளவுக்கு வீடுகள் இடிக்கப்படும் என்று அறிவித்தது. இடிக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. பின்பு அடுத்த மாதம் வந்து இருபுறமும் 5 மீட்டர் தேவை என்று கூறியது. அதற்கு அடுத்த மாதம் 11 மீட்டர் தேவை என்று கூறியது. அதற்கும் அந்த மக்கள் சரி என்று ஒத்துக் கொண்டனர். தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒருபோதும் இடையூறு வந்து விடக்கூடாது என்று மக்கள் தங்கள் வீடுகளில் பாதியளவு போனால் கூட பரவாயில்லை, அரசு தரும் இழப்பீடு தொகையை வைத்து வீடுகளைச் சரிசெய்து விடலாம் என்று அமைதி காத்தனர். திமுக அரசின் அரசு அதிகாரிகளும் இதை வாக்குறுதியாக வாய்மொழியில் தெரிவித்தனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் பிரதிநிதிகள் கொளத்தூர் தொகுதி, முதல்வர் தொகுதி என்பதால் எந்த ஒரு தவறான செயலும் இங்கு நடக்காது என்று உறுதியளித்தனர். இதனை நம்பிய மக்கள் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நீதி மன்றத்திற்குச் செல்லாமல் முதல்வரின் தனிப்பிரிவு, வட்டாட்சியர், ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த மனு பரிசீலிக்கபட்டதா? இல்லையா? என்பது தெரிவதற்குள் கடந்த 11.12.2021 (சனிக்கிழமை) அன்று வீடுகளுக்கு முன்னால் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு வந்து வீடுகளை இடிக்க ஆரம்பித்துவிட்டனர். அரசின் இத்தகைய நடவடிக்கை ஒரு நாட்டின் போர்க்கைதிகள் இடத்திலே கூட இது போன்று நடந்து கொண்டதாக மன்னராட்சியின் தரவுகள் கூட இல்லை. கொளத்தூர் அவ்வை நகர் பகுதி மக்களுக்குச், சென்னை மாநகராட்சி வழங்கிய முதல் நோட்டீஸில் கொளத்தூர் தொகுதி மக்களை பெருமாள் தாங்கல் என்று குறிப்பிட்டு மேம்பால பணிக்காக இடம் தேவை என்றும் இடத்தின் புல எண் 37 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2-வது நோட்டீஸில் இதையே குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால், சென்னை பெருநகர மாநகராட்சியால் வழங்கப்பட்ட 3-வது நோட்டீசில் மக்கள் குடியிருக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றும் புல எண் 37 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு Assignment Patta அப்போதைய செங்கல்பட்டு மாவட்டம், சைதாப்பேட்டை தாலுகாவின் தாசில்தார் அவர்களால் தமிழக அரசின் உத்தரவுபடி 1979, 1982, 1986  ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய நில வருவாய் சட்டத்தின் படி நீர் நிலைப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மனையைப் பதிவு செய்ய முடியாது. ஆனால் அவை நகர் குடியிருப்புதாரர்கள் அனைவரும் தங்களது குடியிருப்பு மற்றும் நிலத்தை விற்பனை மற்றும் தானசெட்டில்மென்ட் ஆகியவை பத்திரப்பதிவு துறையால் முறையாக பதிவு செய்துள்ளனர் அப்படி உள்ள நிலையில் திடீரென்று கொளத்தூர் அவ்வை நகர் மக்கள் குடியிருப்பு நீர்நிலை ஆக்கிரமிப்பு எப்படி ஆனது என்று புரியவில்லை.

அதுமட்டுமல்லாமல், சென்னை மாநகராட்சி குறிப்பிட்டபடி புல எண் 37 அவ்வை நகர் குடியிருப்பு பகுதியின் புல எண் இல்லை. கொளத்தூர் அவ்வை  நகர் பகுதிகளில் குறிப்பிட்டுள்ள 112 pt சர்வே நம்பர். ஆகவே, ஆளும் திமுக அரசாங்கம் மிகப்பெரிய அயோக்கியத்தனத்தை முதல் அமைச்சரின் சொந்தத் தொகுதி மக்களிடம் காட்டியுள்ளது. இந்தத் திருட்டு வேலையை ஏன் அரசு செய்கிறது என்றால் நீதிமன்றத்தை ஏமாற்றுவதற்கு. ஏனெனில், ஒருவேளை கொளத்தூர் அவ்வை நகர் மக்கள்  நீதி மன்றத்தை நாடினால் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்று நீர் நிலை ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் வழங்கியது. சென்னை பெருநகர மாநகராட்சி யிலும் இந்த திட்டத்திற்காக வேலை செய்யும் அதிகாரிகளை நேரிலும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இந்த போராட்டத்தை குறித்து கேட்டபோது இதற்கும் சென்னை மாநகராட்சிக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் வருவாய் துறையிடம் வட்டாட்சியரிடம் கேளுங்கள் என்றும் கூறிவிட்டனர். அந்த இடம் குறித்து சரியான விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேம்பால திட்டம் குறித்து எந்தவித விளக்கமும் அல்லது கருத்து கேட்பு கூட்டம் நடைபெறவில்லை.

மக்களிடம் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி காவல் துறையின் உதவியோடு குடியிருப்புகளை இடிக்கின்றனர். அங்கு வாழும் மக்கள் மிகப்பெரிய பின்புலத்தையும் கொண்டவர்களோ அல்லது கோடீஸ்வரர்களோ இல்லை உடல் உழைப்பை மட்டுமே நம்பி அவர்களின் வாழ்நாளில் சம்பாதித்த அனைத்து பொருளாதாரத்தையும் செலவழித்து வீடுகளைக் கட்டி உள்ளனர். கடந்த மூன்று தலைமுறைகளாக வாழ்ந்த வாழ்விடத்தை ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கி விட்டால் அவர்கள் எங்கே செல்வார்கள்? அந்த இடம் அரசுக்கு அவசியம் தேவை என்றால் அந்த மக்களுக்கு மாற்று இடத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட பிறகுதான் இந்தக் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்பது சட்டம். சட்டத்தை மதிக்காமல் அதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக அராஜகம் செய்கிறது ஆளும் திமுக அரசு. ஆக்கிரமிப்பில் குடியிருப்பது எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றனர் என்பது ஏதோ புரியாத புதிராகவே உள்ளது. மிகப்பெரிய வணிக கட்டிடங்கள், கல்லூரிகள், திரையரங்குகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள் வழிபாட்டு தலங்கள் ஏன் இவையெல்லாம் ஆக்கிரமிப்பாக தெரிவதில்லை? ஒரு நீதிமன்றம் கூட இவற்றையெல்லாம் இடியுங்கள் என்று ஆணை பிறப்பிக்கவில்லை?

ஒடுக்கப்பட்ட சாதாரண எளிய மக்களின் குடியிருப்புகளை எடுப்பதில் மட்டும் தான் நீதிமன்றமும் அரசும் ஆர்வம் காட்டுகிறது. தமிழக அரசு முகப்பேர் ஏரி திட்டம், அயப்பாக்கம் திட்டம், அண்ணாநகர் திட்டம் போன்ற தமிழகம் முழுக்க ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்ப அனுமதி அளிக்கிறது. இவையெல்லாம் நீர்நிலைகள் இல்லையா அல்லது பணம் மற்றும்  அதிகாரம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்ற கேள்வியுடன் அச்சமும் ஏற்படுகிறது. மக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால் நாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் அல்லது நமது அரசிடம் புகார் அளிப்போம் ஆனால் இவை இரண்டுமே மக்களுக்கு எதிராக செயல்படும் போது மக்கள் என்ன செய்யவேண்டும் என்பது புரியவில்லை? ஏற்கனவே சென்னை முழுக்க வாழ்ந்த சேரி மக்களைக் குப்பைகளைப் போல பெரும்பாக்கம், செம்மஞ்சேரி போன்ற பெரும் ஏரி பகுதிகளில் குடியேற்றம் செய்துள்ளது தமிழக அரசு. வெறும் 1 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இடத்தில் 27 ஆயிரம் குடும்பங்களைக் குடியேற்றி உள்ளது. அதாவது, சுமார் 1.5 இலட்சம் மக்களின் வசிப்பிடமாக உள்ளது. பெரும்பாக்கம், செம்மஞ்சேரி என்பது பள்ளிக்கரணை வேளச்சேரி போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பகுதியாக  உள்ளது.

இந்தப் பகுதிகளில் குடியிருப்புகளை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான மக்களைச் சிறு இடத்தில் குடியமர்த்தி உள்ளது. அது மட்டுமல்லாமல், அங்கே வாழும் மக்களுக்குப் போதிய போக்குவரத்து வசதிகளோ, வேலைவாய்ப்பு, கல்வி கூடங்கள் பல்நோக்கு மருத்துவமனை, போன்ற வசதிகளை ஏற்படுத்தாமல் குப்பைகளைப் போல அந்த மக்களைக் கொட்டி உள்ளனர். எந்த அடிப்படை வசதியும் அங்கு இல்லை 8 மாடி குடியிருப்பில் மின்தூக்கி சரியாக வேலை செய்யாததால் நோயாளிகளும் முதியோர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகள் ஆரம்பக் கல்வி கற்பதற்குக் கூட பல கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. குடிநீர் தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படாததால், குடிநீர் தொட்டியில் பாம்புகளும் பல்லிகளும் செத்து விழுந்து இருந்தாலும் அந்தக் குடிநீரை மட்டும்தான் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. வயது முதிர்ந்த நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக 40 கிலோமீட்டர் கடந்து இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குதான் வரவேண்டும் என்பதால் போக்குவரத்து செலவு மற்றும் அன்று வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை உள்ளதால் முதியவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கும் சூழ்நிலை உள்ளது. அப்படி  இறந்தாலும் அவர்களைப் புதைக்ககூட சரியான கல்லறை வசதி இல்லாததால் இறந்த உடலை மீண்டும் சென்னைக்குக் கொண்டு வந்து புதைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்களுக்குப் போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால் அவர்கள் வேலைவாய்ப்பு தேடி 40 கிலோமீட்டர் பயணித்து மீண்டும் சென்னைக்குத் தான் வர வேண்டி உள்ளது. அவர்கள் சம்பளம் சராசரியாக 8 ஆயிரம் ரூபாயில், ஒரு நாளைக்கு 120 ரூபாய் பயணச் செலவாக போய்விடுகிறது. மீதமுள்ள சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த போதுமான சூழ்நிலை இல்லை. அதுமட்டுமல்லாமல், தமிழக அரசு இலவசமாக வீடு தருவதாக சொல்லிதான் அந்த மக்களை குடியமர்த்தியது. ஆனால், தற்போது மாத வாடகையாக 750 ரூபாய் பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படுகிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ளதால் சட்டவிரோதச் செயல்கள் ஏற்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகம் ஏற்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையில் வெள்ளம் தனது குடியிருப்பு பகுதிகள் எவை என வெள்ளநீர் சூழ்ந்து உலகிற்கும் ஆட்சியாளர்களுக்கும் அடையாளம் காட்டியுள்ளது. ஆனால், அதிகார வர்க்கம் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களை உன்னால் என்னால் ஆண்ட அதிகார வர்க்கத்தினரே காப்பாற்ற மௌனம் சாதிப்பதே மாண்புமிகு நீதிமன்றங்கள் உணர்ந்து அல்லவா வன்முறை வெறியாட்டங்கள் நடக்கிறது. அதுமட்டுமின்றி, பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குழந்தைகள் போதிய அறிவு இன்றி சிறுவயதிலேயே திருமணம் செய்வதால் குழந்தை திருமணம் அதிகமாகிறது. 27 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கும் இடத்தில், ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மக்கள் வெளியேற வழி ஏதுமில்லை.

அதுமட்டுமல்லாமல், மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தத்தளிக்கின்றனர். ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆற்றோரத்தில் குடியிருப்பது ஆபத்து என்று கூறி மக்களை வெளியேற்றி அரசு குடியமர்த்தியது ஏரியில். இதுதான் உங்கள் நீர்நிலை பாதுகாப்பா? இதற்கு நீதிமன்றமும் துணை போகின்றது.

—————————————————————————————————————————- 

எழுத்து :- இந்தியக் குடியரசு கட்சியின், தமிழ்நாடு மாநிலத் தலைவர் இரா.அன்புவேந்தன்