கொல்லைப்புற அரசாங்கம் இரு தடவையும் படும் தோல்வி!

இராகவன் கருப்பையா- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியிடமிருந்து ஆட்சியை அபகரித்த இந்த 22 மாத காலத்தில் தற்போதைய பெரிக்காத்தான் அரசாங்கம் இரு பெரும் சோதனைகளில் படும் தோல்விகள் நடப்பு அரசியலின்  திக்கற்ற நிலையை காட்டுகிறது.

முன்னாள் பிரதமர் மஹியாடின் தலைமையிலான நிர்வாகம் கோறனி நச்சில் பெருந்தொற்றைக் கையாள்வதிலும் சப்ரி தலைமையிலான நிர்வாகம் வெள்ளப் பேரிடரைக் கையாள்வதிலும்  படுதோல்வியைத் தழுவியுள்ளன.

தற்போதைய அரசாங்கம் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இல்லையென்ற போதிலும் நல்லாட்சிக்காக ஏங்கி தவிக்கும் மக்களுக்கு இன்னமும் விமோசனம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நாட்டை சிறப்பாக நிர்வாகம் செய்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, அதனை கொண்டாடுவதற்கான 100 நாள் நிறைவு விழாவின் போது சொந்தமாகவே மார்தட்டிக் கொண்டு தங்களைப் பாராட்டிக் கொண்ட தற்போதைய அரசாங்கத்தின் இலட்சணம்  இந்த வெள்ளப் பேரிடரில் தெரிந்துவிட்டது.

நாட்டை உலுக்கிய இந்த வரலாறுக் காணாத சோகத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் நிறைய அரசியல்வாதிகள் உல்லாச  விடுமுறையிலிருந்தனர், இன்னமும் இருக்கின்றனர்.

உள்நாட்டிலிருந்த அரசியல்வாதிகளோ ஆளுக்கு ஆள் மற்றவர்களின் மீது பழியைப் போட்டு காலத்தைக் கடத்தியது மக்களுக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகள்தான் அப்படியென்றால் பொது மக்களின் நலன் கருதி சுயமாக முடிவு செய்து உடனடியாகக் களத்தில் இறங்க வேண்டிய சில அரசாங்க இலாகாக்களின் நிலைப்பாடும் அதுபோலவே இருந்தது மிகவும் ஏமாற்றமளிக்கக் கூடிய ஒன்றுதான்.

உதாரணத்திற்கு மருத்துவம். சுங்ஙை பூலோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சூரியகலா பாலச்சந்திரன் சக  மருத்துவர்கள் சிலரை ஒன்று திரட்டி சொந்த செலவில் அவசரத்திற்குத்  தேவையான மருந்துகளை மருந்தகங்களில் கொள்முதல் செய்து ஸ்ரீ மூடா வளாகத்தில் தற்காலிக மருத்துவ முகாம் ஒன்றை அமைத்தார். இரண்டு நாள்கள் கழித்துத்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது.

தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில் நிவாரண நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்களைக் காண்பதற்கு, புகைப்படக்காரர்கள் புடைசூழச் சொகுசுக் வாகனங்களில் மிடுக்காக வந்திருங்கும் சில அரசியல்வாதிகளுக்கு  உற்சாக வரவேற்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி’ எனும் நிலைப்பாட்டை மக்கள் தற்போதுக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

‘மழையும் வெள்ளமும் இயற்கைப் பேரிடர்கள், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதனால் எங்களை குறைகூறக் கூடாடு’ என பிரதமர் துறைத் துணையமைச்சரும் தேசியப் பேரிடர் நிர்வாக மன்றத்தின் தலைவருமான அப்துல் லத்திஃப் வாதிட்டது மக்களுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒன்றும் மிகப் பெரியப் பேரிடர் இல்லை, அதனால்தான் தனது ஆணையம் உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடவில்லை என அவர் கூறிய கருத்து முற்றிலும் அறிவிலித்தனமான ஒன்று எனச் சிறு பிள்ளை கூட சிரிக்கும் அளவுக்கு உள்ளது. இப்பேரிடரில் பரிதாபமாக மரணமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 50ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘டிவிட்டர்’ எனப்படும் கீச்சகத்தில் உள்ள, அரசாங்கம் மீதான பொது மக்களின் அதிருப்திக் கருத்துகளை நீக்குமாறு மலேசியத் தொலைத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் ‘டிவிட்டர்’ நிறுவனத்தை கேட்டுக் கொண்டது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

அது மட்டுமின்றி இவ்விவகாரம் மக்களவையில் விவாதிக்கப்படும் அளவுக்கு அவசரப்பிரச்சினை ஒன்றும் இல்லை எனவும் விவாதங்களுக்கான பட்டியலில் அது இடம்பெறவில்லை என்றும் காரணம்  காட்டி  நாடாளுமன்ற சபாநாயகர் ஆர்ட் ஹருன் எதிர்க்கட்சி தலைவர்களின் கோரிக்கையை நிராகரித்தார்.

ஆக இப்பேரிடரைக் கையாள்வதில் அரசாங்கம் மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ள போதிலும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ள சப்ரி, தனது ஆட்சிக்கு இப்போதைக்கு ஆபத்து வராது எனும் துணிச்சலில் சற்று சாவகாசமாக வலம் வருகிறார். மஹியாடின் ஆட்சியின் போதும் கிட்டதட்ட இதே நிலைமையைத்தான் மக்கள் எதிர்நோக்கினார்கள் என்பது வெள்ளிடை மலை.

மருத்துவமனைகளில் படுக்கைகள் போதாமலும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளில் இடம் இல்லாமலும் அவசரப் பிரிவுகளில் காத்திருக்கும் இடங்களிலேயே ஆயிரக்கணக்கான பொது மக்கள் மடிந்து கொண்டிருந்த போதிலும் அரசியல்வாதிகளின் கவனமெல்லாம் சிதறிக் கிடந்தது.

விடிந்தால் தனது பிரதமர் பதவி நிலைத்திருக்குமா அல்லது பறிபோய்விடுமா எனும் அன்றாட அச்சத்தில் மஹியாடின் ஆட்சி செய்து கொண்டிருந்தார். காணாததைக் கண்டதைப் போலப் பதவிகளை அனுபவித்துக் கொண்டிருந்த அவருடைய அமைச்சர்களின் நிலைப்பாடும் அதே மாதிரிதான்.

இவ்விருப் பிரதமர்களின் அரசாங்கங்களும் தோல்வியடைந்ததற்கு மற்றொரு காரணம் உப்பிக்கிடக்கும் அமைச்சரவைதான் என்றால் அது மிகையில்லை.

குறைந்தது 69 அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு என்று  அவர்களில் பெரும்பாலோருக்கு புரியாத நிலையில் மக்களின் பரிதாப நிலைக்கு யார்தான் பதில் சொல்வது?