2021-ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் நாம் உள்ளோம், மலேசியாவில் கடந்த ஓராண்டில் ஏற்பட்ட அரசியல் மற்றும் சமூகப்-பொருளாதாரக் குழப்பங்கள் சிலவற்றைப் பற்றி ஒரு கண்ணோட்டமிடுவோம் வாருங்கள்.
1. தொடரும் கோவிட்-19 தொற்றுநோய்
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவிய கோவிட்-19 பாதிப்பில் இருந்து மலேசியாவும் விடுபடவில்லை. 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், மலேசியாவில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்றுநோய், 2021 முழுவதும் தொடர்ந்தது. இன்றுவரை, மலேசியாவில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 நோய்த்தொற்றுகள் குவிந்துள்ளன. அதில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகள் குணமாகியுள்ள நிலையில், 31,290 நோயாளிகளின் உயிரை அது எடுத்தது. பதிவு செய்யப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கை மற்றும் கோவிட்-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இது இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு அடுத்தபடியாக, மலேசியாவை மூன்றாவது இடத்தில் வைக்கிறது.
தினசரி கோவிட்-19 தொற்று மற்றும் இறப்புகள் எண்ணிக்கை அதிகரித்த பின்னர், மே 2021-இல் நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி) மீண்டும் அமல்படுத்தப்பட்டது, பின்னர் ஜூன் 1, 2021 முதல் “முழு கதவடைப்புக்கு” அது வழிவகுத்தது. இருப்பினும், அதன் செயலாக்கம் “பாதியளவு மட்டுமே” கடைபிடிக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. பெரியவர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி குறிப்பிட்ட விகிதங்களை அடைந்த பிறகு, செப்டம்பர் 2021 முதல் பிகேபி படிப்படியாக தளர்த்தப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோயின் பரவல், மலேசியாவின் பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. ‘அவசரநிலை’ பிரகடனம்
முஹைதின் யாசின் பிரதமராக இருந்தபோது, கோவி-19 தொற்றுநோயைக் கையாள்வதற்காக, 12 ஜனவரி 2021 அன்று அவசரநிலை அறிவிக்கப்பட்டது. ஆனால், முஹைதின் யாசின் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் அவரது அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தாமதப்படுத்துவதற்காகவும் மட்டுமே இந்த அவசரநிலை அறிவிப்பு என்பது அனைவருக்கும் தெரியும். ஆகஸ்ட் 1, 2021 அன்று அவசரநிலை ஒரு முடிவுக்கு வந்தது.
3. முஹைதீனுக்குப் பதிலாக இஸ்மாயில் சப்ரி
மத்திய அரசில் பல்வேறு தரப்பிலிருந்து வந்த அரசியல் அழுத்தங்களும் அதிகாரப் போட்டிகளும் இறுதியாக முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்தை வீழ்ச்சியடைய வைத்தது. பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 16, 2021 அன்று முஹைதீன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். தேசிய முன்னணி, சரவாக் கூட்டணி கட்சிகள் (ஜிபிஎஸ்), சபா பெர்சத்து கட்சி மற்றும் தேசியக் கூட்டணி ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்த, இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் 9-வது பிரதமரானார். அவருடைய அமைச்சரவை உறுப்பினர்கள் முந்தைய அமைச்சரவையில் இருந்து அதிக வித்தியாசப்படவில்லை. செப்டம்பர் 13-ம் தேதியன்று, இஸ்மாயில் சப்ரி தலைமையிலான மத்திய அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே, 31 ஜூலை 2022-க்கு முன்னதாகப் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
4. ‘லாவான்’ போராட்டம்
முஹைதீன் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு அவசரநிலையைப் பிரகடனம் செய்ததற்குப் பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணாத முஹைதீன் தலைமையிலான அரசுக்கு எதிராக, பல மக்கள் அமைப்புகளையும் அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய ‘மக்கள் ஒற்றுமை செயலகம்’ பல்வேறு போராட்டங்களை ஏற்பாடு செய்தது. ஜூலை 31-ம் தேதி, அதிகாரிகளின் மிரட்டல் இருந்தபோதிலும் கிட்டத்தட்ட 2,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். முஹைதின் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும், முழு நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடங்க வேண்டும் மற்றும் பொதுமக்களின் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தானியங்கி தடை விதிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
5. ஒப்பந்த மருத்துவர்களின் ‘ஹர்த்தால்’
ஜூலை 26, 2021 அன்று, சுகாதார அமைச்சின் உயர்மட்டத்தில் இருந்து பல்வேறு அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட போதிலும், நாடு தழுவிய நிலையில், ‘ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால்’ போராட்டத்தில் பல மருத்துவர்கள் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஒப்பந்த அடிப்படையில் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்குச் சமமான ஊதியம் மற்றும் சலுகைகளுடன் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூலை 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் “கோட் பிளாக்” என்றத் தலைப்பில் ஆன்லைன் எதிர்ப்புப் பிரச்சாரம் ஒன்றும் ஒப்பந்த மருத்துவர்களின் பணிப் பாதுகாப்பிற்கான கோரிக்கைகளுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
6. மலாக்கா மற்றும் சரவாக் மாநிலத் தேர்தல்கள்
2021-இல் இரண்டு மாநிலத் தேர்தல்கள் (பிஆர்என்) நடத்தப்பட்டன. 2018 பொதுத் தேர்தலில் வென்ற பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்), இவ்விரு மாநிலத் தேர்தல்களும் கடும் தோல்வியைக் கொடுத்தன. மலாக்கா பிஆர்என்-இல், 28 மொத்த இடங்களில், 21 இடங்களைப் பிடித்து தேசிய முன்னணி மாபெரும் வெற்றியைக் கண்டது. பிஎச் 5 இடங்களை மட்டுமே வென்ற நிலையில், மத்திய அரசின் ஒரு பகுதியான தேசிய கூட்டணி 2 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
சரவாக் மாநிலத் தேர்தலில், சரவாக் கூட்டணி கட்சி (ஜிபிஎஸ்) மாபெரும் வெற்றி பெற்றது, போட்டியிட்ட 82 இடங்களில் 76 இடங்களை அது வென்றது; சரவாக் பெர்சத்து கட்சி (பிஎஸ்பி) 4 இடங்களை வென்ற நிலையில், பிஎச் 2 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.
7. கோல லங்காட் உத்தாரா வனக் காப்பகத்தின் அரசிதழ் மற்றும் மறு-அதிகாரம்.
இவ்வாண்டு மே மாதம், கோல லங்காட் உத்தாரா வனப் பகுதியைச் சார்ந்த ஒரு பகுதியின் காப்பக அந்தஸ்தை இரத்து செய்த சிலாங்கூர் மாநில அரசு, அத்தகவலை சிலாங்கூர் மாநில சட்டப் பேரவையில், ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை, கோல லங்காட் உத்தாரா வனப் பாதுகாப்பு கூட்டணி உட்பட சிவில் சமூகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு, சிலாங்கூர் மாநில அரசு செப்டம்பர் 8, 2021 அன்று வனப் பகுதிகளை மீண்டும் காப்பக அரசிதழில் வெளியிடுவதாக அறிவித்தது.
8. வெள்ளம்
டிசம்பரில் தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால், கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. இதுவரையில் வெள்ளத்தில் சிக்கி, சுமார் 46 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நெருக்கடியைத் தாமதமாகக் கையாண்டதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காகவும் அரசாங்கம் பல விமர்சனங்களுக்கு ஆளானது.
நன்றி :- sosialis.net