இராகவன் கருப்பையா & கா. ஆறுமுகம் – நம் நாட்டில் கோறனி நச்சிலின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது இலட்சக் கணக்கானோர் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றித் தங்களுடைய வீடுகளின் முன் வெள்ளைக் கொடிகளை ஏந்தி உதவிக்குக் கையேந்தி நின்ற அவலம் நம் நினைவுகளிலிருந்து இன்னும் நீங்கவில்லை.
அவர்களில் நிறையப் பேர், குறிப்பாக நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் இன்னமும் கூட நிரந்தர வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனினும் முடங்கிக் கிடந்த துறைகளில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ள இவ்வேளையில் ‘பிடித்த வேலைக் கிடைக்காவிட்டால் கிடைத்த வேலையைப் பிடித்துக் கொள்ள வேண்டும்’ எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதே விவேகமான செயலாகும் என்பார்கள்.
எப்போதுமே உதவிக்காகப் பிறரிடம் கையேந்தி நிற்கும் சமூகம் என்ற அடையாளத்திலிருந்து நாம் விடுபடவேண்டுமேயானால் சுயமாக உழைத்து முன்னேறவேண்டும் எனும் வேட்கையையும் மனப் பக்குவத்தை நாம் கொண்டிருப்பது அவசியமாகும் என்ற வாதமும் எழும்.
அதோடு சுயமாகத் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கு முயற்சி மேற்கொள்ளவில்லை என்பார்கள். உதாரணமாக, ‘3D’ எனப்படும் கடினமான, அழுக்கான, ஆபத்தான வேலைகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள துறைகள் மட்டுமின்றி இதர பல துறைகளுக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க அரசாங்கம் செய்துள்ள முடிவானது ‘வேலையில்லாத் திண்டாட்டம்’ என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வாதிப்பார்கள்.
தோட்டத்துறை, கட்டுமானம், உற்பத்தித்துறை மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் வேலைச் செய்ய உள்நாட்டவர்கள் நாட்டம் கொள்வதில்லை என அரசாங்கத் தரவுகளும் காட்டும்.
வேலையாட்கள் பற்றாக்குறையினால் 100 ஆண்டுகாலப் பாரம்பரியத் தொழில்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று தலைநகர் லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
அதே போல உணவகத் துறைக்குச் சுமார் 15 ஆயிரம் பேர் தேவைப்படுவதாக இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியது.
கார் கழுவுவதற்குத் தொழிலாளர்கள் இல்லாததால் பெரும் நெருக்கடியான நிலையில் தாங்கள் இருப்பதாக மலேசியக் கார் கழுவும் மையங்களின் உரிமையாளர்கள் சங்கம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இந்தியர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ள உலோக மறுசுழற்சித் துறைக்கும் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆள்பலப் பற்றாக்குறையினால் அத்துறையும் தள்ளாடுவதாகத் தெரிகிறது.
சுமார் 2 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு சுற்றுலாத்துறை மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில் தங்கும் விடுதிகளில் வேலைச் செய்வதற்குத் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாகக் கெந்திங் மலை மற்றும் பினேங் மாநிலத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன.
இப்படியாக இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் இப்போது நம் நாட்டில் உள்ளன. இவை அனைத்துக்குமே வெளிநாட்டு தொழிலாளர்களையே நம்பியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இப்போது முதலாளிகள் உள்ளனர்.
எனவே இப்படிப்பட்ட சூழலில் ‘எனக்கு வேலையில்லை, நான் சிரமப்படுகிறேன்’ என்று இன்னமும் கூடப் பஞ்சப்பாட்டு பாடுவோரை யாராலும் காப்பாற்ற இயலாது என்ற வாதம்தான் எழும்.
இதில் ஒரு பெரிய சிக்கல் இருப்பதைக் காண முடிகிறதா?
மலேசியாவின் பொருளாதாரக் கொள்கையின் தாக்கம்தான் நமது தொழிலாளர்களின் வறுமைக்கான காரணமாகும்.
1970 -இல் ஒரு சராசரி தொழிலாளியின் சம்பளம் ரிம 220 ஆகும். இது 2020-இல் ரிம 1,200 உயர்ந்துள்ளது.
இதே காலக்கட்டத்தில் விலைவாசி (inflation) 533% உயர்ந்துள்ளது. அதாவது 1970-இல் நாம் 1 வெள்ளிக்கு வாங்கும் பொருட்களைத் தற்போது வாங்குவதற்கு 5 வெள்ளி 33 காசு வேண்டும்.
ஆக ரிம 1,200 மதிப்பு 1970 உடன் ஒப்பிட்டால் ரிம 225 மட்டும்தான். (1,200/5.33).
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கடந்த 50 ஆண்டுகளில் தொழிலாளர்களின் சம்பளம் வெறும் ரிம 5 மட்டும்தான் உயர்ந்துள்ளது (1970-இல் ரிம 200). எனவே அன்று இருந்த அதே வறுமை நிலைதான் தொடர்ந்து நீடிக்கிறது.
ஆனால், நாட்டின் வளர்ச்சி மட்டும் அதிகமாகியுள்ளது. GDP எனப்படும் உள்நாட்டு உற்பத்தி அளவு 1970-இல் ரிம120 கோடியாக இருந்தது, 2020-இல் ரிம15,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் உண்மை மதிப்பு (1970-உடன் ஒப்பிட்டால்) ரிம 2,814 ஆகும் (15,000/5.33).
அதாவது நாட்டின் உண்மையான உற்பத்தி 1970-இல் ரிம 120 கோடியாக இருந்தது 2020-இல் ரிம 2,814 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் உயர்வு 23.4 மடங்காகும்.
நமது மக்கள் தொகை 3.2 கோடியாகும். இந்தக் கணக்கின் படி ஒவ்வொரு மலேசியர்களுக்கான உண்மையான வளர்ச்சி என்பது 7.3 மடங்கு கூடியிருக்க வேண்டும். (23.4/3.2). அதாவது ரிம 1200 என்ற சம்பளம் ரிம 8,760 ஆக இருக்க வேண்டும்.
ஆனால், நம்மால் அந்த உண்மையான வளர்சியைக் காண இயலவில்லை. அதற்குக் காரணம் நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் குறைந்த சம்பள வழிமுறையைக் கையாள்வதாகும். அதன் வழி முதலீட்டாளர்கள் ஈர்க்க இயலும் அவர்களும் அதிக முதலீடு செய்வார்கள். முதலீடு கூடும்போது நாட்டின் உற்பத்தி அதிகமாகும். ஆனால் சம்பளம் மட்டும் கட்டுப்படுத்தப்படும். இதற்கு ஏற்ப அயல்நாட்டு காரர்களை வேலைக்குக் கொண்டு வருவார்கள். அவர்களோடு நமது தொழிலாளர்களும் போட்டி போட வேண்டும்.
இருப்பினும், இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது அயல் நாட்டுத் தொழிலாளர்கள் இல்லாமல் நம்மால் செயல்பட முடியாதா அல்லது நாம் எவ்வளவு காலம் இதே போன்ற குறைந்த சம்பளக் குத்தகை தொழிலாளர்கள் வழி நமது பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு செல்லப் போகிறோம் என்ற வினாவுக்குப் பதில் தேட வேண்டும்.
மலேசிய ஒரு முதலாம் தரச் செல்வத்தையும் செழிப்பையும் வைத்துக்கொண்டு மூன்றாம் தர நடைமுறையைக் கொண்டுள்ளது எதனால்?
நமது நாட்டைத் திறம்பட வழி நடத்தத் தகுந்த தலைமைத்துவம் இன்னும் உருவாகவில்லை. இனவாத அரசியலில் ஊழலும் தரமான தலைவர்கள் அற்ற சூழலில் கூலிப்படை போல் பங்காற்றும் அரசியல்வாதிகளும், இவர்களின் வழி பணம் தேடும் மக்களும் – இப்படியாக ஒரு ஒட்டு மொத்தக் கீழ்த்தரச் சூழலில் நாடு சிக்கியுள்ளது.