‘பல்லில்லா புலி’யானது புரிந்துணர்வு ஒப்பந்தம்

இராகவன் கருப்பையா –கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்ற இஸ்மாய்ல் சப்ரி அவசர அவசரமாகச் செய்த முதல் காரியம் எதிர் கட்சிக் கூட்டணியை அரவணைத்து அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதுதான்.

இதன் வழி தனது சிறுபான்மை அரசாங்கத்தை தற்காத்துக்கொண்ட சப்ரி, அம்னோவின் ஊழல்வாதிகளின் நெருக்குதலில் இருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டார்.

அவர் பதவியில் அமர்ந்து சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை மக்களுக்கு ஓரளவு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் முன்னைய பிரதமர் மஹியாடினின் ஆட்சியில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்த அமைச்சர்களில் கிட்டதட்ட 90 விழுக்காட்டினரை சப்ரி மீண்டும் சேர்த்துக் கொண்டதால் பெருமளவிலான அதிருப்தி அப்போது நிலவியது.

ஆனால் தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால் 4 மாதங்கள் கடந்தும் அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றேத் தோன்றுகிறது.

பல நிலைகளில் அதிக அளவிலான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முதன்மையாக முன் வைத்து பக்காத்தான் ஹராப்பான் அந்த உடன்படிக்கைக்கு இணங்கியது.

உதாரணத்திற்கு கோவிட் நோய்க் கட்டுப்பாடு, சுயேச்சையான நீதித்துறை மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்தம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் அந்த உடன்படிக்கை சப்ரியின் ஆட்சிக்கு நிலைத்தன்மையை மட்டும்தான் வழங்கிக் கொண்டிருக்கிறதேத் தவிரக் கண்ணுக்கு எட்டிய வரையில் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் காணவில்லை என்பதுதான் உண்மை. மாறாக நாட்டின் நிலைமை தற்போது மேலும் மோசமடைந்து மக்களின் துயரங்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்களுக்காகச் சேவை செய்ய அடிப்படையான ஒதுக்கீடுகளை சப்ரி வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், அடிப்படை உணவு வகைகளின் விலைகள் வரம்பு மீறி உயர்ந்து மக்களுக்கு, குறிப்பாக பி40 தரப்பினருக்கு சொல்லொன்றா துயரை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கமோ எதிர்க்கட்சியினரோ அறிக்கை விடுவதோடு தங்களுடைய கடமை முடிந்துவிடுவதைப் போல நடந்து கொள்கின்றனர். மக்களின் துன்பம் தீர எம்மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரியவில்லை.

இந்நிலையில் திடீரென நாட்டை உலுக்கிய வெள்ளப் பேரிடர், வானத்தை மறைத்த கருமேகங்களைப் போல விலைவாசிப் பிரச்சினையை ஒட்டு மொத்தமாக மறைத்து அரசியல்வாதிகளைக் காப்பாற்றியது.

எனினும் இப்பேரிடரைக் கையாள்வதில் அரசாங்கம் கண்ட தோல்வியானது எதிர்பார்த்த அளவுக்கு எதிர்க்கட்சியினரையும் கூட தட்டி எழுப்பவில்லை என்றே சொல்லவேண்டும். ஒரு சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிரப் பெரும்பாலானோர் வாய்ப்பேச்சு வீரர்களாகத்தான் இருந்தார்களே  ஒழிய சுயமாகக் களமிறங்கி மக்களைக் காப்பாற்றிய தன்னார்வலர்கள்தான் உண்மையான செயல்வீரர்கள் என்பது நாடறிந்த உண்மை.

வெள்ள பேரிடர் தொடர்பான சலசலப்பு தணிவதற்குள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அஸாம் பாக்கி சம்பந்தப்பட்ட சர்ச்சை பூதாகரமாக வெடித்தது. இந்த விவகாரத்திலும் பக்காத்தானின் கூட்டறிக்கை சற்று சாவகாசமாகத்தான் வெளியானது.

G25 எனும் கல்விமான்களைக் கொண்ட அமைப்பு உள்பட பல்வேறு உயர் நிலைத் தரப்பினர் கண்டனக்குரல் எழுப்பிப் பல நாள்களுக்குப் பிறகுதான் பக்காத்தானின்  தலைவர்கள் மன்றம் பிரதமரைத் தட்டி எழுப்ப முற்பட்டது.

நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக அப்பட்மாக இத்துவேசத்தைப் பிரதிபலிக்கும் மோசமான ஒரு வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனையும் கூட எதிர்க்கட்சியினர் அங்கீகரித்தனர்.

திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான இளம் மருத்துவர்களின் அவலத்திற்கு இன்னமும் விமோசனம் கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் இவ்விவகாரத்தையாவது தீவிரமாக முன்னெடுத்து அவர்களுக்குத் தீர்வு பிறக்க வழிக் கொணர்ந்திருக்கலாம். ஆனால் அதுவும் இல்லை!

அந்த ஒப்பந்தத்தை அரசாங்கம் தனது சுயநலத்திற்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறதேத் தவிர மற்றபடி அதனைத் துச்சமாக மதிக்கிறது எனக் குற்றஞ்சாட்டி அதனை முறித்துக் கொள்ள வேண்டும் என ஜ.செ.க.வின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கும் பினேங் மாநிலத் துணை முதல்வர் ராமசாமியும் அவ்வப்போது வெளிப்படுத்தும் விரக்தியிலும்  நியாயம் உள்ளதாகவே தெரிகிறது.

அது ஒரு புறமிருக்க பக்காத்தான் தலைவர் அன்வாரிடம் முன்பிருந்த ஆக்ரோஷத்தையும் துடிப்பையும் அண்மைய காலமாகக் காணவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் அதற்கு ஒரு காரணமாகும்.

இதனாலோ என்னவோ எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து அன்வார் விலக வேண்டுமென்றும் பிரதமராகும் கனவை அவர் விட்டுவிட வேண்டும் எனவும் சமீப காலமாகக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட இந்த 4 மாத காலத்தில் பக்காத்தானின் தலைவர்கள் மன்றம் ஒரு முறையாவது பிரதமரைச் சந்தித்தார்களா என்று தெரியவில்லை.  சப்ரிக்கும் அது சந்தோசம்தான்.

மலாக்கா மற்றும் சரவாக் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அடைந்த படுதோல்விகள் எதிர்க்கட்சி கூட்டணிக்கு ஒரு பின்னடைவு என்பது எல்லாருக்கும் தெரியும்.

எனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விவேகமாகப் பயன்படுத்தி அரசாங்கத்தின் வரம்பு மீறிய, அறிவிலித்தனமான, தான்தோன்றித்தனமான மற்றும் தவறான நடவடிக்கைகளை அவ்வப்போது கண்டித்து பக்காத்தான் தனது நிலையை வலுப்படுத்திக்  கொள்ளும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம்தான்.

மோசமான தற்போதைய ஆட்சிக்குப் பதிலாக எந்நேரத்திலும் சிறப்பானதொரு அரசாங்கத்தை அமைக்க தங்களுடையக் கூட்டணி தயாராய் உள்ளது எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் பக்காத்தான் தோல்வி அடைந்துள்ளதாகவேத் தெரிகிறது.

ஆக எதிர்க்கட்சி கூட்டணி அரசாங்கத்தைக் கூர்ந்து கண்காணிக்க வேண்டிய தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதைப் போன்றதொரு தோற்றம் இப்போது நிலவுவதால் புரிந்துணர்வு ஒப்பந்தம் ‘பல்லில்லாப் புலி’யாக ஒரு வெற்று கடுதாசு என்றே கருத வேண்டியுள்ளது.