எதிர்வரும் திருவள்ளுவர் ஆண்டு ௨௰௫௩ (2053), தை மாதம் (சுறவம்) 1ஆம் நாள், வெள்ளிக்கிழமை நன்னாளில் பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டையும் பொங்கல் திருநாளையும் மதம் கடந்து பண்பாட்டு அடையாளத்துடன் கொண்டாட மலேசியா மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் அனைவரும் அணியமாகிக் கொண்டிருக்கிறோம்.தமிழர் வானியல் கணிதமுறைப்படி சூரியன் சுறவ ஓரைக்குள் (தை மாதம்) செல்லும்
பெயர்ச்சியே ஆண்டின் தொடக்கம் ஆகும்; தை முதல்நாளில் சூரியன் உதிக்கும் நேரமே அந்நாளின் தொடக்கமாகும்.வேற்றுமைகளைக் கடந்து நாம் தமிழர் என்ற முறையில் இன மரபு பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கி பொது நிலையில் பொங்கல் தமிழ்பபுத்தாண்டை கொண்டாடும் வழிமுறைகளைக் குறித்து மலேசியத் தமிழர் தேசியப் பேரவை விளக்கம் தர விரும்புகிறது.
பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கு வழிமுறைகள்:
பொங்கலுக்கு முன்:
➢ புத்தாடை வாங்குதல்.
➢ பண்ணியம் (பலகாரங்கள்) செய்தல்.
➢ வீட்டு ஒப்பனைப் பொருள்கள் வாங்குதல்.
➢ வீட்டுக்குச் சாயம் அடித்தல்.
➢ பொங்கல் இடத் தேவையான பொருள்கள் வாங்குதல்.
➢ வீட்டைத் துப்பரவு செய்தல்.
பொங்கலுக்கு முதல்நாள் மாலை-இரவு:
➢ தென்னங் கூந்தல், மாவிலை தோரணம், வாயில் கரும்பு கட்டுதல்.
➢ பொங்கல் புத்தாண்டு வாயில் பதாகை, பிற தோரணத் தொங்கல் கட்டுதல்.
➢ பொங்கல் புத்தாண்டுக் கோலம் இடுதல், பிறக்கவுள்ள ௨௰௫௩ (2053) திருவள்ளுவராண்டை அதில் குறித்தல்.
➢ வழிப்பாட்டு அறையில் புதிய ஆடை அணிகலன்களை வைத்தல் (இது வழிபாடு உடையவர்களுக்கு மட்டுமே).
பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு அன்று காலையில்:
➢ நன்னீராடல் (மருத்துநீர்/மூலிகைநீர் கலந்த குளியல்) – விடியற் காலையில் எழுந்து மருத்துநீர் தேய்த்துக் குளித்துப் பொங்கலிட அணியமாக வேண்டும்.
➢ பொங்கல் இடுதல் – கதிரவ எழுகையோடு பொங்கிவரும்படிப் பொங்கல் இடுதல்.
➢ பொங்கல் படைத்து வணங்குதல் – பொங்கல் படையல் செய்தல்.
➢ பொதுப்போற்றி – வீட்டு வெளியில் – இயற்கை முதலுக்கும் தமிழுக்கும் சேர்த்து முதல் வணக்கம் செய்தல்.
➢ இறைபோற்றி – மரபு போற்றி – இறை போற்றி (திருவருள் ஓதுவம் பெறுதல், வழிபடு தெய்வ வணக்கம், பொது விண்ணப்பம் மேற்கொள்ளுதல்) – முக்கழக முத்தமிழ் மரபு போற்றிகளைப் பாடுதல்.
➢ தமிழ் வணக்கம் – தமிழ இறையாண்மைத் தலைவணக்கம் செய்தல்.
➢ புதிய ஆண்டின் தமிழ்நாள்காட்டி மாட்டுதல்.
➢ வீட்டு பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்குப் புத்தாடை வழங்குதல்.
➢ வீட்டு இளையவர்களும் சிறார்களும் பெரியவர்களிடத்துப் பாதம்பணிந்து வாழ்த்து பெறுதல்.
➢ வீட்டுப் பெரியவர்கள் சிறார்களுக்கு அன்பு பொதில் (அங்பாவ்) வழங்குதல்.
➢ குடும்பத்தோடு உணவருந்துதல் – மகிழ்தல்.
மருத்துநீர் தயாரிக்கும் முறையும் தேவையான பொருட்களும்:
➢தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, மூங்கில் (விட்ணுகிராந்தி), சீதேவியார் செங்கழுநீர், வில்வ, அறுகு, பீர்க்கு, பால், மஞ்சள், மிளகு, திப்பிலி, சுக்கு, இவற்றை தூய நீரிலிட்டுக் காய்ச்சி வைத்துக்கொள்க, குளிக்க உள்ள நீரில் சிறிதளவு (அளவாகச்) சேர்த்துக் குளிக்க வேண்டும்.பொங்கல்
தமிழ்ப்புத்தாண்டு அன்று மாலையில்:
திருவள்ளுவ பெருமானார்க்குக் குருவணக்கம் செய்தல் – தமிழாண்டு சிறப்புப் பெயர்பெறக் காரணமாகவும், தமிழர்க்கும் மட்டுமல்லாது உலக அனைவருக்கும் பொதுமறை அருளிச்செய்த திருவள்ளுவ பெருமானார்க்குச் சிறப்புத் தலைவணக்கமாக – குரு வணக்கமாக எல்லோரும் ஏனைய தமிழக் குடும்பங்களோடு பொதுவில் கூடி வணக்கம் செய்தல்.
பொங்கல் வைப்பதற்கான ஏற்ற நேரம்:
தை ஒன்று அன்று, மலேசிய நேரப்படி காலை 7.27க்கு சூரியன் தோன்றும். ஆகவே அன்றுக் காலைத் தத்தம் வட்டார சூரியன் உதிக்கும் நேரத்தில் பால் பொங்கி வரும்படி பொங்கலிட வேண்டும்.ஆண்டின் முதல் நாளை வரவேற்று பொங்கல் வைப்பதனால் அது சூரியன் உதிக்கும் நேரத்தில் தான் வைக்க வேண்டுமே தவிர சூரியன் மறையும் நேரத்தில் அல்லது மற்ற நேரத்தில் பொங்கலிடுவது தவறாகும்.
80ஆம், 90ஆம் அதற்கும் முந்தைய ஆண்டுகளில் நமது முன்னோர்கள் காலையிலே சூரியன் உதிக்கும் நேரத்தில் பொங்கலிட்டிருப்பதை நினைவுக்கூர்ந்து பார்க்கவும்.நல்ல நேரம் பார்த்து பொங்கலிடுவது பிற்கால திரிபாகும். எனவே, தை ஒன்று அன்று தமிழர்கள் தங்கள் பண்பாட்டுக்கு முதன்மை கொடுத்து ஒரு நாள் அல்லது அரை நாள் அல்லது நேர விடுப்பு எடுத்து இத்திருநாளைக்கொண்டாடுவதே சிறப்பானதும் சரியானதும்.எம்மதமும் தழுவியிருந்தாலும் தமிழராக மதம் சார்பற்று இந்தப் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டை எல்லோரும் தமிழ்ப் பண்பாட்டுக்கு உட்பட்டு கொண்டாட வேண்டும் என்று பேரவைக் கேட்டுக்கொள்கிறது.
கோறணி நச்சில் பெருந்தொற்று இன்னும் நம்முடன் இருப்பதை கருத்தில்கொண்டு தத்தம் வழிப்பாட்டுத்
தளங்களில் பொங்கல் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாட திட்டமிட்டிருப்பவர்கள் தற்போதைய தர செயல்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக கொண்டாடுமாறு மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கேட்டுக்கொள்கிறது.பிறக்கின்ற ௨௰௫௩ (2053) தமிழாண்டு எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கும் என்று வேண்டுவோம், கொண்டாடுவோம்.
பொங்கலோடு புத்தாண்டு – தமிழ்ப் புத்தாண்டு!
கொண்டாடு! கொண்டாடு! கொண்டாடு!
கருணைவிழா காலவிழா இரண்டையும் கொண்டாடு! – இர.திருச்செல்வம்
தமிழரண் மணியன்
தேசியத் தலைவர் , மலேசியத் தமிழர் தேசியப் பேரவை
அருமையான விளக்கம். தமிழர்கள் எவ்வாறு பொங்கல் தமிழ்ப்புத்தாண்டைக் கொண்டாட வேண்டுமென விளக்கமளித்தமைக்கு நன்றி. மலேசிய தமிழர் தேசியத்தினர்களுக்கு நன்றி