நாட்டின் மக்கள் தொகையில் 98 விழுக்காட்டினருக்கும் மேல் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அரசாங்கப் புள்ளி விவரங்கள் காட்டுகின்ற போதிலும் தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையிலும் மரண விகிதத்திலும் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை.
கடந்த சில வாரங்களாக நாடு முழுமைக்கும் தினந்தோறும் சராசரி 3000 பேர் கோறனி நச்சிலினால் பாதிக்கப்படுகின்றனர். அதே சமயம் அன்றாட இறப்பு விகிதம் சராசரி 20ஆக உள்ளது.
முன்னைய சுகாதார அமைச்சர் அடாம் பாபாவோடு ஒப்பிடுகையில் தற்போது அப்பொறுப்பை ஏற்றிருக்கும் கைரி ஜமாலுடின் தலைமையிலான நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மிகுந்த பலனை அளித்து வருகிற போதிலும் பாதிப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு குறையாமல் இருப்பது மக்களிடையே தொடர்ந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது.
அரசாங்க ஊழியர்களில் நிறையப் பேர் இன்னமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என அவ்வப்போது செய்திகள் வெளிவருவதால் இவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்களா அல்லது வேறு எந்தத் தரப்பினர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என மக்களுக்குத் தெளிவான விளக்கம் தேவை.
அரசாங்கம் ஒழிவு மறைவின்றி விவரங்களை வெளியிட்டால்தான் எந்நேரத்திலும் மக்கள் உஷாராக இருப்பதற்கும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளை மேலும் தீவிரமாக கடைப்பிடிப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.
சமய நம்பிக்கை உள்பட பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டி தடுப்பூசிகளைத் தட்டிக் கழிக்கும் தரப்பினரை அரசாங்கம் எப்படிக் கையாளுகிறது என்பது குறித்தும் மக்களுக்கு விளக்கம் சொல்வது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
தடுப்பூசித் தொடர்பாகக் கடுமையான விதிமுறைகளை அரசாங்கம் விதித்துள்ள போதிலும் அதனைப் போட்டுக் கொள்ளாமலே சிலர் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியுள்ள வேடிக்கையான விசயம் தற்போது அம்பலமாகியுள்ளது. உலகில் உள்ள எல்லா நாடுகளுமே மிகக் கடியான விதிமுறைகளுடன் இந்தத் தொற்றைக் கையாண்டு வரும் வேளையில் இத்தகைய ஒரு அவலம் வேறு எங்கும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
கடந்த மாதம் சவூதி அரேபியாவுக்கு உம்ரா பயணம் மேற்கொண்ட 122 பேரில் 14 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசி கூட போட்டுக் கொள்ளவில்லை என கைரி அம்பலப்படுத்தியது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்களில் 10 பேர் ஒமிக்ரோன் வகைத் தொற்றோடுத் திரும்பியது மக்களுக்கு மேலும் பேரதிர்ச்சி மட்டுமின்றி கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சிறிய உணவகத்திற்குள் நுழைவதாக இருந்தால் கூட 2 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்க வேண்டும் எனும் கடுமையான கட்டுப்பாடு அமலில் இருக்கும் போது இவர்கள் எப்படி அயல் நாடு ஒன்றுக்கு சர்வ சாதாரணமாகச் சென்று திரும்பினார்கள் என்ற கேள்விக்கு அரசாங்கம் அவசியம் பதில் சொல்லியாக வேண்டும்.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அமலில் இருக்கும் கடுமையான சோதனைகளை எப்படி இவர்கள் மீறினார்கள்? இதற்கு எத்தனை பேர் உடந்தை போன்ற வினாக்களுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டியுள்ளது.
திரங்கானு மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் போலி தடுப்பூசி சான்றிதழ்களை விற்பனை செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது மற்றொரு அதிர்ச்சித் தகவல். ஒவ்வொரு சான்றிதழுக்கும் அவர் 300 ரிங்கிட்டிலிருந்து 600 ரிங்கிட் வரையில் வசூலித்ததாக நம்பப்படுகிறது.
எனவே நோய்த் தொற்றோடு நாடு திரும்பிய அந்த 10 பேரும் இது போன்ற போலி சான்றிதழ்களைப் பெற்றிருந்தனரா என்று தெரியவில்லை. தடுப்பூசி சான்றிதழ்கள் இல்லாமல் முதற்கொண்டு சவூதி அரேபியாவிற்குள் நுழையவே முடியாது. அப்படியென்றால் சவூதி அதிகாரிகளும் இவர்களால் ஏமாற்றப்பட்டுள்ளனரா எனும் கேள்வியும் எழத்தான் செய்கிறது.
மலேசியர்கள் உம்ரா பயணம் மேற்கொள்வதற்கு கைரி தற்காலிகத் தடை விதித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அந்த 10 பேரின் சுயரூபம் அம்பலமானதை தொடர்ந்து மலேசியர்களுக்கு சவூதி அரேபியா தற்காலிக தடை எதனையும் விதித்துள்ளதா என்றும் தெரியவில்லை.
இத்தகைய பித்தலாட்டத்தினால் மற்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் இதர மலேசியர்களும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மலேசியர்கள் போலிச் சான்றிதழ்களுடன் உலா வருகின்றனர் எனும் பொதுவான முத்திரை குத்தப்பட்டால் அனைத்துலக ரீதியில் நமக்கு அது அவமானம் மட்டுமின்றி பெரும் பயண பாதிப்பையும் ஏற்படுத்திவிடும்.
எனவே இந்தக் குளறுபடியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டவர்களும் உடந்தையாக இருந்தவர்களும் சமய, இன பாகுபாடின்றி கடுமையாக தண்டிக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
இல்லையெனில் ஊழல் மலிந்துள்ள நாடு எனும் அவப்பெயரை ஏற்கெனவே அனைத்துலக நிலையில் சுமந்து நிற்கும் நம் நாட்டுக்கு இந்தப் புதிய குளறுபடி மேலும் இழுக்கை ஏற்படுத்தும் என்பதுத் திண்ணம்.
அதோடு மட்டுமின்றி கோறனி நச்சிலுக்கு எதிரான நமது போராட்டத்திற்கு ஒரு முடிவே இருக்காது. மக்களின் துன்பமும் தொடர்ந்து கொண்டே இருக்கும்!