தாய்மொழிப் பள்ளிகள் – தேசியத்தின் அச்சாணி – பகுதி 1

கி.சீலதாஸ் – நைஜீரியாவின் தலைசிறந்த இலக்கியப் படைப்பாளர் சினுவா அச்சிபே (1930-2013) பத்திரிக்கை நேர்காணலின்போது, “சிங்கங்கள் தங்களுக்கெனச் சொந்த வரலாற்று ஆசிரியர்களைக் கொண்டிருந்தாலன்றி வேட்டையாடல் வரலாறு வேட்டைக்காரனையே பெருமிதப்படுத்தும்” என ஓர் அற்புதமான வாய்மொழியைச் சுட்டிக்காட்டினார். பொதுவாக கருப்பர்களை ஏளனமாகப் பேசுவது, சித்தரிப்பது வழக்கமாக இருந்தது.

ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்பு “நாம் இருவர்” திரைப்படம் வெளிவந்தது. பிரபல தயாரிப்பாளர்கள் “ஏவிஎம்” தான் அந்தத் திரைப்படத்தை வெளியிட்டார்கள். இன்றைய இளையர்களுக்கு அது தெரியாது. அந்தத் திரைப்படத்தில் ஒரு நாடகக் காட்சி, இந்தியாவின் சுதந்திரத்தை உயர்த்தி காட்டியது.

அதில் சீனர்கள், கருப்பர்களின் சுதந்திரமற்ற வாழ்க்கையைப் பற்றி சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்தியர்கள்தான் பாரத மக்கள், அவர்கள் உயர்வானவர்கள் எனப் பொருள்படும் காட்சி அது.

பாரத மக்கள் உயர்ந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்கள் என்று உணர்த்தும் நிறைய இலக்கியப் படைப்புகள் வந்து கொண்டிருந்த காலம் அது. “நாம் இருவர்” திரைப்படம் இந்தியாவின் சுதந்திர காலத்தை ஒட்டியது. பிற நாடுகள் அடிமை சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததை உணர்த்தலாம், உலகமே அறியும்படி ஏகாதிபத்தியத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தலாம். ஆனால், அவர்களின் பரிதாப நிலையை ஏளனம் செய்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

ஆண்டவர்களும் அடிமைகளும்

இந்தியர்கள் பிறரைக் கேலி செய்யும் கலாச்சாரத்தைப் பார்க்கும்போது இரஷ்ய இலக்கியப் படைப்பாளர் லியோ டால்ஸ்டாய் சொன்னது நினைவுக்கு வருகிறது. முப்பது கோடி இந்தியர்களை முப்பதாயிர ஆங்கிலேயர்கள் அடிமைகளாக நடத்தியதை அவர் குறிப்பிட்டிருந்தார்.

டால்ஸ்டாயின் அந்தக் கருத்தை ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மையை விளக்குகிறது என்று நினைப்பதா அல்லது முப்பதாயிரம் வெள்ளையர் படையைத் துரத்த இயலாத, அடங்கிக்கிடந்த சமுதாயத்தின் உறுதியின்மை, சுதந்திர வேட்கையைத் துறந்த சமுதாயத்தின் இழிநிலை என்பதா? இரண்டு கருத்துக்களும் சிந்திக்க வேண்டியவை என்பது அறிவுடைமை.

வெள்ளையர்களை மட்டும் வைவது அடிமைப்படுத்தப்பட்டவர்களின் திறனற்ற, துணிச்சலற்ற தராதரத்தை விளக்குகிறது என்று கூட சொல்லலாம். ஆனால், இரண்டு கருத்துக்களும் வெள்ளையர்களின் கொடுங்கோன்மை; அதை எதிர்க்க துணியாத, பணிந்துபோன இரு நிகழ்ச்சிகளும் வரலாற்று உண்மைகளாகும்.

வெள்ளையர்களின் கொடுமை ஆட்சியைச் சகித்துக்கொண்ட, அடிமைகளாக்கப்பட்ட இந்தியர்களின் துணிவு, தன்மானம் எங்கே போயிற்று? இரண்டுமே சிந்திக்கச் செய்யும் மனித குணங்கள். இந்தியாவின் சுதந்திரம் அதன் பழைய காலத்து சங்கடமான அரசியல் வாழ்க்கையை மறக்கச் செய்யுமா? அதுபோலவே, வெள்ளையர்களின் ஆட்சி எங்கெல்லாம் பரவியிருந்ததோ அங்கெல்லாம் அவர்களின் அடக்குமுறை ஆட்சி அமலில் இருந்தது. (தொடரும்)