ஊழலுக்கு வக்காளத்தா? – கி.சீலதாஸ்

ஊழலால் விளையும் கேடுகளைப் பற்றி உணராத, உணர மறுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை; ஆட்சி அவர்கள் கையில் இருக்கும் வரை ஊழல் நடவடிக்கைகளை, ஊழல் கலாச்சாரத்தை ஒடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது; முடியும் என்று நினைப்பது வெறும் பகற்கனவாகும். இலஞ்சம் வாங்குவோர்க்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்று சட்டம் சொல்கிறது. தண்டனையைக் கண்டு பயப்படாத சமுதாயத்தைத்தான் நாம் காண்கிறோம்.

இலஞ்சம் கொடுப்பவர் எதற்காக அதைத் தர வேண்டும்? அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பில் பழுது இருக்கிறது. அந்தப் பழுதை மறைப்பதற்குப் பொறுப்பில் இருக்கும் அரசு ஊழியர் அல்லது அதிகாரி ஒப்புக்கொள்கிறார். செய்த பழுதை மறைக்க தரும் பரிசுதான் இலஞ்சம். அந்த இலஞ்சப் பணத்தை, பரிசைப் பெற்றுக்கொண்டு செய்யப்பட்ட பழுதை, தவறை அதிகாரி மறைத்துவிடுகிறார். செய்த குற்றத்தை மறைப்பதற்குக் கையூட்டு பெறுவதுதான் இலஞ்சம். மக்கள் வஞ்சிக்கப்பட்டார்கள், நாட்டின் மீது மோசடி செய்யப்பட்டது. நாடு எனும்போது அது நாட்டு மக்களையும் உட்கொண்டதாகும்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து அமைச்சர் ஒருவர், “இலஞ்சம் கேட்டு பெறக்கூடாது. கொடுத்தால் வாங்கி கொள்வதில் குற்றமாகாது!” என்றார். இது எப்படி இருக்கிறது? இதைப் படிக்கும்போது எத்தகைய உணர்வு ஏற்படும்? அவர்களின் கலாச்சாரம் அப்படி என்று இருந்துவிடலாமா?

சாலை விதிப்படி வாகனத்தை ஓட்டினால் எந்தக் குற்றத்துக்கும் ஆளாகமாட்டார்; இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. வேக கட்டுப்பாடுள்ள பகுதியில், சாலையில் கட்டுப்பாட்டை மீறுவது குற்றமாகும். குற்றம் புரிந்த வாகன ஓட்டுநரைக் காவலர் நிறுத்தும்போது ஒரு ஐம்பது வெள்ளித்தாளைக் கொடுக்க முற்படுகிறார். “நான் கேட்கவில்லை. நீயாக விரும்பி தருகிறாய்!” என்று கூறி காவலர் பெற்றுக்கொள்கிறார்.

இது நியாயமாகுமா? வாகன ஓட்டுநர் செய்த தவறைச் சட்டப்படி கண்டிக்க நடவடிக்கை எடுக்காமல் அதை மறைக்கும் பொருட்டு பெற்றுக்கொண்ட பணம் ஊழல் தன்மையற்றது என்றாகிவிடுமா? கேட்காமல் கொடுக்கப்பட்டது என்றபோதிலும் செய்த குற்றத்தை இருவருமே மறைத்துவிட்டார்கள் என்றுதானே முடிவு செய்ய வேண்டும்.

சில நாடுகளில் ஊழலைப் பொறுத்தவரையில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் காணலாம். கம்யூனிஸ்ட் நாடுகளில், குறிப்பாக கம்யூனிஸ சீனாவில் ஊழல் செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இஸ்லாமிய நாடான சவூதி அரேபியாவில் ஊழல் கலாச்சாரத்தை ஏற்காமல் அத்தகைய நடவடிக்கைகளைச் சட்ட விரோத செயல்களாகத் தண்டிக்கிறது. ஊழல் சட்ட விரோதச் செயல் என அந்த நாடு முடிவு செய்துவிட்டது. ஊழலுக்குப் பாதுகாப்பு தர மறுத்துவிட்டது.

நம் நாட்டில் ஒரு சில அரசியல் தலைவர்கள் ஊழலுக்குப் புது வியாக்கியானம் நல்கியிருப்பது அந்தச் சட்ட விரோதச் செயலைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கவில்லை. கருத்துச் செறிவு கொண்டிருக்கும் சமய நூல்களைத் துணைக்கு அழைத்து ஊழலைப் பற்றி எதுவும் சொல்லப்படாததால் அதைக் குற்றம் என ஏற்க மறுக்கிறார்கள்.

சவூதி அரேபியாவே ஊழல் கலாச்சாரத்தை ஏற்க மறுத்ததை ஏனோ நம் நாட்டுத் தலைவர்கள் உணராதது விந்தையிலும் விந்தை. இப்படிப்பட்ட போக்கும், கருத்தும் ஊழலை எக்காலத்திலும் ஒழிக்க முடியாது. அதே சமயத்தில், சமய நூல்களைப் பற்றி கருத்துரைக்கும் அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு அமலில் இருக்கும் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைப் பற்றி அவர்களின் கருத்து என்ன? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஊழல் சட்டம் அவர்களின் சமய நூலுக்குப் புறம்பானது எனக் கருதுகின்றனர் என்றுதானே பொருள்.

இந்தப் போக்கானது ஊழலை ஒருவகையில் ஆதரித்துப் பேசுவோரின் பகிரங்க நிலைபாடு ஏற்புடையதா என்பதை அரசு விளக்காததும் ஆச்சரியமே. அரசின் மவுனம் எதைக் குறிக்கிறது? சமயச் சாயல் கொண்ட ஊழல் பற்றிய கருத்து ஏற்புடையதே என்று நினைக்கிறதா? ஒரு சிலரை ஊழல்வாதிகள் என உலகமே அடையாளம் கண்டுவிட்ட பிறகும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு அரசின் போக்கு செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கிறது என்று நினைக்கத்தோன்றும் அல்லவா?

சமய நூல்களில் ஊழலைப் பற்றி தெளிவான கருத்து கிடையாது என்பதால் ஊழல் கலாச்சாரத்தைப் பேணுவது முறையாகாதே. நாட்டில் ஊழல் பெருகினால் அது நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதை உணர்ந்துதானே ஊழல் தடுப்புச் சட்டங்கள் இயற்றப்பெற்றன. நன்னெறி நூல்களைப் பற்றி சொல்லும்போது அவை வடிவம் பெற்ற காலத்தில் நாட்டு நலனில் கரிசனம் கொண்டிருந்த மன்னர்கள் ஆட்சி செய்ததால் ஊழல் தலையெடுக்க முடியாமல் இருந்தது எனலாம்.

ஒரு பழைய கதை உண்டு. புலவர் ஒருவர் மன்னரைப் பார்த்து, புகழ்ந்து பாடி பரிசு பெற சென்றார். ஆனால், அரண்மனை காவலன் அவரை உள்ளே போகவிடாமல் தடுத்தான். புலவரோ தமது சங்கடத்தைச் சொல்லி மன்னரைக் கண்டிப்பாகப் பார்த்து பணம் பெற்றால்தான் தம்மால் உயிர் வாழ முடியும் என்று விளக்கவே காவல்காரன், “உமக்குக் கிடைக்கும் பரிசில் பாதி எனக்குத் தந்தால் உம்மை உள்ளே விடுவேன்” என்றான். புலவரும் ஒப்புக்கொண்டார்.

அரியணையில் வீற்றிருந்த மன்னரைப் பார்த்து புகழ்ந்து பாடினார் புலவர். அதைக் கேட்டு மயங்கிய மன்னன், “அற்புதம் புலவரே, அற்புதம்! என்ன வேண்டும்? கேளும்!” என்று பணித்தான்.

புலவரும், “மன்னா, எனக்கு நூறு முறை பிரம்படி தாருங்கள்!” என்றார்.

“இதென்ன விசித்திரமான கோரிக்கை?” வினவினான் மன்னன்.

“இதில் விசித்திரம் ஒன்றுமில்லை மன்னா! நீ வைத்திருக்கும் காவலனிடம் உன்னைக் காண வேண்டும் என்றேன். எனக்குக் கிடைக்கும் பரிசில் பாதியை அவனுக்குக் கொடுத்தால் உள்ளே விடுவேன் என்றான். நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன். எனவே, எனக்கு நூறு பிரம்படி வழங்கும்படி பணிவோடு வேண்டுகிறேன். அதில் சரிபாதி உன் காவலனுக்குக் கொடு” என்றார். மன்னனுக்குப் புரிந்துவிட்டது. காவலனுக்கு நூறு பிரம்படி வழங்கும்படி உத்திரவிட்டான். புலவரின் சாதுரியமான போக்கை மெச்சி மகிழ்ந்தான் மன்னன்.

புலவர் தொடர்ந்து, “மன்னா, சீன நாட்டில் ஒரு நீதிபதி வழங்கிய தீர்ப்பைப் பற்றி விளக்க விரும்புகிறேன்”. மன்னனின் காதுகள் விரிந்தன. தன் மகன் தவறான பாதையில் போகிறான்! குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கு இழைக்கும் வகையில் நடந்து கொள்கிறான் என்று நீதிபதியிடம் புகார் தந்தான் தந்தை.

வழக்கை விசாரித்த நீதிபதி தவறான வழியில் போனதற்கு மகனுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து, தந்தையைப் பார்த்து, “இப்படிப்பட்ட தறுதலையை வளர்த்து சமுதாயத்துக்குத் தீங்கு இழைத்தமையால் உமக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை!” எனக் கூறினார்.

மன்னனுக்குப் புலவரின் சிலேடையான குத்தல் புரிந்தது. பொறுப்பான அரசு ஊழியர்களை நிர்வாகத்துக்காகக் கொண்டிருக்க வேண்டியது அரசின் கடமை. ஊழல் குணம் கொண்டவர்களிடம் நிர்வாகத்தை ஒப்படைத்ததற்காக அரசும் பொறுப்பேற்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.

2009ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் ஊழல் குறித்து மக்களுக்குக் கல்வி உணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்வதைக் கவனிக்கவும். ஊழல் சம்பந்தமான சட்ட நடவடிக்கைகளும் ஒருவகை கல்வி என்றால் அது மிகையாகாது. ஊழல் செய்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர்கள் எப்படிப்பட்ட ஊழல் நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்?

அதனால் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம் என்ன என்பதை மக்கள் அறிந்துகொள்ள தகவல் ஊடகங்கள் செயல்படுவதும் ஊழல் குறித்த கல்வியின் ஓர் அங்கமாகும். இதைச் செவ்வென நடைமுறைக்கு உட்படுத்தாமல் ஊழல் புரிந்தோருக்குப் பாதுகாப்பு நல்கும் வகையில் நடந்து கொள்வது மக்களுக்குத் தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கும்.

ஊழல் செய்தோர், செய்வோர் தங்களின் சட்டத்துக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளாமல் பல காரணங்கள் சொல்வார்கள். அவை நியாயமானவையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்குத் தடையாக, இடைஞ்சலாக எவரும், அரசு உட்பட செயல்படக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

உலகமே நம் நாட்டின் மீது கேலி பார்வையை வீசத் தொடங்கிவிட்டது. அது சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறது இன்றைய ஊழல் குறித்த நடவடிக்கைகள். இது நீடித்தால் நாடும், மக்களும் அநீதிக்குள்ளாவார்கள் என்பதை மறுக்க முடியுமா?