இராகவன் கருப்பையா –நம் நாட்டில், ஒரு குற்றத்தை அம்பலப்படுத்துவோர் அனாவசியமாக அழைத்து விசாரணை செய்யப்படுவதும் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்படுவதும் புதிய விசயம் ஒன்றுமில்லை.
இத்தகைய சூழலில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சிக்கித் தவிப்பது காலங்காலமாக இயல்பாகிவிட்ட ஒன்றாகவே தெரிகிறது.
‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல’ பல வேளைகளில் குற்றம் புரிவோரைக் கண்டு கொள்ளாமல் அக்குற்றத்தை அம்பலப் படுத்துவோரைத் தண்டிக்கும் செயல்பாடு வியக்கத்தக்க ஒரு நிகழ்வாகவே இருந்து வருகிறது இந்நாட்டில்.
ஆகக்கடைசியாக ஐ.என்.எஸ். எனப்படும் இயங்கலைச் செய்தி நிறுவனத்தின் புலனாய்வு ஊடகவியலாளர் லலிதாவுக்கு அண்மையில் நேர்ந்த கதி நாட்டை உலுக்கியது.
எம்.எ.சி.சி. எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் அஸாம் பாக்கி பங்குச் சந்தையில் அளவுக்கு அதிகமான பங்குகளைக் கொள்முதல் செய்துள்ளார் எனும் விவரத்தைக் கடந்த ஆண்டுப் பிற்பகுதியில் லலிதா முதலில் அம்பலப்படுத்திப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இன்று வரையில் பங்கு பரிவர்த்தனை ஆணையம், காவல் துறை, நாடாளுமன்றச் சிறப்புக் குழு, அல்லது எம்.எ.சி.சி. போன்ற எந்தத் தரப்பும் அவரை அழைத்து விசாரித்ததாகத் தெரியவில்லை.
மாராக லலிதாதான் குற்றம் புரிந்துள்ளதைப் போன்ற தோரணையில் காவல் துறையினர் அவரை அழைத்து 3 மணி நேரங்களுக்கு மேல் விசாரணை செய்து மொத்தம் 83 கேள்விகளைக் கேட்டுள்ளனர்.
இதே போன்ற ஒரு சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டில் நடந்ததை நம்மில் பலர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
படாவி பிரதமராக இருந்த அக்காலக்கட்டத்தில் இந்நாட்டின் சீனர்களை ‘குடியேறிகள்’ என அஹ்மட் இஸ்மாய்ல் எனும் ஒரு அம்னோ தலைவர் வருணித்தார்.
அச்செய்தியைத் தனது பத்திரிகையில் எழுதிய சின் சியூ சீனத் தினசரியின் நிருபர் தான் ஹூன் செங் கொடூரமான உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
அஹ்மட் மீது அம்னோதான் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டதே தவிர எவ்விதமான நிந்தனைச் சட்டமும் அவர் மீது பாயவில்லை.
இந்த அநியாயத்தை ஆட்சேபித்த அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராஹிம் தனது அமைச்சர் பதவியைத் துச்சமென மதித்து உடனே ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டில் நஜிப் பிரதமராக இருந்த காலத்தில் 1MDB ஊழல் விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்த இரு ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி நிருபர்கள் கைது செய்யப்பட்டது அனைத்துலக ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்குப் பிறகு நிபந்தனையின்றி அவர்கள் விடுதலைச் செய்யப்பட்ட போதிலும் நாட்டின் பெயருக்கு அச்சம்பவம் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது.
அவ்விருவரும் நாடு திரும்பியதும் அந்தச் சம்பவம் தொடர்பாகவும் 1MDB ஊழல் குறித்தும் நீண்டதொரு ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது அனைத்துலக ரீதியில் மலேசியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கியது என்றே சொல்ல வேண்டும்.
ஆக ஊடகவியலாளர்கள் இதுபோன்ற கசப்பான அனுபவங்களுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்படுவார்களேயானால் பத்திரிகை சுதந்திரம் என்பது இந்நாட்டில் கேள்விக்குறியாகவே இருக்கும்.