போலீஸ் காவலில் 7 இறப்புகள் : விசாரணை நடத்தி ஐ.பி.சி.எம்.சி. அமைக்க சமூக அமைப்புகள் வலியுறுத்து

2022-ம் ஆண்டின் முதல் ஐந்து வாரங்களில், போலிஸ் தடுப்புக்காவலில் ஏழு இறப்புகள் பதிவாகியுள்ளதற்குக் கண்டனம் தெரிவித்து, 50 சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் இன்று (11.02.2022), புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் வழங்கிய குறிப்பாணையின் முழு விவரம் பின்வருமாறு :-

போலிஸ் காவலில் நிகழ்ந்த இறப்புகளின் சமீபத்திய அதிகரிப்பு மிகவும் கவலைகீடானது மட்டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது. பொதுமக்களும் சமூக அமைப்புகளும் காவல்துறைக்கும் மலேசிய அரசாங்கத்திற்கும் தங்களின் உறுதியான நிலைப்பாடுகளையும் விரிவான பரிந்துரைகளையும் பலமுறை வெளிப்படுத்தியுள்ள போதிலும், போலிஸ் காவலில் நிகழும் மரணங்களைத் தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.

தடுப்புக்காவலில் நிகழும் மரணங்களைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (USJKT) மூலம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் காவல்துறையின் அணுகுமுறை வரவேற்கத்தக்கது என்றாலும், காவல்துறையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் வழக்குகளைக் கையாளும் திறன் ஆகியவைத் திருப்திகரமாக இல்லை.

இதுவரை, பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள், தடுப்புக்காவலுக்கு முன் மற்றும் தடுப்புக் காலத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை (மனநிலை மற்றும் உடல்நிலை), அவ்வப்போதைய விசாரணை நிலை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் போன்ற விவரங்களை அறிவிக்கக் காவல்துறை தவறிவிட்டது. வழக்குகளில் குற்றம், தவறான நடத்தை அல்லது அலட்சியம் போன்ற கூறுகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கவும், மரணத்திற்கான காரணங்களை அடையாளம் காணவும், பின்னர் பணி நெறிமுறைகளை மீறிய மற்றும் மனித உரிமைகளை மீறும் அதிகாரிகள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கவும் இந்த விவரங்கள் முக்கியம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (சட்டம் 593) பிரிவு 334, போலீஸ் காவலில் நிகழும் அனைத்து மரணங்களுக்கும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. காவலின் போது ஏற்படும் மரணங்கள் உட்பட, மரண வழக்குகள் மீதான ஊக்கத்தொகைகளை நிர்வகிக்கவும் நடத்தவும் சிறப்பு மரண விசாரணை நீதிமன்றம் 2014-இல் நிறுவப்பட்டது.

சம்பவ இடத்தில் உடலைப் பரிசோதிக்க வேண்டியதன் அவசியம், பிரேதப் பரிசோதனைகளில் பங்கேற்க வேண்டியதன் அவசியம், இறந்தவரின் வாரிசுகளுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை, விசாரணை நடத்தப்படவுள்ள நாள், நேரம் போன்றவற்றை வாரிசுகளிடம் தெரிவிக்க வேண்டிய கடமை உள்ளிட்டவை குற்றவியல் நடைமுறை மற்றும் நடைமுறை வழிமுறைகளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலஞ்சும், காவலில் ஏற்படும் அனைத்து மரண விசாரணைகளும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு அறிக்கை தயார்செய்யப்பட வேண்டும் என்று கட்டளை அறிக்கை எண். 2/2019 மூலம் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தடுப்புக் காவலில் மரணம் மற்றும் விசாரணையைத் தொடங்க எடுக்கப்படக்கூடிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, காவல்துறையும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியுள்ளனரா என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம். போலீஸ் காவலில் ஏற்படும் மரணங்கள் குறித்து விசாரணை நடத்தத் தவறும் காவல்துறை, வழக்கறிஞர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் ஒன்றாகவே பார்க்க முடிகிறது.

புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறையின் (ஜிப்ஸ்) இயக்குநர் அஸ்ரி அஹ்மட்டின், காவலில் இருந்த ஏழு பேரில் ஒருவரின் இறப்பு மட்டுமே குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என்ற அறிவிப்பும் சந்தேகத்திற்குரியது. விசாரணையானது காவல்துறையினரால் நடத்தப்பட்டதே அன்றி, ஒரு சுயேட்சையான, பாரபட்சமற்ற மூன்றாம் தரப்பினரால் அல்ல. மேலும், காவல்துறை அதன் தோற்றத்தைப் பாதுகாக்க முனைகிறது என்றக் கருத்தின் அடிப்படையில், அறிக்கையின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

உதாரணமாக, தைப்பிங் மாவட்டக் காவல்துறை தடுப்பறையில் (லாக்-அப்), 63 வயது முதியவர் இறந்ததைத் தொடர்ந்து, விசாரணை நோக்கங்களுக்காக இரண்டு போலீஸ்காரர்களையும் தடுப்பறையில் இருந்த இரண்டு கைதிகளையும் போலீசார் தடுத்து வைத்தனர். செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மரண வழக்கில் குற்றவியல் கூறுகள் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க ஜிப்ஸ் இயக்குநர் தவறிவிட்டார். போலிசார் அவர்கள் காவலில் வைக்கப்பட்டதற்கான காரணங்கள், மரண வழக்கில் அவர்களின் தொடர்பு, விசாரணையின் முன்னேற்றம் மற்றும் காவலில் ஏற்பட்ட மரணம் குற்றவியல் கூறுகளை உள்ளடக்கியிருந்தால் அதற்கான தொடர் நடவடிக்கை ஆகியவைக் குறித்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பதிலளிக்க வேண்டும்.

எனவே, மலேசிய சமூக அமைப்புகளின் உறுப்பினர்களாகிய நாங்கள், போலீஸ் காவலில் நிகழும் மரணச் சம்பவங்களைத் தீர்ப்பதற்கு இந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் :

  1. போலீஸ் காவலில் ஏற்பட்ட ஏழு இறப்புகள் மீதும் உடனடியாக விசாரணை நடத்தவும்

போலீஸ் காவலில் இறந்த ஏழு கைதிகள் தொடர்பான ஜிப்ஸ்-இன் விசாரணை முடிந்துவிட்டாலும், குற்றவியல் நடைமுறை சட்டம் 593, பிரிவு 334-இன் படி விசாரணை நடவடிக்கைகள் மேலும் நடத்தப்பட வேண்டும். காவல்துறையை அரசு வழக்கறிஞருடன் ஒத்துழைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 339-வது பிரிவின் கீழ், அரசு வழக்கறிஞர் அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவலில் ஏற்பட்ட ஒவ்வொரு மரணம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 328-வது பிரிவின் கீழ், ‘மரணத்திற்கான காரணம்’ என்பது பிரேதப் பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்ட மரணத்திற்கான காரணங்களுக்கு மட்டும் பொருந்தாது, மாறாக அது கவனக்குறைவு, தவறான நடத்தை மற்றும் சட்டவிரோதச் செயல்களால் ஏற்படும் மரணத்தையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். எனவே, மரணத்திற்கான மருத்துவக் காரணங்களை மட்டும் அடையாளங்கண்டு கூறாமல், மரணத்திற்கான காரணம் அசாதாரணமா அல்லது குற்றவியல் கூறு சம்பந்தப்பட்டதா போன்ற மரணத்தின் சூழ்நிலைகளையும் தீர்மானிக்க வேண்டியக் கடமை பிரேதப் பரிசோதனையாளருக்கு உள்ளது என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

  1. ஒவ்வொரு தடுப்புக் காவல் மையத்திலும் சுகாதாரப் பிரிவுகள் அல்லது சிகிச்சை மையங்களை (உள்-மையச் சுகாதார வசதிகள்) நிறுவுதல்

2021-இன், மலேசிய மக்கள் குரல் (சுவாராம்) மனித உரிமைகள் அறிக்கை அடிப்படையில், தடுப்புக்காவலில் ஏற்பட்ட 19 இறப்புகளில் 57 விழுக்காடு (11 பேர்) உடல்நலம் மற்றும் மருத்துவப் பிரச்சனைகள் தொடர்பானவை. இதற்கிடையில், இரண்டு இறப்புகள் மருத்துவமனையிலும் ஓர் இறப்பு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் ஏற்பட்டவை என்று ஜிப்ஸ் இயக்குநர் அறிவித்துள்ளார்.

இந்தத் தரவுகள், காவல்துறையினருக்குச் சரியான பயிற்சிகள் இல்லை, அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவ ஆதாரங்கள் காவல் மையங்களில் இல்லை என்பதையே குறிக்கின்றன. இது கைதிகளை ஒடுக்கும் ஒரு சூழலுக்குப் பங்களிப்பதுடன், அவசரநிலைகள் அல்லது முக்கியமான சுகாதாரப் பிரச்சனைகளில் உள்ள கைதிகளுக்கான சிகிச்சையைத் தாமதப்படுத்துகிறது, இதனால் தடுப்புக்காவலில் மரணம் ஏற்படுகிறது.

1953 தடுப்புக் காவல் விதிமுறைகள் பிரிவு 10, தடுப்பு மையத்தில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரும் காவலில் வைக்கத் தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த ஒரு மருத்துவ அதிகாரி அவரைச் சோதிக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்டத்தின் இந்தப் பகுதிக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, அனைத்து தடுப்பறைகள் மற்றும் தடுப்பு மையங்களிலும் சுகாதாரப் பிரிவுகளை நிறுவுவதற்கான உடனடித் திட்டத்தை உருவாக்குமாறு மலேசிய அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கைதிகளைக் கையாள்வதற்கான ஐக்கிய நாடுகளின் தரநிலை குறைந்தபட்ச விதிகளின் விதி 30-இல் உள்ளதுபடி, எந்தவொரு தடுப்புக்காவல் அல்லது சிறைத்தண்டனையின் கீழ் உள்ள அனைத்து கைதிகளும் கண்ணியத்துடனும் மனிதாபிமானத்துடனும் நடத்தப்படுவதை உறுதி செய்வதில் அரசின் பொறுப்பை இது நிறைவேற்றுகிறது. இது ‘நெல்சன் மண்டேலா விதிகள் மற்றும் கோட்பாடுகள் அமைப்பின் 24-வது கொள்கை’ என்றும் அறியப்படுகிறது.

காவல்துறையுடன் இணைந்து மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) பினாங்கு, பாயான் பாரு மற்றும் பஹாங், இந்தரா மக்கோத்தா தடுப்புக்காவல் மையங்களில் சுகாதாரப் பிரிவுகளை அமைக்க மேற்கொண்டுவரும் தற்போதையப் பணிகளையும், இன்னும் ஆறு மாதக் காலத்திற்குள் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் சபாவிலும் சுகாதாரப் பிரிவுகளை அமைக்கவிருக்கும் முயற்சிகளையும் நாங்கள் அறிவோம். மலேசியா முழுவதிலும் உள்ள தடுப்புக்காவல் மையங்களிலும் சுகாதாரப் பிரிவுகளை நிறுவ சுஹாகாமின் பரிந்துரையை விரைவுபடுத்தி, கைதிகளுக்கு உடல்நலப் பிரச்சினைகளால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்.

  1. தடுப்புக்காவலில் ஏற்பட்ட சமீபத்திய இறப்பு வழக்குகளை விசாரிக்க ஒரு சுயேட்சையான வெளி அமைப்பை நியமிக்கவும்

காவல்துறையினரால், தங்கள் சொந்த அமைப்பு மற்றும் பணியாளர்கள் மீது சுதந்திரமான விசாரணைகளை நடத்த முடியாது என்பதனால் – போலிஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை சுயேட்சை ஆணையத்தை (ஐ.பி.சி.எம்.சி.) அமைக்க முன்மொழியப்பட்டதற்கும் இதுவே காரணம் – தடுப்புக்காவலில் ஏற்பட்ட அனைத்து சமீபத்திய மரணங்களையும் விசாரிக்க வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரமாக செயல்படும் ஓர் அமைப்பை உருவாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

முழுமையான விசாரணை நடத்த உள்துறை அமைச்சர் ஒரு சுதந்திரமான வெளிவிவகார அமைப்பை நியமிக்க வேண்டும் என்றும் கோருகிறோம். தடுப்பறை விதிமுறைகள் 1953 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (கே.தி.ஜே.) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தடுப்பு மையத்திற்குள் தவறான நடத்தை தகவல், தடுப்பு நடைமுறைகள் மற்றும் முறையான செந்தர இயக்க நடைமுறைகளைச் (எஸ்.ஓ.பி.) சேகரிப்பதும் இதில் அடங்கும். வெளிப்படைத்தன்மை கொள்கையைக் கடைபிடிப்பதில், விசாரணையின் முடிவுகள் பொது நலன் சார்ந்த விஷயமாக முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

  1. காவல்துறையினர் நடத்தை சுயேட்சை ஆணையம் (ஐபிசிசி) மசோதாவை திரும்பப்பெற்று, காவல்துறையினர் புகார்கள் மற்றும் தவறான நடத்தைச் சுயேட்சை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) நிறுவவும்

காவல்துறையினர் சுயேட்சை ஆணைய (ஐபிசிசி) மசோதா மிகவும் பிற்போக்கான ஆவணம், அவற்றின் அதிகாரங்கள் அமலாக்க முகமை நேர்மை ஆணையத்தை (சியாப் – SIAP) விட பலவீனமாக உள்ளன. ஐபிசிசி-க்கு விசாரணைகளில் சோதனைகளையும் கைப்பற்றுதல்களையும் மேற்கொள்ள எந்த அதிகாரமும் இல்லை, முன்னறிவிப்பின்றி தடுப்பறைகள் அல்லது தடுப்புக்காவல் இடங்களுக்குச் செல்ல முடியாது, மேலும் ‘தேசியப் பாதுகாப்பு அல்லது தேசிய நலனுக்குத் தீங்கு விளைவிக்கும்’ எனக் கருதப்பட்டால் மட்டுமே ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அணுகுவதற்கு வரையறுக்கப்பட்ட அதிகாரம் உள்ளது. பொது மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் சரிபார்த்து, சமன் செய்வதிலும் காவல்துறையின் பொறுப்புக்கூறலைப் பாதுகாப்பதிலும் அந்த  ஆணையம் தோல்வியடைந்துள்ளது.

ஐ.பி.சி.எம்.சி.-ஐ செயல்படுத்துதல் என்பது சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப பாரபட்சமற்ற தன்மையுடன் சுதந்திரமாக இருக்க வேண்டும்.

இந்தப் பரிந்துரைகளில் இவையும் அடங்கும் :-

  • விசாரணை மற்றும் ஆதாரங்களைச் சேகரிக்கும் அதிகாரம்;
  • தடுப்பு மையங்கள் அல்லது மரணங்களும் அதிகார அத்துமீறல்களும் நிகழும் இடங்களுக்கு அணுகல், மற்றும்;
  • பொறுப்பு மற்றும் தவறு என்று கண்டறியப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் திறன்.

எனவே, ஐபிசிசி மசோதாவை திரும்பப் பெறுவதோடு, ஐபிசிஎம்சி-ஐச் செயல்படுத்துவது சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரம் தொடர்பான சர்வதேச தரங்களின் பரிந்துரைகளுக்கு இணங்குவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஐபிசிஎம்சியின் உருவாக்கம் காவல்துறை மீது குற்றம்சாட்டும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக மலேசியாவில் பொது பாதுகாப்பைப் பராமரிப்பதில் மிக முக்கியமான ஓர் அமைப்பான அதன் ஒருமைப்பாடு மற்றும் பொது நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சியாகும். காவல்துறை அதன் கடமைகளை மிகவும் திறமையாக மேற்கொள்ளவும் காவல்துறையினரின் நலன் குறித்த பரிந்துரைகளை வழங்குவதையும்கூட ஐபிசிஎம்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

முடிவுரை

2022-ஆம் ஆண்டின் முதல் ஐந்து வாரங்களிலேயே, ஏழு தடுப்புக்காவல் மரண வழக்குகள் பதிவாகியுள்ளதை, மலேசிய அரசியல் சாசனத்தில் பொதிந்துள்ள வாழ்வுரிமையை அச்சுறுத்தும் ஒரு அவசரநிலையாகவே பார்க்கப்பட வேண்டும்.

மலேசிய சமூக அமைப்புகளின் உறுப்பினர்களாகிய நாங்கள், போலீஸ் காவலில் நிகழும் மரணங்களைத் தடுக்கும் முயற்சியில் இந்த நான்கு பரிந்துரைகளையும் ஏற்குமாறு காவல்துறையையும் மலேசிய அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம். காவல்துறை, இதுபோன்ற மரணங்கள் அடிக்கடி நிகழ்வதற்கான காரணங்களைத் தீவிரமாகக் கவனித்து, இதுபோன்ற மரணங்களை உடனடியாகக் கையாளும் விதத்தை மேம்படுத்த வேண்டும் என்பதையும் நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.

போலீஸ் காவலில் நிகழும் மரணங்களைத் தடுப்பதற்கும், தற்போதைய பொதுமக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும், நமது மிகப்பெரிய சட்ட அமலாக்க நிறுவனமான காவல்துறை மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் மிகச் சிறந்த வழி, போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை சுயேட்சை ஆணையத்தை (ஐபிசிஎம்சி) விரைவில் நிறுவுவதுதான்.

இந்தக் கோரிக்கை மனுவிற்கு, சுவாராம், வாக்கு18, மலேசிய சோசலிசக் கட்சி, மூடா கட்சி, அவாம், சிலாங்கூர் மகளிர் நட்பு அமைப்பு, தெனாகாநீத்தா, கோமாஸ் உட்பட 50 அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன.