நஜிப்பும்-ஸாஹிட்டும் ஏன் முஹிடினிடம் கெஞ்சினர்?

இராகவன் கருப்பையா- உலகையே உலுக்கிய மேகா ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிபும் அவருடைய அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த அஹ்மட் ஸாஹிட்டும் தன்னிடம் வந்து மன்றாடியதாக முன்னாள் பிரதமர் முஹிடின் அம்பலப்படுத்தியது தேசிய அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த அதிரடி அறிவிப்பில் உண்மை இருக்குமாயின் அடுத்த பொதுத் தேர்தலில் எந்தக் கூட்டணிக்கு ஆட்சியமைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும் எனும் ஜயப்பாட்டுக்கு சுமூகமான ஒரு பதில் கிடைத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

தான் பிரதமராக இருந்த போது தன்னை அணுகிய அவ்விருவரும் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிராக உள்ள வழக்குகளில் உதவுமாறும் நீதிபதிகளை மாற்றும்படியும் கோரிக்கை விடுத்துக் கெஞ்சியதாக முஹிடின் கடந்த வாரம் அம்பலப்படுத்தினார்.

நஜிப் இதனை மறுத்துள்ள போதிலும் நெருப்பில்லாமல் புகையுமா எனும் கேள்வி எழுவதில் வியப்பில்லை.

அப்படியென்றால் நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகள் பிரதமர் கையிலா உள்ளது?

பிரதமர் நினைத்தால் வழக்குகளின் முடிவுகளைத் தனக்கு ஏற்றவாறு மாற்றியெழுத முடியுமா?

வழக்குகளுக்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் பிரதமரின் தலையீடு உள்ளதா?

நாட்டின் நீதித்துறை பிரதமரின் கட்டுப்பாட்டிலா இயங்குகிறது?

இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் காலங்காலமாக மக்கள் மனங்களில் வருடிக்கொண்டிருந்த போதிலும் நடந்துள்ள சம்பவங்களைப் பார்த்தால் அவை அனைத்துமே உண்மைதான் என்றே நமக்கு எண்ணத் தோன்றுகிறது.

கடந்த காலப் பிரதமர்களும் இப்படித்தான் இரும்புப் பிடியில் நாட்டை வழி நடத்தினார்களா என்ற ஐயப்பாடும் கூட நமக்கு எழவே செய்கிறது.

நாட்டின் நீதித்துறையில் தலையிட விரும்பவில்லை என்று கூறி அவ்விருவரின் கோரிக்கைகளையும் நிராகரித்துவிட்டதாக முஹிடின் கூறுகிற போதிலும் மக்கள் மனங்களை இன்னமும் குழப்பிக் கொண்டிருக்கும் கேள்விகள் நிறையவே உள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளான முஹிடின் அப்போதே ஒரு முறை இது பற்றிப் பேசினார். ஆனால் தனது உதவியை நாடிய அந்த இருவர் யார் என்று தெரிவிக்கவில்லை.

அடையாளங்களை அம்பலப்படுத்தாவிட்டாலும் மக்களுக்குத் தெரியாதா என்ன? அது ஒரு பெரிய சிதம்பர ரகசியமா – மக்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு!

அந்த இருவருக்கும் உதவ மறுத்ததால்தான் தனது ஆட்சி கவிழ்ந்தது என்றும் கூட முஹிடின் கோடி காட்டினார்.

எது எப்படியாயினும் பாரிசான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மேகா ஊழல்வாதிகளின் தலைவிதி எப்படி மாற்றப்படும் என்பதை உணர்த்துவதற்கு இது ஒரு நல்ல பாடமாகும்.

நாட்டு மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் களவாடப்பட்டுள்ளது என அமெரிக்க உளவுத்துறை உள்படப் பல அனைத்துலகத் தரப்புகள் அம்பலப்படுத்திய போதிலும் பாரிசான் ஆட்சியின் போது யாருமே ஒன்றும் செய்ய இயலாமல் பரிதவித்த காலத்தை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படிப்பட்ட ஒரு ஆட்சி மீண்டும் வேண்டுமா என மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மேகா ஊழல்களில் ஊறிக் கிடக்கும் ஒரு நாடு எனும் கறை படிந்த அவப் பெயரைச் சுமந்து நிற்கும் மலேசியா தொடர்ந்து அப்படித்தான் இருக்க வேண்டுமா என வாக்காளர்தான் தீர்மானிக்க வேண்டும்.

பாரிசான் ஆட்சியின் போது அவ்வளவு ஊழல்களும் கண் முன்னே மூடி மறைக்கப்பட்ட போதிலும் பக்காத்தான் ஆட்சியின் போதுதான் தற்போதைய வழக்குகளுக்கெல்லாம் வழி பிறந்தது என்பதை யாருமே மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

பக்காத்தான் ஆட்சியிலும் குளறுபடிகள் நிறைய இருந்த போதிலும் ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது.

எனவே ஊழல்வாதிகளை நீதிமன்றத்தில் ஏற்றிய பக்காத்தான் வேண்டுமா, அரசியல் தவளைகளை அரவணைத்து மக்களின் விருப்பத்திற்கு விரோதமாக ஆட்சியைக் கவிழ்த்த பெரிக்காத்தான் வேண்டுமா அல்லது ஊழலில் நீந்தும் பாரிசான்தான் வேண்டுமா எனும் முடிவு மக்களின் வாக்குரிமையில்தான் உள்ளது.

பாரிசானின் ஊழல்வாதிகள் தங்களுடைய வழக்குகளைத் தாமதப்படுத்துவதிலும் அடுத்த பொதுத் தேர்தலை விரைவுபடுத்துவதிலும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜொகூர் மாநில இடைத் தேர்தலை அக்கூட்டணி ஒரு அளவு கோலாகப் பயன்படுத்த எண்ணியுள்ளது என்று நம்பப்படுகிறது.

ஜொகூரில் அவர்கள் வெற்றிபெற்றால் தங்களுடைய கைப் பாவையாக இருக்கும் பிரதமர் சப்ரியை உலுக்கி 15ஆவது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு உத்தரவிடுவார்கள் என்பது உறுதி.