குள்ளநரி அரசியலும் நாட்டு மக்களும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் மலேசியர்களிடையே இரண்டு விதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜொகூரைப் பொருத்த வரை முதன் முதலாக இந்தத் தேர்தலில் பதினெட்டு வயதினரின் வாக்களிப்பைக் காண்கிறது. ஜொகூரின் பதினெட்டு வயதினர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதல்ல; அவர்களால் வாக்களிக்க முடிகிறதே என்பதே அந்த மனநிலையின் அடிப்படை காரணம். அதே வேளையில், பல முறை தேர்தலில் வாக்களித்து பழக்கமாகிவிட்ட பழைய வாக்காளர்கள், இந்தத் திடீர் தேர்தல் உண்மையிலேயே தேவையா என்று கேட்கின்றனர். பதினெட்டு வயதினரின் உற்சாகத்தைப் பழைய வாக்காளர்களிடம் காண முடியவில்லை.

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல் என அரசமைப்புச் சட்டம் தெளிவாக இருக்கும்போது இந்தத் திடீர் தேர்தல் தேவையா என்பதே அவர்களின் வேதனை தொய்ந்த கேள்வி. சில காரணங்களை முன்னிட்டு துணைத்தேர்தல் நடத்தப்படுவது இயல்பு. ஆனால், அரசியல்வாதிகளின் விருப்பப்படி தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்துக்குப் புறம்பான நடவடிக்கை என மக்கள் கருதுவதானது மக்கள் நாட்டு நலனில் கரிசனம் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.

ஜொகூர் சட்டமன்றத் தேர்தலுக்கு வித்திட்டவர்கள் எந்த நோக்கத்துடன் இந்த நிலையை ஏற்படுத்தினார்கள் என்று கேட்பதிலும் தவறில்லை. ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஒரு கட்சி அல்லது அரசியல் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தனர். அந்த ஐந்தாண்டுகள் முடிவுறும் முன்னரே மக்களின் விருப்பத்துக்கு, மக்கள் இட்ட கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு தேர்தலைத் தருவித்தவர்கள் நியாயமானவார்களா, நேர்மையானவர்களா என்று மக்கள் கேட்பார்கள், கேட்கிறார்கள். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்களா என்று கேட்கத் தோன்றும். இந்த ஜொகூர் தேர்தலின்போதும் கேட்பார்கள்.

நிலையான, ஆக்ககரமாகச் செயல்படும் ஆட்சி தேவை என்று வலியுறுத்தும் அரசியல்வாதிகளே நிரந்தரமற்ற, குழப்பமான அரசியல் நிலைக்குக் காரணிகளாக இருக்கலாமா என்ற கேள்வி எழுந்திருப்பதையும் தட்டிக்கழிக்க முடியாது. இந்தத் திடீர் ஆட்சி மாற்ற கலாச்சாரம் புதிதல்ல என்றாலும் அரசியல்வாதிகள் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்கிறார்களா அல்லது சொந்த அரசியல் ஆதாயத்துக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்களா என்று கேட்கத் தோன்றும் அல்லவா?

இந்தக் காலகட்டத்தில், குறிப்பாக 2018ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது தேசிய முன்னணி கண்ட தோல்வி, துன் டாக்டர் மகாதீர் முகம்மது தலைமையில் நம்பிக்கை கூட்டணி கண்ட ஆட்சி மாற்றம், அந்த ஆட்சி இயல்பாகவே செயல்படாதவாறு விளைவிக்கப்பட்ட பல இடையூறுகள், நம்ப முடியாத அளவுக்கு ஏற்படுத்தப்பட்ட இன, சமய பிரச்சினைகள்; அடுத்து ஷெரட்டன் சொகுசு விடுதியில் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம், அதனைத் தலைமை ஏற்ற டான் ஶ்ரீ முகைதின் யாசின், மகாதீரின் தவறான அணுகுமுறை யாவும் மக்கள் கண்ட ஆட்சி மாற்றத்தை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட துரோகச் செயல்கள் என்று மக்கள் நம்புகிறார்கள்.

அதை உணராது செயல்படுவது முறையல்லவே! 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு காணப்பெற்ற நம்பிக்கை கூட்டணி, அது கண்ட வெற்றி, மக்கள் தந்த வெற்றி; மலேசியர்களை ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டவர்களை நினைக்கும்போது, மகாபாரதத்தில் வரும் ஒரு துணுக்கு நம்மைச் சிந்திக்கச் செய்கிறது.

புலி, பெருச்சாளி, குள்ளநரி, கீரி, ஓநாய் ஆகிய ஐந்து மிருகங்கள் ஒன்று கூடி உணவு தேடுவதைப் பற்றி விவாதித்தனர். பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த மான்தான் அவர்களின் குறி. ஆனால், இந்த மிருகங்களால் மானின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. குள்ளநரி ஒரு திட்டத்தை வெளியிட்டது. மான் தூங்கி கொண்டிருக்கும்போது பெருச்சாளி மானின் கால்களைக் கொறிக்க வேண்டும்.

அதனால் மானின் கால்களில் புண் உண்டாக, அதன் வேகமும் குறைந்துவிடும். அவ்வாறு வேகம் குறைந்த மானை, புலி துரத்திப் பிடித்து கொன்றுவிட முடியும். குள்ளநரியின் திட்டம் நிறைவேறியது. இறந்துவிட்ட மானைச் சாப்பிடுவதற்குத் ஐந்து நண்பர்களும் தயாராயினர். அப்போது, “எல்லோருமே குளித்துவிட்டு சாப்பிடுவதுதான் நல்லது! நீங்கள் போய்க் குளித்துவிட்டு வாருங்கள். நான் காவல் இருப்பேன்” என்றது குள்ளநரி. நண்பர்களும் குளிக்கச் சென்றனர்.

முதலில் திரும்பியது பெருச்சாளி. குள்ளநரி கவலையுடன் இருப்பதைப் பார்த்து, “ஏன் கவலையோடு இருக்கிறாய்?” என்று கேட்டது. அதற்கு குள்ளநரி, “நீ சாகப் போகிறாய்! புலிக்கு நோய்வாய்ப்பட்ட மானைத் திண்ண விருப்பமில்லையாம். அது உன்னைத் தின்ன திட்டமிட்டிருக்கிறது!” என்றதும் பெருச்சாளி ஓட்டம் பிடித்தது.

அடுத்து புலி திரும்பியதும், சோகமுடன் காணப்பட்ட குள்ளநரியிடம் கவலைக்கான காரணத்தைக் கேட்டது. “பெருச்சாளியின் திமிரைப் பார்த்தாயா? அதனுடைய முயற்சியில்லாமல் உன்னால் மானைப் பிடிக்க முடியாதாம். அதுமட்டுமல்ல, தன்னுடைய எச்சில் பட்டதை நீ சாப்பிட போகிறாயாம்…! இவ்வாறு பெருச்சாளி உன்னை அவமானப்படுத்தியது. என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை…” என்றது குள்ளநரி. புலிக்குப் பொல்லாத கோபம் வந்துவிட்டது. “இந்த மானைத் தொடமாட்டேன்” என்றது. தமக்குத் தேவையான உணவை வேட்டையாடி பெறும் ஆற்றல் தமக்கு இருக்கிறது என்று கோபத்துடன் சொல்லிவிட்டுப் போயிற்று.

அடுத்து வந்த ஓநாயும் குள்ளநரியின் சோக நிலையைப் பார்த்து, அதற்கான காரணத்தை வினவியபோது, “நமக்கு உணவு இருக்கிறது. புலி தன் குடும்பத்தை அழைத்து வந்து தம் குடும்பத்தோடு சாப்பிட போகிறதாம். அவர்கள் சாப்பிட்ட பிறகு, மிச்சம் என்ன இருக்க போகிறது? நாம் நால்வரும் ஒன்றுகூடி புலிகளை எதிர்க்க முடியுமா? முடியாது!” குள்ளநரி சொன்னதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த ஓநாய் அங்கிருந்து வெளியேறியது.

கீரி வந்தபோது குள்ளநரி கோபத்துடன் காணப்பட்டது. அதன் கோபத்திற்கான காரணத்தைக் கேட்டது கீரி.

“இந்த மானைக் கொன்று உண்ண வேண்டும் என்ற திட்டத்தை வகுத்தது நான். எனவே, இது எனக்கு மட்டும்தான் சொந்தம். மற்றவர்களோடு சண்டையிட்டுத் துரத்திவிட்டேன். என்னோடு சண்டையிட சவால்விடுகிறேன். நீ வென்றால் மானை நீயே சாப்பிட்டுக்கொள்…!” என்றது குள்ளநரி. அதன் சவாலை ஏற்றுக்கொள்ள மறுத்த கீரி அங்கிருந்து ஓடி மறைந்தது.

இதிலிருந்து என்ன புரிகிறது? உண்மையான அரசியலில் நாணயத்தை எதிர்பார்க்க முடியாது. பல்வேறு கொள்கைகளை இலட்சியங்களாகக் கொண்ட கட்சிகள் ஒன்று கூடினாலும் தமது நலனை மட்டும் காத்துக்கொள்ள முயலும். தமக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பங்காளி கட்சிகளைப் பலவீனப்படுத்தவும், தம் சுயநலத்தை விருத்தி செய்துகொள்ளவும் தயங்காது. இப்படிப்பட்ட சூழ்ச்சி நிறைந்த அரசியல்தான் இந்த நாட்டில் நடந்தேறியுள்ளது. மலேசியாவில் 2020ஆம் ஆண்டு ஷெரட்டன் சொகுசு விடுதி நாடகத்தின் பிரதிபலிப்பு மாநிலங்களிலும் காண முடிகிறது.

பெரும்பான்மையினரை எண்ணிக்கையால் வெல்ல முடியாது. பெரும்பான்மையினரின் பலத்தைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. ஆனால், பெரும்பான்மையினரே அதிகாரத்துக்காகப் போராடும்போது பெரும்பான்மையினரின் நலனில் கரிசனம் கொண்டிராமல் தங்களின் சொந்த நலனில்தான் ஆர்வமாக இருப்பார்கள். அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல்.

நெடுங்காலமாக வாக்களித்து ஏமாற்றமும், சலிப்பும் கண்ட மலேசிய குடிமக்களுக்கு ஒரு மாற்றத்தை, புது தெம்பை நல்கும் சக்தியாகப் பதினெட்டு வயதினரின் வரவு அமையலாம். அமைய வேண்டும். நெடுங்காலமாக ஆட்சியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் அவர்களுக்குச் சாதகமாக, உடந்தையாகச் செயல்பட்டோரின் வார்த்தையை, வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோன, ஒன்றும் செய்ய முடியாமல் வேதனையுடன் கண் கலங்கி நின்ற பழைய வாக்காளர்களைப் பார்த்தோம்.

இந்த நிலை மாற வேண்டும். அதற்கு வழிகாட்டும் சக்தி இளைஞர்களுக்கு உண்டு. ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள், அதிகாரத்தைப் பயன்படுத்துபவர்கள் மக்களுக்கும் நாட்டுக்கும் பலனளிக்கும் வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்; செயல்பட வேண்டும். அந்தப் புண்ணிய காரியங்களைச் செய்ய தவறியவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும். இதை நிறைவேற்றும் ஆற்றல் இளைய சமுதாயத்திற்கு உண்டு