இராகவன் கருப்பையா – கடந்த ஒரு மாத காலமாக உள்நாட்டு ஊடகங்களை ஜொகூர் மாநில இடைத் தேர்தல் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகிற போதிலும் தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்ஙின் பாசப் போராட்டம் ஒரு பிரதான அங்கமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன் தம்மிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட தமது 3 பிள்ளைகளுடன் மீண்டும் ஒன்று சேர அவர் பட்ட அவஸ்தை வேதனையும் நாடு அறியும்.
தேவையில்லாத அந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் அவருடைய முன்னாள் கணவர் நாகேஸ்வரன்தான் முன்னோடிக் காரணம் என்ற போதிலும் பெர்லிஸ் மாநில இஸ்லாமியத் தரப்பு, சமூக நல இலாகா, காவல் துறை மற்றும் சம்பந்தமில்லாத மேலும் பலருடைய தலையீடு நிலைமையை மோசமாக்கியதாகத் தெரிகிறது.
பாசத்திற்கும் மதத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பாசமே வெற்றி பெரும் எனும் அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றம் விவேகமானதொரு தீர்ப்பை வழங்கி சியூ ஹோங் குடும்பத்தினர் மட்டுமின்றி மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த நாட்டு மக்களின் நிம்மதி பெருமூச்சுக்கும் வழிக் கொணர்ந்தது.
குறிப்பிட்ட சில சமயத் தீவிரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அத்தீர்ப்பு மன நிறைவை அளிக்கவில்லை என்ற போதிலும் சியூ ஹோங்ஙும் அவருடைய 3 பிள்ளைச் செல்வங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து குதூகலமடைந்துள்ளனர். அதுதான் முக்கியம்.
ஒருதலை பட்ச மதமாற்றம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள போதிலும் புத்த மதத்தை சேர்ந்த தங்களுடைத் தாயாருடன் குழந்தைகள் மூவரும் முஸ்லிம்களாகவே வாழவேண்டும் என சில இஸ்லாமியத் தரப்பினர் பிடிவாதமாக வாதிடுவது வேடிக்கையாகத்தான் உள்ளது.
சுமார் 12 ஆண்டுகளாக இதே போன்ற ஒரு சமயச் சிக்கலில் தள்ளப்பட்டுப் பரிதவிக்கும் பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியையும் நாம் மறக்கலாகாது.
கடந்த 2009ஆம் ஆண்டில் ஒருதலை பட்சமாக முடிவெடுத்து தமது 3 பிள்ளைகளையும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றினார் இந்திராவின் கணவர் பத்மநாதன்.
முதல் 2 பிள்ளைகளும் இந்திராவிடம் வந்துவிட்ட போதிலும் அப்போது பச்சிளங் குழந்தையாக இருந்த பிரசன்னா டிக்சாவை மின்னல் வேகத்தில் அவர் கடத்திச் சென்று தலைமறைவானார்.
நீண்ட நாள் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2014ஆம் ஆண்டில் தமக்கு ஆதரவான நீதிமன்றத் தீர்ப்பை இந்திரா பெற்றுள்ள போதிலும் பிரசன்னாவை கட்டியணைக்கத் துடிக்கும் அவருடைய ஏக்கத்திற்கு இன்னமும் விடிவு காலம் பிறக்கவில்லை.
பத்மநாதன் கைது செய்யப்பட்டு, இந்திராவிடம் பிரசன்னா ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றத் தீர்ப்பு. ஆனால் காவல் துறையினர் அந்த ஆணையை மதித்ததாகத் தெரியவில்லை.
எப்படிப்பட்ட பலே கில்லாடிகளையும் நொடிப் பொழுதில் வளைத்துப் பிடிப்பதில் மலேசியக் காவல் துறையினர் வல்லவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். இருந்த போதிலும் 8 ஆண்டுகள் கடந்தும் பத்மநாபனைப் பிடிக்க இயலவில்லை என்று அவர்கள் கூறுவது கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகவே உள்ளது.
இந்திராவின் வழக்கறிஞர்கள் தக்க ஆதாரங்களை முன் வைத்த போதிலும் காவல் துறைத் தரப்பில் மெத்தன போக்குதான்.
சியூ ஹோங் விவகாரத்தில் பினேங் மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர் சதீஸ் முனியாண்டியும் மலேசியத் தமிழர் குரல் இயக்கத்தின் தலைவரும் நகர சபை உறுப்பினருமான டேவிட் மார்ஷலும் களமிறங்கிப் போராடியதை நாம் பாராட்டத்தான் வேண்டும்.
மதமாற்றம் சார்பாகக் கூட்டரசு நீதி மன்றம் ஒரு தீர்க்கமான முடிவைக் கொடுத்து விட்டது.
அதாவது ஒரு 18 வயதுக்கு உட்பட்ட ஒருவரைப் பெற்றோர்களின் அனுமதி (அல்லது பாதுகாவலரின் அனுமதி – அதாவது காட்டியன் என்று சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்) இல்லாமல் மத மாற்றம் செய்ய இயலாது. பெற்றோர்கள் என்றால் அம்மாவும் அப்பாவும் ஆகும் என்கிறது தீர்ப்பு.
ஆனால், மதவாதிகள் இன்னமும் பெற்றோர்களில் ஒருவர் அனுமதி அளித்தால் போதும் என்ற மாநில சட்டத்தைப் பின்பற்றினால் போதும் என்ற வகையில் அடம் பிடிப்பது, ஒரு பெரும்பான்மை இனத்தின் சிறுமையான சிந்தனை தன்மையைக் காட்டுகிறது.
ஒவ்வொரு முறையும் இது போன்ற வழக்குகளால் பெரும் பாதிப்பை அடைவது சம்பந்தப்பட்ட பெற்றோர்களும் குழந்தைகளும் ஆகும். அதோடு தேவையற்ற மன உலைச்சலை இரண்டு இனத்தவருக்கும் கொடுத்து, அதன் வழி இன ஒற்றுமைக்குப் பதிலாக இன பகைமை ஊடுருவ வழிவகுக்கிறது.
அரசாங்கமும் மாட்சிமை தாங்கிய மாமன்னரும் இதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். நுணுக்கமாகப் பேணி காக்க வேண்டிய இன ஒற்றுமை மட்டும்தான் நாட்டின் ஒட்டு மொத்த சுபிட்சத்தை வழங்கும்.