ஓர் ஏழையின் வீட்டை அபகரித்த வங்கி – பி.எஸ்.எம் கட்சியின் நாடு தழுவிய போராட்டம்

வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பி.40 மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவுதான். அந்தக் கனவை பல சவால்களுக்கு இடையில் நனவாக மாற்றுபவர்கள் சிலர்தான். அவர்களைப் பொருத்தவரை அது மிகப்பெரிய சாதனை என்பதை யார் மறுக்க முடியும்? அந்த சாதனையையும் கீழருப்பு வேலைசெய்து ஏழைகளிடமிருந்து தந்திரமாக பிடிங்கிக்கொள்ளும் வங்கி நிறுவனங்களை என்ன சொல்வது?

ஏழையின் சொத்தை பகிரங்கமாக பறிக்கும் வங்கி

தமிழ்ச்செல்விக்கு நியாயம் கிடைக்க வேண்டி மலேசிய சோசலிசக் கட்சி இன்று நடு தழுவிய நிலையில் அமைதி போராட்டத்தை முன்னெடுத்தது. கோலாலம்பூர், பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், ஜொகூர் ஆகிய மாநிலங்களின் CIMB  தலைமை வங்கிகளுக்கு முன்னாள் பதாகைகளை ஏந்தி தமிழ்ச்செல்விக்கு நீதி கேட்கப்பட்டது.

மேலும், ஏழைகளின் சொத்தை, பணத்தை திருடும்  வங்கியின், கார்ப்ரேட்முகம் பொது மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களுக்கு  இந்த அநீதி தொடர்பான கையேடுகள் வழங்கப்பட்டன.

தலைநகரில், சி ஐ எம் பி   தலைமை கட்டிடத்திற்கு முன்பு நடத்தப்பட்ட போராட்டத்தில்,   இது தொடர்பாக பேசிய பி.எஸ்.எம் கட்சியின் தேசிய துணைத் தலைவர் அருட்செல்வன், வங்கிக்கு இன்று எந்த ஒரு கடிதத்தையோ அறிக்கையோ கொடுக்கவில்லை. பலமுறை பேசியாகிவிட்டது, வங்கி நியாயமாக தீர்வை சொல்லவில்லை. அதனாலேயே தெருவில் இறங்கியிருக்கிறோம். இதன் பிறகும் வங்கி சுமூக நிலையை அறிவிக்காவிட்டால், இந்தப் போராட்டம் மீண்டும் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றார். தமிழ்ச்செல்வியை  வங்கி எப்படி ஏமாற்றியது?

2001- ஆம் ஆண்டில், தமிழ்ச்செல்வி  மற்றும் அவரது கணவர் சித்தார்த்தன் ஆகியோர் ஈப்போ மெங்லெம்புவில் ஒரு வீட்டை வாங்குவதற்காக பூமிபுத்ரா-காமர்ஸ் பேங்க் பெர்ஹாடில் RM73,700 கூட்டு வீட்டுக் கடனாகப் பெற்றனர்.  (பின்னர் CIMB பேங்க் பெர்ஹாட்  அந்த் வங்கியை வாங்கியது)  கணவன்-மனைவி இருவரும் MRTA இன்சூரன்ஸையும் வாங்கினார்கள்.

2019 இன் பிற்பகுதியில் சித்தார்த்தன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வேலையை இழந்தார்.  அதுவரை அவர்கள் வீட்டுக் கடனை முறையாக செலுத்தி வந்தனர். சித்தார்த்தன் நோயில் விழுந்தப் பிறகும் அவர்கள் முறையாகவே பணம் செலுத்தி வந்தனர். இடையில்  மூன்று  மாதங்கள் பணம் செலுத்துவதில் நிலுவை ஏற்பட்டது.

முனதாக, கணவரின் வருமான ஆதாரத்தை இழந்ததன் விளைவாக, மாதம் 1200 ரிங்கிட் சம்பளம் பெறும் பள்ளி துப்புரவுத் தொழிலாளியான தமிழ்ச்செல்வியால், மாதம் 700 ரிங்கிட் செலுத்தும் கடன் தொகையைக் குறைக்குமாறு கேட்டிருந்தார், ஆனால்  வங்கியால் அவர் புறக்கணிக்கப்பட்டார்.

இதன் காரணத்தினால் தமிழ்ச்செல்வி  கடினமாக உழைக்க வேண்டியிருந்தது மற்றும் முந்தைய மாதத்தை செலுத்த முடியாவிட்டால் இரட்டிப்பாக பணம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில் பிப்ரவரி 2020-ல்,  தனது கணவரை வேலை செய்ய முடியாது என்று அறிவித்து, சோக்ஸோ அவரது ஓய்வூதியத்திற்கு ஒப்புதல் அளித்தது.

தமிழ்செல்வி தனது கணவரின் நிலை குறித்து மெங்லெம்புவில் உள்ள சிஐஎம்பி வங்கியிடம் தெரிவித்து, சொக்சோ தொடர்பான ஆவணங்களையும் அவர்களிடம் கொடுத்துள்ளார். அதே நேரத்தில், அவர்,  தனது கணவரின் MRTA இன்சூரஸ்  மூலம் வீட்டுக் கடனில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்துவதற்கான செயல்முறைக்கு வங்கியில் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் வங்கி நிறுவனத்தில் அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று வங்கி கூறியது. MRTA இன்சூரன்ஸ் கிடைத்திருந்தால் அவர்களின் வீட்டுக்  கடனுக்கான நிலுவைத் தொகையை விட அதிகமாகவே ஈடுசெய்திருக்க முடியும்.

கோவிட் 19 காலத்தில் விற்பனை அறிவிப்பு

2020-ஆம் ஆண்டு கோவிட்19 தொற்றுநோயின் தொடக்க ஆண்டாகும், ஆனால் தம்பதியினரால் தங்கள் வீட்டுக் கடன்கள் அனைத்தையும் செலுத்த முடிந்தது. இப்படி இருக்கையில் செப்டம்பர் 2020 இல், அவர்களுக்கு விற்பனை அறிவிப்பு என்ற தலைப்பில் ஒரு கடிதம் வந்தது. தமிழ்ச்செல்வி அந்தக் கடிதத்தை,   தெளிவுபடுத்துவதற்காக CIMB வங்கிக்கு எடுத்துச் சென்றார்.

வங்கி அதிகாரியே ஏல அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்ததார்.  மேலும், தமிழ்ச்செல்வியின் வீட்டுக் கடனின் இருப்பு RM 2567 மட்டுமே, எனவே வங்கி  வீட்டை விற்க வாய்ப்பில்லை என்று கூறினார்.  அதோடு, வங்கி அதிகாரி தமிழ்ச்செல்வியை மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தியதோடு,  மேலும் அவ்விண்ணப்பத்தை  தலைமையகத்திற்கு கொண்டு சேர்க்க அவருக்கு உதவினார். அதனைத் தொடந்து தலைமையகத்தில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. தமிழ்ச்செல்வியும் அவரது கணவரும் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக எண்ணி,  தொடர்ந்து வீட்டுக் கடன் செலுத்துதலைத் தொடர்ந்தனர்.

பிப்ரவரி 2021- இல் சித்தார்த்தன் காலமானார். சித்தார்த்தன் இறக்கும் வரை CIMB அவர்களின் மாதாந்திர வீட்டுக் கடனைத் தொடர்ந்து பெற்று வந்தது. சித்தார்த்தன் இறந்த   ஐந்து நாட்களுக்குப் பிறகு, தமிழ்ச்செல்வி தனது கணவரின் மரணத்தைத் தெரிவிக்க சிஐஎம்பி வங்கிக்குச் சென்றார். தலைமையகத்துடன் கலந்துரையாடிய பின்னர், CIMB  ஊழியர்கள் தமிழ் செல்வியிடம், வீட்டுக்கடனை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினர்.

ஏலத்தில் விற்கப்பட்டது

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதே நாளில், இரவில், தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், தமிழ்ச் செல்வியிடம் ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயத்தைச் சொன்னார் – அவருடைய வீடு ஏற்கனவே ஏலத்தில் விற்கப்பட்டது என்றும்,  மேலும் அவர் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

இது இப்படி இருக்க,  10 நாட்களுக்குப் பிறகு, தமிழ்ச் செல்விக்கு CIMB தலைமையகத்தில் இருந்து தனது வீட்டுக் கடன் முழுமையாகத் தீர்த்துவிட்டதாகக் கடிதம் ஒன்று வந்தது.  இதன் மூலம் அந்த வீடு இன்னும் அவருடையதுதான் என்பதுடன்,  தமிழ்ச்செல்வியின் வீடு வேறு ஒருவருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு முரணானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால்  தமிழ் செல்வியின் வீடு உண்மையில் அக்டோபர் 2020 இல் ஆன்லைன் ஏலத்தின் மூலம் RM 140,000 க்கு விற்கப்பட்டதை சில நாட்களுக்குப் பிறகு உறுதிபடுத்தப்பட்டு  அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தார்.

மேற்கூறிய சம்பவங்கள் வழி சிஐஎம்பி ஒரு பெரிய தவறைச் செய்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

  • கடுமையான நோய் தொற்றுக் காலத்தில்,  3 மாதங்கள் தவணை செலுத்தத் தவறியதற்காக ஏல நடைமுறையை நடத்தியது.

  • கோவிட் தொற்றுநோய்க்கு நடுவில் ஏல செயல்முறையை இயக்கியது.

  • சித்தார்த்தனின் இயலாமை குறித்து தெரிவிக்கப்பட்ட பின்னரும் MRTA க்கு விண்ணப்பிக்கத் தவறியது – CIMB மெங்லெம்பு கிளையில் தமிழ்ச்செல்வி விற்பனை அறிவிப்புக் கடிதத்தைக் கொண்டு சென்றபோது தவறான ஆலோசனையை வழங்கியது.

இந்த எல்லா தவறுகளுக்கும் வங்கி பொறுப்பேற்று வீட்டை திரும்ப வாங்கி தமிழ்ச் செல்வியிடம் ஒப்படைக்க வேண்டும். கடன் பாக்கி இருந்தால் திருப்பிச் செலுத்த தமிழ்ச் செல்வி தயாராகவும் இருக்கிறார். இந்நிலையில் தமிழ்ச்செல்வியின் வீட்டை வாங்கிய நபரும் வீட்டை வங்கியிடமே விற்க முடிவெடுத்திருக்கிறார்.