இந்தியர் அல்லாதார் கையில் மீண்டும் பரிதவிக்கும் மித்ரா

இராகவன் கருப்பையா – மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான ‘மித்ரா’ தொடக்க காலத்திலிருந்தே சில பொறுப்பற்ற அரசியல்வாதிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு படும் பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

அப்பிரிவு இன்று வரையிலும் அங்குமிங்கும் பந்தாடப்பட்டு அல்லோகலப்படுவதைப் பார்த்தால் நம் சமூகத்தினர் எதிர் நோக்கும் சாபக்கேடுக்கு ஒரு முடிவு இல்லாததைப் போல்தான் தெரிகிறது.

ஏறத்தாழ 65 ஆண்டுகளுக்கும் மேல் எண்ணற்றப் பிரச்சனைகளையும் சொல்லொன்னா துயரங்களையும் சுமந்து நிற்கும் நம் சமூகத்திற்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் 100 மில்லியன் ரிங்கிட் வெறும் தூசுதான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

இருந்த போதிலும் அந்த சிறிய தொகையையும் கூட முறையாக நிர்வகித்து தேவைப்படுவோருக்கு, குறிப்பாக பி40 தரப்பினருக்கு பிரித்துக் கொடுப்பதில் நிலவும் குளறுபடிகள் ஒரு வரையறை இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டில் மகாதீர் 2ஆவது தடவையாக பிரதமர் பொறுப்பேற்ற போது ஒற்றுமைத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட வேதமூர்த்தியிடம் மித்ரா ஒப்படைக்கப்பபட்டது யாவரும் அறிந்த ஒன்றுதான்.

எனினும் 22 மாதங்களில் அந்த அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அட்சியமைத்த முஹிடின், ஒற்றுமைத் துறை அமைச்சராக ஹலிமா சிடிக்கை நியமித்த போது இயல்பாகவே மித்ரா அவருடைய அதிகாரத்தின் கீழ் வந்தது.

ஏறத்தாழ் 17 மாதங்களில் அந்த அரசாங்கமும் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அட்சியமைத்த இஸ்மாயில் சப்ரி, ஹலிமா சிடிக்கை அதே பொறுப்பில் நிலை நிறுத்தியது நம் அனைவருக்கும் வருத்தமளித்த போதிலும் வேறு வழியின்றி அந்த நியமனத்தை நாம் ஏற்றுக் கொண்டோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தின் போது மித்ரா குறித்து கேள்வி எழுப்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹலிமா முறையாக பதிலலிக்காமல் அலட்சியப்படுத்தியதையும் நாம் இன்னும் மறக்கவில்லை.

“போய் தோசை சாப்பிட்டுவிட்டு வாருங்கள்,” “உட்காருங்கள், ஹீரோவாகக் காட்டிக் கொள்ள வேண்டாம்,” போன்றெல்லாம் வசைப்பாடி நம் சமூகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களை அவர் கேவலப்படுத்தினார்.

அதன் பிறகு சிறிது காலம் பிரதமர் துறை அமைச்சின் கீழ் இருந்த மித்ரா தற்போது பழையபடி ஒற்றுமைத் துறை அமைச்சுக்கு மாற்றப்பட்டு மீண்டும் இந்தியர் அல்லாத ஒருவரின் கையில் மாட்டிக் கொண்டு பரிதவிக்கிறது.

“மித்ராவை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது, எனக்கு அதில் ஆர்வமும் இல்லை,” என அதன் அமைச்சர் ஏரன் ஆகோ டாகாங் செய்த அறிவிப்பு நம் சமூகத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏரன் மீதும் நாம் எல்லா பழியையும் சுமத்திவிட முடியாது. அவர் ஒரு கிழக்கு மலேசியர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இருந்த போதிலும் நம் சமூக நலனைப் பேண ஒரு சில இந்திய அரசியல்வாதிகள் மட்டுமின்றி எண்ணற்ற கல்விமான்களும் சமூக ஆர்வலர்களும் தேர்ச்சி பெற்ற பல அறிஞர்களும் தயாராய் இருக்கும் பட்சத்தில் 2ஆவது தடவையாக இந்தியர் அல்லாத ஒருவரிடம் மித்ரா மாட்டிக் கொண்டு பரிதவிப்பதுதான் நமக்கு வேதனையாக உள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களும் சில மேலவை உறுப்பினர்களும் அண்மையில் ஏரனையும் துணையமைச்சர் சரஸ்வதியையும் சந்தித்து மித்ரா குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அச்சந்திப்பில் எவ்விதத் தீர்வும் காண முடியாத பட்சத்தில், மித்ராவின் உதவிக்காக காத்திருக்கும் ஆயிரக் கணக்கானோரின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. அதிகாரப் பூர்வ செய்திகள் வெளிவராவிட்டாலும், அக்கூட்டம் பெரிய சலசலப்பில்தான் முடிந்தது என்று நம்பப்படுகிறது.

மித்ரா குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட தலைநகர் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரனும் கூட அதிகாரப்பூர்வமாக இன்னமும் அதிகாரம் வழங்கப்படாத நிலையில் இவ்விவகாரத்தில் இலக்கற்று பரிதவிப்பதாகத் தெரிகிறது.

இவ்வாண்டின் முதல் கால் பகுதி கடந்துவிட்ட நிலையில் இதற்கு யார்தான் தீர்வு காண்பது? உதவிக்காக ஏங்கித் தவிக்கும் நம் சமுதாயத்திற்கு எப்போதுதான் விமோசனம் பிறக்கும்?