இராகவன் கருப்பையா – கடந்த 2007ஆம் ஆண்டில் தலைநகரில் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராஃப் பேரணியைத் தொடர்ந்து தனது செல்வாக்கை இழந்த ம.இ.கா. நம் சமூகத்தினரிடையே அதன் அடையாளத்தை மீண்டும் வெளிக் கொணர போராடிக் கொண்டிருப்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.
அதன் பிறகு நடைபெற்ற 4 பொதுத் தேர்தல்களிலும் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான’க் கதையாக சன்னம் சன்னமாக தேய்மானம் கண்ட அக்கட்சி தற்போது நம் சமூகத்தைச் சார்ந்த பெரும்பாலோரின் ஆதரவை முற்றாக இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
துரித மாற்றம் கண்டு வரும் நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் ம.இ.கா. மட்டுமின்றி ம.சீ.ச. மற்றும் கெராக்கான் கட்சிகளோடு அம்னோவுக்கும் கூட அதே நிலைதான் என்பதை நம்மால் காண முடிகிறது.
இத்தகைய சூழலில் ம.இ.கா. தன்னை ஒரு பெரும் உருமாற்றத்திற்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என வட மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர் ஒருவர் அண்மையில் கருத்துரைத்தார்.
ம.இ.கா. நாடு தழுவிய நிலையில் கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய கட்சி. எனினும் அக்கட்சிக்கு அரசியல் எதிர்காலம் மிகவும் மோசமான அளவுக்கு சுருங்கிவிட்டதால் சக்தி மிக்க ஒரு அரசு சாரா இயக்கமாக உருமாற்றம் காண்பது பற்றி அக்கட்சி பரிசீலிக்க வேண்டும் என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த முன்னாள் விரிவுரையாளர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் தேசிய முன்னணியில் முக்கிய பங்காற்றிய கெராக்கான் கட்சி தற்போது ஒரு தொகுதி கூட தன் வசம் இல்லாமல் பெரிக்காத்தானில் இணைந்துள்ளது. தற்போதைய சூழலில் அதன் நிலை சற்று பாதுகாப்பாக இருப்பதைப் போல்தான் தோன்றுகிறது.
ம.சீ.ச. 2 தொகுதிகளுடனும் ம.இ.கா. ஒரேயொரு தொகுதியுடனும் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. அடுத்த பொதுத் தேர்தலில் இவ்விரு கட்சிகள் மட்டுமின்றி அம்னோவும் கூட முற்றாக துடைத்தொழிக்கப்படக் கூடிய சாத்தியத்தை நாம் நிராகரிக்க முடியாது.
பள்ளத்திலிருந்த மீண்டெழ அம்னோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நம்மால் உணர முடிகிறது. ஆனால் ம.இ.கா. என்ன செய்கிறது என்று தெரியவில்லை.
நம் சமூகத்தின் ஆதரவை மீட்டெடுக்கும் முயற்சிகளை முடுக்கிவிடுவதற்கு பதிலாக மேலும் மேலும் அதிகமான வெறுப்பைதான் அக்கட்சி தேடிக்கொள்வதைப் போல் தெரிகிறது. அண்மைய சம்பவமொன்று இதற்குச் சான்று.
உள்நாட்டில் ஒரு சில நபர்களால் இந்து சமயம் இழிவுபடுத்தப்படுவதைக் கண்டும் காணாததைப் போல இருந்து விட்டு, அயல் நாட்டில் சமீபத்தில் இஸ்லாத்தை அவமதித்துப் பேசிய ஒருவரை கண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பிய ம.இ.கா.வின் தகவல் பிரிவுத் தலைவர் தினாளன் பலரின் கண்டனத்திற்கு ஆளானார்.
மலாய்க்காரர்கள் மத்தியில் தன்னை ஒரு ஹீரோவாக அவர் காட்டிக் கொள்ள முனைந்த போதிலும், அவருடைய போக்கு ம.இ.கா.விற்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்றால் அது மிகையில்லை.
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்பதற்கு ஏற்ப, தெரிந்தோ தெரியாமலோ தினாளன் தனது கட்சியை மேலும் ஒரு பாதாளக் குழியில் தள்ளிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த பொதுத் தேர்தலில் எண்ணற்ற ம.இ.கா. உறுப்பினர்களே எதிர்கட்சிகளுக்கு வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் இந்நிலை மேலும் மோசமாகக் கூடும்.
அதுமட்டுமின்றி, புதிதாக உதயம் கண்டுள்ள MIPP எனப்படும் ‘மலேசிய இந்திய மக்கள் கட்சி’ மற்றும் ‘உரிமை’, ஆகிய கட்சிகள் பெரிக்காத்தானுடன் கூட்டு சேரும் பட்சத்தில், அடுத்த பொதுத் தேர்தலில் ம.இ.கா. சுவடு தெரியாமல் போகக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
எனவே அரசியல் அபிலாஷைகளை கைவிட்டு பலமிக்க ஒரு அரசு சாரா அமைப்பாக மாறினால் நம் சமூகத்தினருக்கு அக்கட்சி சேவையாற்ற இயலும் என்று அந்த மூத்த அரசியல் பார்வையாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்திற்கும் நம் சமூகத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்து ஆக்ககரமான வகையில் செயல் திட்டங்களை அமுலாக்கம் செய்ய ம.இ.கா.வால் உதவ இயலும் என, ஒரு கல்விமானான அவர் கருத்துரைத்தார்.