சமஸ்கிருதம் கற்பதைத் தடுப்பது சரியா?

கி.சீலதாஸ் – ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதைத் தடுப்பது, எதிர்ப்பது, குறைகூறுவதானது அறிவு வளர்ச்சியில் முன்னேற்றத்தை விழையும் அறிவுடையோரின் உயரிய, உன்னதமான போக்காகக் கருத முடியாது. வேறொரு மொழியைக் கற்பதை எதிர்ப்பதானது பிற்போக்கு மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நாட்டில் தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் எனக் கோருவோர் முன்வைக்கும் காரணம் என்ன? பல்வேறு தாய்மொழிப் பள்ளிகள் அழிக்கப்பட்டால் தான் தேசிய ஒற்றுமையைக் காண முடியும் என்ற தவறான நம்பிக்கையே. அதுபோலவே சமஸ்கிருதம் கற்பதைத் தடுப்பது, எதிர்ப்பது அறிவு வளர்ச்சியைத் தடுக்கும் செயலாகும்.

எனவே, தாய்மொழிப் பள்ளிகளை மூட கூறுவோரின் மனநிலைக்கும் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதைத் தடுக்க நினைப்போரின் மனநிலைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இவ்விரு குழுமத்தினரும் போலி காரணங்களை வைத்துக் கொண்டும் அர்த்தமற்ற கருத்துகளுக்கு இடமளிக்கின்றனர் என்பதுதான் உண்மை.

அறிவுலகம் இன்றளவும் எட்டப்படாத பிரதேசங்களைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களே மொழியை ஒரு பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அரசியல் நடத்துவார்கள். அவர்களின் அறிவு அவ்வளவுதான்.

சமஸ்கிருதம் கற்பதை எதிர்க்கும் குழுவினர் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் “தமிழ் எங்கள் உயிர்” நிதியை உருவாக்கி மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பிரிவு ஏற்பட வழிகாட்டினார் என்ற உண்மையைத் துணையாக அழைப்பது விசித்திரமாகும்.

அது அவர் தமிழுக்கு செய்த தொண்டு. ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியாதுதான். அது அக்காலத்துக்கு ஏற்ற முடிவு. அது சமஸ்கிருதத்தை எதிர்த்ததாகக் கூறுவது பொருத்தமில்லாத வாதமாகும்.

இங்கே ஓர் உண்மையை மனதில் கொள்வது அறிவுடையோரின் பொறுப்பாகும். டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பி. அவர் சமஸ்கிருதம் பயில முற்பட்டபோது அவர் ஒரு தலித் என்பதால் அது மறுக்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் ஆட்சி மொழிகள் பற்றி கேள்வி எழுந்தபோது சமஸ்கிருதம் இணைத்துக் கொள்வதை ஆதரித்தார். தமக்கு மறுக்கப்பட்ட மொழியை அவர் வெறுக்கவில்லை.

ஒரு வேளை தமக்கு அம்மொழியின் புலமை பெறுவதைத் தடுத்தவர்களின் மீது நல்ல அபிப்பராயம் கொண்டிருக்க மாட்டார் எனலாம். ஆனால், அதுவல்ல முக்கியம். மொழிதான் முக்கியம். மொழி வைத்து அதிகாரம் செலுத்துவோர், மொழியை வைத்து அதிகாரத்தைத் தற்காத்துக் கொள்ள நினைப்போர் முக்கியமல்ல. அவர்கள் மறைந்து விடுவார்கள். மொழி அழியாது.

சமஸ்கிருதத்தைச் செத்த மொழி என்று கூறுவதும் உண்டு. இது மொழியின் உண்மையான சக்தியை, தரத்தை உணராதவர்களின் பிதற்றலாகும். காரணம், எல்லா மொழிகளும் செத்த நிலையில்தான் இருக்கின்றன. எப்பொழுது ஒரு மொழியின் சொல் உச்சரிக்கப்படுகிறதோ அப்பொழுது தான் அது உயிர் பெறுகிறது. இது குறித்து 27.08.2017இல் தமிழ் மலரில் வெளியான என் கட்டுரையைக் காண்க.

சமஸ்கிருதப் போதனையை எதிர்ப்போர் உலகில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது ஆச்சரியமே. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் சமஸ்கிருதம் கற்பதில் மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது.

இந்தியாவில் கூட பல மாநிலங்களில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் சமஸ்கிருதத்தில் செய்தி வாசிக்கப்படுபதும் சகஜமாகி வருகிறது. சமஸ்கிருதத்தைக் கற்றுக் கொள்வதில் இந்திய முஸ்லிம்களும் உற்சாகம் கொண்டிருப்பது அது மொழிக்குத் தரும் மரியாதை அல்லது பல மொழிகளைக் கற்பதால் எல்லையற்ற அறிவுலகப் பயணத்தை மேற்கொள்ள உதவும் என்பதைப் புரிந்து கொண்ட நல்ல முயற்சியைக் குறிக்கிறது.

இங்கே ஒரு வரலாற்று உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். சமஸ்கிருத எதிர்ப்பு இயக்கத்தைத் தொடக்கி வைத்தவர் கால்டுவெல் என்ற ஆங்கிலேயர். இதற்குத் துணையாக ஆரியப் படையெடுப்பு என்ற பொய்யான தகவலைப் பரப்புவதற்குக் காரணியாக இருந்தவர்களில் ஜெர்மனியரான மெக்ஸ் முல்லரும் ஒருவர். ஆனால், அது பொய்யான கருத்து என்பதை உணர்ந்து அவர் மரணத்திற்கு முன்னமே அதை கைவிட்டார். ஆனால், அதே பொய்யான கருத்தைக் கைவிட மறுக்கும் போலி பகுத்தறிவாளர்கள் கால்டுவெலுக்கு சிலை அமைத்துப் போற்றும் நிலையைச் சகித்துக் கொள்ளும் பரிதாப நிலைக்குத் தமிழர்கள் உந்தப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

தமிழவேள் கோ. சாரங்கபாணி சமஸ்கிருதம் கற்பதைத் தடுக்கவில்லை. எதிர்க்கவும் இல்லை. தமிழுக்கு இடம் கண்டார். ஆனால். அவரின் வாரிசுகள் எவரும் தமிழில் புலமை கொண்டவர்கள் அல்லர்.

இந்நாட்டில் சமஸ்கிருத எதிர்ப்பு நடவடிக்கையானது தமிழ் நாட்டு திராவிட இயக்கத்தின் கொள்கையைப் பின்பற்றுவதாகும். அந்தக் கொள்கை தமிழ் சமுதாயத்தை எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதை உணர மறுப்பது தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.

பல மொழிகளைக் கற்பித்தல் தவறு இல்லை. பல மொழிகளைக் கற்றவன் சோடையாவதில்லை. சமஸ்கிருதம் கற்பதால் எவரும் தங்களின் தாய் மொழி அடையாளத்தை இழந்துவிட மாட்டார்கள். ஆங்கில மோகம் தாய் மொழி அடையாளத்தை அழித்தது உண்மை. ஆங்கிலம் வேறு. சமஸ்கிருதம் தமிழோடு உறவு உள்ள மொழி. அதைக் கற்பதால் தமிழனின் அறிவு வளர்ச்சி வலுவடையுமே அன்றி குன்றாது!

மொழியை அரசியலாக்குவோர் அறிவு வளர்ச்சியைத் தடுக்கின்றனர் என்றால் அதுவும் உண்மையே!

இந்தச் சமஸ்கிருத மொழி எதிர்ப்பு கலாச்சாரம் குறுகிய மனப்பான்மையை வளர்க்கிறதே ஒழிய ஆழமான அறிவு திறனை வளர்க்கும் தரத்தைக் கொண்டிருக்கவில்லை. உலகமே ஒரு கிராமம் என்ற எண்ணம் பரவும் வேளையில் குறுகிய எண்ணத்தை வளர்க்க முற்படுவோரை நிராகரிப்பதே இன்று தேவைப்படும் தூரநோக்கு.