இந்து சமயத்தின் நலனைக் காப்பதில் நமது அரசியல்வாதிகளின்  நிலை ஏமாற்றமாக உள்ளது

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் ஒவ்வொரு முறையும் மற்ற சமயத்தினரால் இந்து மதம் கேவலப்படுத்தப்படும் போது சாதாரண மக்கள்தான் அதற்கெதிராக உக்கிரமாகக் குரல் எழுப்புகின்றார்களேத் தவிர நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்களின் மெத்தனப் போக்கு இன்னமும் வருத்தமளிக்கக் கூடிய வகையில்தான் உள்ளது.

நம் சமயத்தை இழிவுபடுத்துவோர் மீது பெரும்பாலான சமயங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை எனும் குறைபாடு அண்மைய காலமாக நம்மை வேதனைப்படுத்துகிறது என்பதை மறுக்க இயலாது.

அத்தகைய அறிவிலிகளுக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் காவல் நிலையங்களில் தொடர்ந்து  புகாரளிக்கப்பட்டும் எல்லாமே ‘செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான்’ இதுவரையில் இருந்து வருகிறது.

‘ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது’ என்பதற்கு ஏற்ப சாமானிய  மக்கள் செய்யும் புகார்கள் மீது பெரும்பாலான சமயங்களில் தீவிர கவனம் செலுத்தப்படுவதில்லை. மாறாக அவை உதாசினப்படுத்தப்படுவதுதான் வழக்கமாக உள்ளது.

இனம், மதம், அரசாட்சி, ஆகிய மூன்று விஷயங்களையும் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசக்கூடாது என அரசாங்கம் தடைவிதித்துள்ள போதிலும் குறிப்பிட்ட சில தரங்கெட்ட ஜென்மங்கள் மிகவும் துணிச்சலாக தொடர்ந்து இந்து மதத்தை  இழிவுபடுத்தி பேசிக் கொண்டுதான் இருக்கின்றன.

இதனால் அவர்களுக்கு என்னதான் நன்மை கிடைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் இந்து மதத்தை இழிவுபடுத்துவது அவர்களுக்குக் ‘கிள்ளு கீரை’யாகவே இருந்து வருவது நமக்கு வேதனையாகத்தான் உள்ளது.

நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் தலைவர்கள் இத்தகைய நபர்களை தனிப்பட் முறையில் சாடுவது அல்லது அவர்களுக்கு எதிராக கண்டன அறிக்கை வெளியிடுவது போன்ற செயல்கள் எல்லாம் காலத்திற்கு ஒவ்வாத ஒன்றாகிவிட்டது – அதனால் ஒரு பிரயோஜனமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

நம் அரசியல் தலைவர்கள் இது சார்பாக ஒரு வியூகத்தை உருவாக்க வேண்டும். அதில் நமது நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும், எந்த வகையான நடவடிக்கைகளை எடுப்பது, எவை தகுந்த பலனை அளிக்கும் என்ற வினாக்களுக்கு தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வியூகத்தை உருவாக்க வேண்டும்.

ஒன்றுதிரண்டு காவல் துறை தலைவர் அல்லது பிரதமரை சந்தித்து இதற்கு தீர்க்கமான ஒரு முடிவெடுப்பதற்கு வகை செய்ய வேண்டும்.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமுதாய நலன்களை கவனிக்காமல் பூனைகளாக பதுங்கிக் கிடக்கின்றனர் எனும் குறைபாடு நம் சமூகத்தினரிடையே பரவலாக நிலவுவதால் குறைந்த பட்சம் இதுபோன்ற விவகாரங்களையாவது கையிலெடுத்து தீர்வு காண முற்பட வேண்டும்.

நம் சமூகத்தைச் சார்ந்த பல அரசு சாரா இயக்கங்களின்  பிரதிநிதிகள் இவ்விவகாரம் தொடர்பான மகஜர் ஒன்றை இம்மாதம் 1ஆம் தேதியன்று சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர். கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த பழங்குடி மக்களின் பிரதிநிகளும் அந்நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களும் கூட, அரசியல்வாதிகள் ஏன் மவுனமாக இருக்கின்றனர் எனும் ஆதங்கத்தைதான் அன்றைய தினம் வெளிப்படுத்தினார்கள்.

இந்நாட்டில் சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்களை அரசியல்வாதிகளால் மட்டுமே ஆக்ககரமாக கையாள இயலும் என்பதற்கு அண்மைய ‘காலுறை’ சம்பவம் நல்லதொரு உதாரணம்.

அவ்விவகாரத்தை பூதாகரமாக்கிய அம்னோவின் இளைஞரணித் தலைவருக்கு அவருடைய கட்சி ஒட்டு மொத்த ஆதரவையும் வழங்கியது. அவ்விஷயம் பேரரசரின் கவனத்தையும் ஈர்த்ததை நம்மால் காண முடிந்தது.

ஒரு ‘குப்பனோ சுப்பனோ’ அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தால் அனேகமாக அப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்காது என்று உறுதியாகச் சொல்லலாம்.

எனவே இந்து மதத்தை இழிவுபடுத்துவோருக்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென்றால் அதற்கான போதிய பலம் நம் அரசியல்வாதிகளிடம்தான் இருக்கிறது என்றாலும், வெகுசன மக்களின் ஒருங்கிணைப்பும், அழுத்தமும் அத்தியாவசியமாகிறது.