வீராங்கனை சிவசங்கரி இன ஒதுக்கலுக்கு பலியாகக்கூடாது

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் பல வேளைகளில் நம் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டாளர்கள் இன பாகுபாடின்றி, நியாயமாக கவனிக்கப்படுவதில்லை எனும் குறைபாடு நீண்ட நாள்களாகவே இருந்து வருகிறது.

எவ்வளவுதான் சிறப்பான சாதனைகள் புரிந்தாலும் பல வேளைகளில் அவர்கள் போற்றப்படுவதிலை, பேணப்படுவதில்லை. மாறாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர்களுடைய எதிர்காலம் ஒடுக்கப்பட்டு  முடக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 60ஆம் ஆண்டுகளில் ஓட்டப் பந்தயத் துறையில் அனைத்துலக நிலையில் நாட்டின் பெயரை உச்சத்திற்கு கொண்டு சென்ற ஜெகதீசன் மற்றும் ராஜாமணி காலத்திலிருந்து பல்வேறு விளையாட்டுகளில் நம் வீரர்கள் கோலோச்சி வந்தனர்.

எனினும் கடந்த சுமார் 40 ஆண்டுகளாக உருவாகி வரும் அரசியல் மாற்றங்களினால் நம் சமூகத்தைச் சார்ந்த விளையாட்டாளர்களுக்கு பல வேளைகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த உண்மைதான்.

அதனால் நம் விரர்களுக்கு சன்னம் சன்னமாக ஆர்வம் குன்றி, இந்நாட்டின் விளையாட்டுத் துறையில் இப்போது படு மோசமான நிலையில் பின்தங்கியிருக்கிறோம்.

இப்படிப்பட்ட சூழலில்தான் கெடா மாநிலத்தைச் சேர்ந்த சிவசங்கரி சுப்ரமணியம் சுவர்பந்து(ஸ்குவாஷ்) விளையாட்டில் தற்போது உலகை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார்.

அனைத்துலக தர வரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள அவர் இவ்வாரம் லண்டனில் நடந்த ‘கிளாசிக் ஷகுவாஷ்’ உயர்நிலை சுவர்பத்துப் போட்டியில் தொடர்ந்தாற் போல் 3 நாள்களாக சர்வதேச வீராங்கனைகள் மூவரை அடுத்தடுத்து வீழ்த்தி உலகின் அனைத்து விளையாட்டு ஆர்வளர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

நியூயார்க்கில் உள்ள கோர்னெல் பல்கலைக் கழகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த அந்த 25 வயது வீராங்கனை அப்போட்டிகளின் காலிறுதி சுற்றில் உலகச் சாம்பியனான எகிப்தின் நூர் ஷெர்பினியை வீழ்த்தினார்.

பிறகு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 4ஆம் நிலை ஆட்டக்காரரான பெல்ஜியம் நாட்டின் நெலி கிலிஸை தோற்கடித்து, இறுதியாட்டத்தில் மற்றொரு எகிப்தியரான உலகின் 2ஆம் நிலை ஆட்டக்காரர் ஹானியா ஹம்மாமியை மண்ணைக் கவ்வச் செய்தார்.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்து வரலாறு படைப்பார் என்று எதிர்பார்க்கப்படும் சிவசங்கரி, பிரதமர் அன்வார், துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ உள்பட இலட்சக் கணக்கானோரின் பாராட்டு மழையில் தற்போது நனைந்து கொண்டிருக்கிறார்.

எனினும் கடந்த காலங்களில் கால்பந்து, ஓட்டப்பந்தயம், ஹாக்கி மற்றும் பூப்பந்து போன்ற விளையாட்டுகள் மட்டுமின்றி வின் வெளித்துறையிலும் கூட நம் வீரர்களில் பலர் ஓரங்கட்டப்பட்டதைப் போன்ற நிலை சிவசங்கரிக்கும் ஏற்படாமலிருப்பது அவசியமாகும்.

ஓட்டப்பந்தயத் துறையில் காலங்காலமாக எவ்வாறெல்லாம் நாம் ஒதுக்கப்பட்டு வாய்ப்புகளை இழந்தோம் என்பதை ஓய்வு பெற்ற எண்ணற்ற விரர்கள் விவரித்துள்ளனர். முளையிலேயே கிள்ளியெறியப்பட்ட கதைகள் எல்லாம் ஏராளம்.

கடந்த 1998ஆம் ஆண்டு தலைநகரில் நடைபெற்ற கொமன்வெல்த் போட்டிகளின் பெருநடை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சரவணனுக்கு வாக்களித்தபடி வழங்கப்பட வேண்டிய ‘பெர்டானா கார்’ பரிசாக கொடுக்கப்படவில்லை எனும் உண்மையை நம்மில்  பலர் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

பத்திரிகையாசிரியர் ஆதி குமணனின் ஏற்பாட்டில் பொது மக்களிடமிருந்து நிதி வசூலிக்கப்பட்டு அவருக்கு ஒரு கார் வாங்கிக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கால்பந்துத் துறையில் நாம் எதிர்நோக்கிய அவலங்கள் குறித்து அண்மையில் மறைந்த முன்னாள் தேசிய வீரரும் பயிற்றுநருமான பி.சத்தியநாதன் மிகத் துணிச்சலாக, அப்பட்டமாக போட்டு உடைத்தார்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் வின்வெளிக்குச் செல்வதற்கு முதல் நிலையில் தேர்வு பெற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட வனஜா சிவ சுப்ரமணியம், இன ஒதுக்கலுக்கு ஆளான தமது அனுபவத்தை அண்மையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விவரித்திருந்தார்.

தமது இதயத்தை, ‘மலேசியாவைப் போல வேறு யாரும் சுக்கு நூறாக உடைத்ததில்லை’ என, தற்போது சுவீடனில் குடியேறி, முனைவருக்கான பட்டப்படிப்பையும் முடித்து பேராசிரியராக அங்கு பணிபுரியும் வனஜா தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

ஆக இன பாகுபாடிற்கு இரையாகி இப்படியெல்லாம் துன்பப்பட்டிருக்கும் எண்ணற்ற நம் சாதனையாளர்களின் மத்தியில், சுவர்பந்து விளையாட்டை முழு நேரத் தொழிலாகக் கொண்டிருக்கும் சிவசங்கரியின் ஒளிமயமான எதிர்காலம் முடக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.