கி.சீலதாஸ்- மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ முகம்மது நஸ்லான் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை ஆரம்பித்துவிட்டதாம். இந்த விசாரணைக்கு அடிப்படையாக இருப்பது இப்பொழுது இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜா பெட்ரா கமாருடீன் தமது மலேசியா டுடே (மலேசியா இன்று) வலைத்தளத்தில் நீதிபதி நஸ்லானிடம் “தெளிவற்ற முறையில் செல்வம் இருக்கிறது” என்கின்ற குறை கூறல், அவரிடம் அது எப்படி வந்தது? ராஜா பெட்ரா சர்ச்சை மிக்கவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் அடிக்கடி பல விஷயங்களை, அரசியல்வாதிகளைப் பற்றி கருத்து வெளியிடுவது உண்டு.
சுமார் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் சட்டத்திலிருந்து தப்பியோடியவர். அவரின் பல குறை கூறல்கள் கடுமையானவை. அவை மீது காவல் துறையோ அல்லது ஊழல் ஒழிப்பு துறையோ நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. அவர் மீது 2009ஆம் ஆண்டு, ஏப்ரல் 22 கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதுவரை அவரை இந்த நாட்டுக்குக் கொண்டுவர எத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதை மக்களுக்கு விளக்கமளிக்கவில்லை சம்பந்தப்பட்ட துறையினர்.
ராஜா பெட்ரா பலவிதமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார். ஆனால், அதை நிரூபிக்க தயாராக இல்லை. அவர் வெளியீடும் குற்றச்சாட்டுகளை அவர்தானே தெளிவுபடுத்த வேண்டும். அந்தக் கடமையை நிறைவேற்ற அவர் தயாராக இருக்கிறாரா? புரியாத புதிராக இருக்கிறது.
நீதிபதி நஸ்லான் மீதான குறை கூறல் கடுமையானதுதான். அதை விசாரிக்கும்படி அவரும் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். இது ஒரு புறமிருக்க, நீதிபதி நஸ்லான் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் மீது சுமத்தப்பட்ட வழக்கை விசாரித்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தவர்.
இந்தக் காலகட்டத்தில் முகநூல், புலனம், டுவீட்டர் போன்றவை உண்மை செய்திகளைப் பரப்புவதைக் காட்டிலும் பொய் செய்திகளையும், அவதூறுமிக்க செய்திகளையும் பரப்ப உதவுகின்றன. இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி உண்மையைத் திரித்தும், பொய்யான செய்திகளைப் பரப்பவும், பிறரைக் கேவலப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உண்மை காவல் துறைக்கும், ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் தெளிவாகத் தெரிந்திருக்கும். ஆனால், அடிக்கடி சர்ச்சையைக் கிளப்பும் தகவல்களை வெளியிடுபவர் அதை நிரூபிக்க தயாராக இல்லை என்றால் அதுவும் பல சந்தேகங்களைக் கிளப்பும் அல்லவா? அமலாக்கத் துறைகள் என்ன செய்கின்றன என்று மக்கள் கேட்க மாட்டார்களா?
ஊழல் துறை தலைமை அதிகாரி மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. குற்றச்சாட்டைக் கேட்டதும் துள்ளிக் குதித்தவர்கள் அமைதியாகிவிட்டனர். இன்று நீதிபதி மீது விசாரிப்பதாகக் கூறும் ஊழல் ஒழிப்பு ஆணையம் அரசமைப்புச் சட்டத்தின் 125ஆம் பிரிவைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.
உயர்மட்ட நீதிபதிகள் மீது புகார் எழும்போது மலேசியாவின் தலைமை நீதிபதி பிரதமரோடு கலந்து ஆலோசித்து தீர்ப்பாயம் அமைக்கும்படி பேரரசரிடம் கோரலாம். பேரரசர் இணங்கினால் தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிபதி மீது விசாரணை மேற்கொள்ளப்படும். இப்படிப்பட்ட சிறப்புமிக்க முறையை அரசமைப்புச் சட்டத்தில் புகுத்தப்பட்டதற்கான காரணத்தை அறிவது நல்லது.
அதிகாரப் பகிர்வு ஜனநாயகத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. அதிகாரம் ஒரே கையில் சேர்ந்துவிட்டால் அதன் துஷ்பிரயோகம் தவிர்க்க முடியாது. அதனால்தான் சட்டம் இயற்றும் அதிகாரத்தைச் சட்டமன்றம் கொண்டிருக்கிறது; ஆட்சி துறை சட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது.
இயற்றப்பட்ட சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா, செல்லுபடியாகுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதித் துறையிடம் மட்டும்தான் இருக்கிறது. எனவே, சட்டத்தை நிர்வகிக்கும் நீதிபதிகள் சுயேச்சையாகச் செயல்படுவதற்கு ஏதுவாகச் சட்டம் அவர்களை ஆட்சி நிர்வாகிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி அவர்களுக்கெனத் தனி பாதுகாப்பை நல்குகிறது.
ஆகமொத்தத்தில், மேலே குறிப்பிட்ட மூன்று துறைகளும் சுதந்திரமாக இயங்க வகை செய்த அரசமைப்புச் சட்டம், ஒரு வேளை நீதிபதிகள் ஆட்சியாளர்களின் கெடுமதிக்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர்களுக்கெனச் சிறப்பு பாதுகாப்பைத் தருகிறது. அதில் ஒன்றுதான் நீதிபதிகள் மீது புகார்களை விசாரிக்கும் அதிகாரத்தைக் காவல் துறையிடமோ அல்லது ஊழல் தடுப்பு ஆணையத்திலோ கொடுக்காமல் குற்றம் செய்ததாகக் கூறப்படும் நீதிபதிகளை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயம் நியமிக்க வேண்டுமென அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்தி இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சட்டத்தை மதிக்காத ஒருவர் செய்த புகாரை உடனடியாக விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையம் முன்வந்திருப்பது தவறான அபிப்பிராயங்களுக்கு இடமளிக்கும். ஏனெனில், நஜீப் வழக்கை விசாரித்த நீதிபதி நஸ்லான் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் செயல் மக்களின் அதிருப்தியை அதிகரிக்குமே அல்லாது நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் பெரும் புள்ளிகள் மீதான வழக்குகளில் நீதி கிடைக்க உதவாது என்று நினைக்கக்கூடும்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் விசாரணை மேற்கொள்வதில் தவறு இல்லை என்றும் அது அதிகாரப் பகிர்வுக்கு ஒத்த செயல் எனக் கூறுவோரும் உண்டு. இந்தக் கருத்து அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகத் தெரியவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத் துறைகளின் விசாரணைக்கு உட்படுத்துவது விவேகமான கருத்தாகத் தெரியவில்லை. நீதிபதிகள் அமலாக்கத் துறைகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதே அதிகாரப் பகிர்வின் தெளிவான நோக்கமாகும். ஒருவர் மீது வழக்கு தொடுக்கும் அதிகாரத்தை அரசு தலைமை வழக்குரைஞர் பெற்றுள்ளார்.
காவல் துறையும், ஊழல் எதிர்ப்பு ஆணையமும் அரசு தலைமை வழக்குரைஞரின் மூலமாகத் தான் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த முடியும். அரசு தலைமை வழக்குரைஞர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருக்கும் கட்சியின் ஆதரவுடன் நியமிக்கப்படுகிறார். அவரின் கவனம் கட்சியின் நலனில்தான் இருக்குமே அல்லாது நாட்டில் அல்ல என்ற கருத்தும் உலவுகிறது. எனவே, அரசியல் நோக்கத்தோடு நீதிபதிகள் மீது புகார் செய்யப்படுமேயானால், அதிலும் அவர்கள் அரசுக்கு எதிராகத் தீர்ப்புகள் வழங்கினால் அது ஆளும் கட்சியைப் பாதிக்கலாம். நீதிபதிகளுக்குத் தொல்லை கொடுக்கலாம்.
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், முன்னாள் தலைமை நீதிபதி துன் சாலே அப்பாஸ் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். இது துன் மகாதீர் முகம்மது பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. பின்னர் துன் அப்துல்லா அகமது படாவி பிரதமராக இருந்தபோது அரசு சாலே அப்பாஸிடம் மன்னிப்புக் கோரியதை மலேசியர்கள் மறந்திருக்க மாட்டார்கள். நீதிபதி நஸ்லான் மீதான ஊழல் தடுப்பு ஆணைய விசாரணை நியாயமானதாகவோ, சட்டத்துக்கு உட்பட்டதாகவோ தெரியவில்லை.