அறிவியல் கட்டுரை– நம் அன்றாட வாழ்க்கையில் காய்ச்சல், சலி, இருமல், வயிற்று வலியெனப் பல காரணங்களால் நாம் மருத்துவரிடம் செல்கிறோம். அவரும் பரிசோதனைக்குப் பிறகு மாத்திரை மருந்துகளைக் கொடுத்து அல்லது மருத்தவமனையில் அனுமதித்து நம்மைக் குணப்படுத்துகிறார்.
நாம் நோய் நொடிக்கு ஆளாவதன் முக்கியக் காரணம் வைரஸ் மற்றும் பாக்டிரியா போன்ற கிருமிகள்தான். இவை இரண்டிற்கும் என்ன வேறுபாடு? எந்தக் கிருமியினால் நாம் அதிக பாதிப்படைகிறோம் என்று தெரியுமா?
முதலாவதாகப் பாக்டிரியா உயிர்வாழ்வன என்று கருதப்படும் காரணம் அது எவ்விடத்திலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது. ஆனால் வைரஸ் அப்படிக் கிடையாது. உயிரினங்களில் இருக்கும் செல்களில் மட்டுமே அது இனப்பெருக்கம் செய்ய முடியும். நம் உடம்பில் மட்டும் 37.2 டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஒரு வைரஸ் மற்றொரு செல்லுக்குள் செல்லாவிட்டால் அது தன் சக்தியை இழந்து சில மணி நேரங்களில் இறந்துவிடும்.
பாக்டிரியா மற்றும் வைரஸின் உருவ அமைப்பிலும் பல மாற்றங்களை நாம் காணலாம். உதாரணத்திற்குப், பாக்டிரியா நீர், உப்பு மற்றும் புரதத்தால் செய்யப்பட்ட சைடொபிலாஸம் (Cytoplasm) என்ற பாதுகாப்புக் கவசத்தால் தற்காக்கப்படுகின்றது. ஆனால், வைரஸ் கெப்சிட் (Capsid) என்ற புரத உறையால் அமைக்கப்பட்டுள்ளது. சில வைரஸ்களுக்குப் கொழுப்புப் பொருள் நிறைந்த உறையும் உள்ளன. இந்த உறை உள்ளிருக்கும் மரபியல் பொருளுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தந்து, உயிரற்ற இடத்தில்கூட, நீண்ட நேரம் உயிர்வாழச் செய்கின்றது.
அதுமட்டுமல்லாமல், பாக்டிரியா சுமார் 1- 10 மைக்ரோமீட்டர் அளவிலும் மற்றும் வைரஸ் 0.02-0.5 மைக்ரோமீட்டர் அளவிலும் காணப்படுகின்றன. ஒரு மைக்ரோமீட்டர் 1/1 000 000 மீட்டர்க்குச் சமமாகும். உலகில் மிகப் பெரிய பாக்டிரியாவாகத் தியோமார்கரிதா நமிபியன்சிஸ் (Thiomargarita namibiensis) 750 மைக்ரோமீட்டர் அளவுடன் திகழ்கிறது. இது மற்ற பாக்டிரியாவைவிட ஐம்பது மடங்கு பெரியது என்று கருதப்படுகிறது. மிமி வைரஸ் (Mimivirus) 0.6 மைக்ரோமீட்டர் அளவுடன் மிகப் பெரிய வைரஸாக கருதப்படுகின்றது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். வைரஸ் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் பல உயிர்க்கொள்ளி நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றது. அண்மையில் உலகத்தையே வசப்படுத்தி நமக்கு உயிர் பயத்தைக் காட்டியது கொரோனா வைரஸ். அதுமட்டுமல்லாமல், ரேபிஸ், இபோலா வைரஸ், ஜிகா வைரஸ், எய்ட்ஸ், ஹெபடடிஸ் போன்ற வைரஸ் நமக்கு இன்னும் இழப்பை உண்டாக்கி வருகின்றன.
பாக்டிரியாவும் நமக்குப் பல பாதிப்புகளைக் கொடுக்கின்றன. உதாரணத்திற்கு, உணவு நச்சுத்தன்மையினால் ஏற்படும் நோய்கள், மூளையதிர்ச்சி, நிமோனியா மற்றும் காசநோய் போன்ற நோய்களால் நாம் அவதிப்படுகிறோம்.
இந்த இரண்டு கிருமிகளின் தாக்கத்தை நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் பாக்டிரியாவைவிட வைரஸ் கிருமியைக் கொள்வதற்குச் சற்றுக் கடினமாகவே காணப்படுகின்றது. காரணம் நம்மிடம் உள்ள மருந்து மாத்திரைகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வைரஸ்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை. அதனால்தான், வைரஸ் கிருமிகளிடமிருந்து பாதுகாக்கத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இருப்பினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அதிகமான பயன்பாட்டினால், சில பாக்டிரியாக்கள் அதாவது ஈ.கோலி (E. coli) மற்றும் எம்.ஆர்.எஸ்.ஏ. (MRSA) தங்களின் எதிர்ப்புச் சக்தியைத் தானே அதிகப்படுத்திக் கொள்கின்றன. இது பாக்டிரியாவின் உயிர்வாழும் தன்மைகளில் ஒன்றாகும். எப்படி மனிதர்களாகிய நாம் கடுங்குளிரான இடத்திலிருந்து வெப்ப பிரதேசத்திற்குச் செல்லும்போது வெப்பநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்கிறோமோ அதே போல் வைரஸ் பாக்டிரியா போன்ற கிருமிகள் கூடச் சூழ்நிலைகள் சவால்களுக்கு ஏற்பத் தங்களை உருமாற்றி வீரியமாக்கிக் கொள்ளும் தன்மையுடையது. இதனால்தான் கொரோனா வைரஸ் அல்பா, பெதா, காமா, டெல்தா இப்போது ஒமிக்ரோன் என்று பல வடிவங்களில் உருமாறி நம்மைத் தாக்கின்றன.
பலவகையான பாக்டிரியா மற்றும் வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்து மனித உயிரினங்களைக் காப்பாற்ற ஆராய்ச்சியாளர்கள் பல கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதுவரை நாம் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இந்நுண்ணுயிர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்வோம்.