நஜீப் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் நிதி அமைச்சர் பதவியையும் தன் வசமே வைத்துக் கொண்டார். அச்சமயம் அவர் நம்பிக்கை மோசடி செய்தார் என்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனையும், இருநூற்றுப்பத்து மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவரின் மேல்முறையீடு மனு மூவர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு ஒருமனதாக நிராகரிக்கப்பட்டது. அடுத்து, அவரின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது மலேசியாவின் தலைமை நீதிபதி, இவருடன் நீதிபதி குழுவில் சபா சரவாக் மாநிலங்களின் தலைமை நீதிபதி மற்றும் மூன்று கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஐந்து நீதிபதிகள் அவரின் மனுவை ஏகமனதாகத் தள்ளுபடி செய்தனர்.
நஜீப் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் தீர்ப்புக்கு முன்னரும், பின்னரும் அவரின் வழக்குரைஞர்கள் நடந்து கொண்ட முறை நீதித்துறையையே அசிங்கப்படுத்தும் தரத்தைக் கொண்டிருந்ததை இந்த நாட்டு மக்கள் மற்றும் வையகமே அறிந்ததாகும்.
இதுகாறும் மலேசிய நீதித்துறையின் வரலாற்றில் இத்தகைய வெளிப்படையான தாக்குதல்கள் நடந்தது கிடையாது. இப்பொழுது அதன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதல்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.
துன் டாக்டர் மகாதீர் முகம்மது பிரதமராக இருந்த காலகட்டத்தில் சாலே அபாஸ் மீதான தவறான போக்கு நஜீப்பின் வழக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைப் போல் இருக்கவில்லை என்று சொல்லலாம்.
தகாத குற்றச்சாட்டு
ஒருவகையில் நஜீப்பும் அவரின் வழக்குரைஞர்களும் மேற்கொண்ட அணுகுமுறை நீதிபதிகள் மீது, குறிப்பாக வழக்கை முதன் முதலில் விசாரித்த நீதிபதியின் மீது களங்கம் கற்பிக்கும் முயற்சியாகவே அமைந்திருந்ததை மக்கள் அறியாதது அல்ல. வழக்கில் இருக்கும் உண்மைகள், தெளிவானதை மறைக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டமே விசாரணை நீதிபதி மீதான தகாத குற்றச்சாட்டு என மக்கள் கூறினால் அதில் குறை காண முடியாது.
இறுதியில் கூட்டரசு நீதிமன்றத்தில் நஜீப் மீதான தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டபோது தலைமை நீதிபதியின் கணவரின் பல ஆண்டுகளுக்கு முன்பு நஜீப்பைக் குறித்த அறிக்கையைத் தோண்டி எடுத்து பிரச்சினை உருவாக்க முயன்றதானது நஜீப் தரப்பினரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்வதா அல்லது மக்களின் கவனத்தை வேறு திசைக்குத் திருப்ப மேற்கொள்ளப்பட்ட கேவலமான வியூகமா என்பதற்கான விடையைக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இன்றைய நிலையில் நஜீப்பின் போக்கும் அவருடைய வழக்குரைஞர்களின் போக்கும் வழக்கில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் அவர்களின் நோக்கமும், இலக்கும் வேறாக இருக்கிறது என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
மன்னிக்கும் அதிகாரம்
சிறை வாசத்தை ஆரம்பித்திருக்கும் நஜீப்பிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் அதிகாரம் கூட்டரசு நீதிமன்றத்துக்கு உண்டு. அதே சமயத்தில் நஜீப்பை மன்னிக்கும் அதிகாரம் மாமன்னருக்கு உண்டு. கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் 42ஆம் பிரிவு மாமன்னருக்கு மன்னிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.
கூட்டரசு பிரதேசங்களான கோலாலம்பூர், லபூவான், புத்ராஜெயா ஆகியவற்றில் குற்றம் புரிந்தவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டவரை மன்னிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளார் மாமன்னர். மன்னிக்கும் அதிகாரத்தை மாமன்னர் பெற்றிருந்தாலும் அவர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாது என்பதே உண்மையான நிலை. இதுபோன்ற மன்னிக்கும் அதிகாரத்தை மாநில ஆளுநர்களும் பெற்றிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் 42ஆம் பிரிவுக்கு இணங்க பேரரசர் குற்றவாளியை மன்னிக்கவும், நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், குறைக்கவும் பேரரசருக்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும்போது மாமன்னர் மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையைக் கருத்தில் கொள்வார். வாரியத்தின் கருத்தைப் புறக்கணிக்க முடியாது என்று கூட சொல்லலாம்.
நீதி எவர்க்கும் சலுகை காட்டாது
சமீபத்தில் ஷரியா அல் சுல்தான் அப்துல்லா கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய மாமன்னர் இஸ்லாம் எவ்வித அநீதியையும் ஏற்காது. அது வெறுப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பினும் நீதியை எதிர்பார்க்கலாம். அதே சமயத்தில், சட்டம் முறையாகப் பரிபாலனம் செய்யப்படாவிட்டால் அதுவும் களங்கத்துக்கு உட்படும். சட்டம் ஒரு சீராக அமலாக்கப்பட வேண்டும். இஸ்லாமிய நீதி எவர்க்கும் சலுகை காட்டாது என்றார்.
இதற்கிடையில் நஜீப் பேரரசரிடம் மன்னிப்புக் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாகச் செய்தி கசிந்து கொண்டிருக்கிறது. மன்னிப்புக் கோருகிறார் என்றால், தான் செய்த தவறை ஏற்றுக்கொள்கிறார் என்று பொருள்படும் அல்லவா?
நஜீப் உண்மையில் மனம் திருந்தி மன்னிப்புக் கோருகின்றாரா? நஜீப்பிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அது நாட்டின் நீதித்துறையை நகைப்புக்கு உட்படுத்தும் என்கிறார் நீதித்துறையின் முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீது முகம்மது.
அதே வேளையில் முன்னாள் அரசு தலைமை வழக்குரைஞர் டான் ஸ்ரீ தோமி தோமஸ் ஒரு நேர்காணலில் மாமன்னரின் மன்னிப்பு குறித்து கருத்துரைக்கையில் நஜீபுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்குவதற்கான சட்ட வழிமுறைகள் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்ச சிறைவாசம் மற்றும் நன்னடத்தை திருந்தியதற்கான ஆவணம் காணப்பட்டால் மட்டுமே மன்னிப்புக்கு இடம் உண்டு என்கிறார். இதுதான் உண்மையான சட்ட நிலவரம்.
ஆனால், காலஞ்சென்ற சுல்தான் இஸ்மாயில் தாம் ஜொகூர் சிம்மாசனத்தில் அமர்ந்த்திருந்தபோது, தமது மைந்தன் இளவரசர் இஸ்கந்தர் இளமை காலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டார் என்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டணைக்கு ஆளானார்.
தந்தை சுல்தான் இஸ்மாயில் வழங்கிய மன்னிப்பு ஜொகூரின் பிற்காலத்து சுல்தானை, மலேசியாவின் மாமன்னரைச் சிறைவாசத்திலிருந்து காப்பாற்றியது. நஜீப் அரசு குடும்பத்தைச் சாராதவராக இருந்தபோதிலும் அரசு குடும்பங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் என்ற நிலை அவரைக் காப்பாற்றுமா?
நெல்சன் மண்டேலா – நஜிப்
இதற்கிடையில் நஜீப்பின் மகன் முகம்மது நிசார், நஜீப் தென்னாப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா போல் எல்லா சவால்களையும் சமாளித்து உயர்வார் என்கிறார். மண்டேலா ஒரு தம்பிடி கூட ஊழலாகவோ, பரிசாகவோ பெறாதவர்.
நஜீப்பின் தகாத நடவடிக்கைகளால் நாட்டுக்குப் பலத்த அவமானம் ஏற்பட்டிருப்பதை மறைக்க முடியாது. மறுக்க முடியாது. இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க காலம் பிடிக்கலாம். ஆனால், அவரின் மகன் முகம்மது நிசார் நஜீப் விடுத்த அறிக்கை ஒன்றில் தன் தந்தை எல்லா சவால்களையும் முறியடித்து நெல்சன் மண்டேலா போன்று வெற்றி காண்பார் என்கிறார்.
இப்படிப்பட்ட ஒப்பீடு நகைப்புக்கு உரியது எனின் தகும். ஏனெனில், மண்டேலா ஒரு புரட்சியாளர். தமது நாட்டைப் பீடித்திருந்த இனவாத கொள்கைக்கு எதிராகப் போராடி சிறை சென்றார்.
நஜீப் பணத்தை வைத்துக் கொண்டு அரசியலை நடத்த முடியும் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டவர். மண்டேலா நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டதால் இனவாதிகாளால் பழிவாங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நஜிப்போ நாட்டு பணத்தைச் சுரண்டி சொகுசு வாழ்க்கையில் மிதந்தார். மக்கள் நலனுக்கான கொள்கையைக் காண முடியவில்லை நஜீப்பிடம்; மண்டேலாவிடம் மக்கள் நலம், நீதித்துறை மதிப்பது போன்றவை முக்கியமானவையாக இருந்தன.
மண்டேலா ஒரு தம்பிடி கூட ஊழலாகப் பெற்றதில்லை. அவர் தியாகத்தின் சின்னம். நஜீப்போ தீராத பேராசையின் சின்னம். எனவே, நஜீப்பை மண்டேலாவுடன் ஒப்பிடுவது ஒரு கேவலமான ஒப்பீடு என்றுதான் சொல்ல வேண்டும்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். அதற்கு வழிவிடுவதுதான் நியாயம். நஜீப்பிற்கு மன்னிப்பு வழங்கப்பட்டால் அது அவரின் குற்றச்செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கியதாகக் கருதப்படும். அதைத் தவிர்ப்பதே போற்றத்தக்க செயல்.