இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஊழலே காரணம் – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நாட்டில் மோசடிகள் மற்றும் ஊழல்கள் இடம்பெற்றுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதோடு, மீண்டும் மோசடிகள் மற்றும் ஊழல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சில மேற்கு நாடுகள், அரசியல்வாதிகளின் பைகளுக்குச் செல்லும் உதவிகளை நிறுத்த ஐ.நா. முகவரகங்கள் மூலம் இலங்கைக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளன.

உலகளாவிய மந்தநிலையின் அபாயம் அதிகரிப்பு

இதேவேளை, பணவீக்கம் தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதால், உலகளாவிய மந்தநிலையின் அபாயம் அதிகரித்து வருகிறது என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பின்னரே பணவீக்கம் பிரச்சினையாக உள்ளதாகவும் அடுத்த வருடம் உலக மந்தநிலையின் அபாயம் மற்றும் உண்மையான ஆபத்து உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னேறிய பொருளாதாரங்களில் மந்தமான வளர்ச்சி மற்றும் பல வளரும் நாடுகளில் நாணயத் தேய்மானம் ஆகியவற்றை அவர்கள் மேற்கோள் காட்டினார்.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவில் நாணய நிதியம் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையை கண்டதாக ஜோர்ஜீவா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் இன்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 வருடாந்த கூட்டு மாநாட்டை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரையிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் மத்திய வங்கி ஆளுநர்கள், நிதியமைச்சர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் என பெருமளவானோர் பங்குபற்றவுள்ளனர்.

இலங்கையின் பிரதிநிதிகளும் பங்கேற்பு

அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் இந்த ஆண்டு வருடாந்திர கூட்டு மாநாட்டின் முதன்மை நோக்கங்கள், உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் உலகளாவிய போக்குகள், வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் உதவிப் பயன்பாட்டின் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதாகும்.

இந்த மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை இணக்கம் கண்டுள்ளதன் பின்னணியில் இலங்கை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதும் விசேட அம்மசமாகும்.

 

 

-tw