அம்னோவை சீர்திருத்துவது பக்காத்தானின் பொறுப்பு

இராகவன் கருப்பையா – ‘அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்பதற்கு நாட்டின் தற்போதைய சூழ்நிலையைவிட சிறந்ததொரு உதாரணம் இருக்கவே முடியாது.
‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா’ என்று தமிழ்த் திரையில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி சும்மாவா சொன்னார்? அவ்வளவும நிதர்சனம் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
தேர்தலுக்குப் பிறகு பாரிசான் கூட்டணியை பக்காத்தான் அரவணைக்கும் என்று பொது மக்கள் மட்டுமின்றி அவ்விருக் கட்சிகளின் தலைவர்களும் கூட கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
கடந்த 2003ஆம் ஆண்டில் பி.கே.ஆர். கட்சி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து மட்டுமின்றி பிறகு பக்காத்தான் கூட்டணி அமையப் பெற்ற நாள் தொடங்கி பாரிசானும் அக்கூட்டணியும் எதிரும் புதிருமாகத்தான் இருந்து வந்துள்ளன.
ஆனால் நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலின் எதிர்பாராத முடிவுகள் நிலைமையை தலைகீழாகப் புறட்டிப் போட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.
இனவாத பெர்சத்துவையும் சமயவாத பாஸ் கட்சியையும் நாட்டை ஆட்சி செய்ய வழிவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை உணர்ந்த இவ்விருக் கூட்டணிகளும் ‘சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்’ எனும் நிலைப்பாட்டில் கூட்டாட்சி அமைக்க முடிவு செய்தன.
ஆயினும், ‘அம்னோ என்றால் ஊழல், ஊழல் என்றால் அம்னோ’, எனும் எதிர்மறையான ஒரு அடையாளத்தை சுமந்து நிற்கும் அக்கட்சியுடன் அன்வார் எப்படி தோளோடு தோளாக நாட்டை நிர்வாகம் செய்யப் போகிறார் என்பதே எல்லாருடையக் கேள்விக் குறியாக இப்போது உள்ளது.
கடந்த காலங்களில் நாட்டின் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அம்னோவும் கூட அவ்வப்போது வரம்பு மீறிய சமய, இன உணர்வுகளைத் தூண்டியுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால் தற்போது நொந்து நூலாகி வலுவிழந்துக் கிடக்கும் அக்கட்சியை அன்வார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சீர்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
ஏற்கெனவே அக்கட்சியில் சுமார் 16 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்து அதன் துணைத் தலைவராகவும் நாட்டின் துணைப் பிரதமராகவும் உயர்ந்த அன்வார் இந்தப் புதிய பொறுப்பை ஒரு சவாலாக ஏற்று நடத்திக் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.
தாங்கள் இந்நிலைமைக்கு ஆளானதற்கு ஊழல்தான் காரணம் என்பதை நன்கு உணர்ந்து அவர்களும் இனிமேலாவது திருந்தி வாழ முற்பட வேண்டியது அவசியமாகும்.
தமது ஆட்சியில் ஊழலுக்குத் துளியளவும் இடமிருக்காது எனத் தேர்தல் பிரச்சாரங்களின் போது பல தடவை அன்வார் சூளுரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடவே இருக்கும் அம்னோவை சீர்திருத்தினால்தான் இது சாத்தியப்படும் என்பதும் அவருக்கு நன்றாகவேத் தெரியும்.
ஒரு அரசியல் கட்சியில் மேல் மட்டத்தில் உள்ள ஊழல்வாதிகள் முறையாகத் தண்டிக்கப்பட்டால்தான் அக்கட்சியின் இதர எல்லா நிலைகளும் தூய்மையாகும் என ஊழல் ஒழிப்பு வல்லுநர்கள் கருத்துரைக்கின்றனர்.
அவ்வகையில் பார்க்கப் போனால் முன்னாள் பிரதமர் நஜிப் ஊழல் குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அன்வாருக்கு சாதகமான ஒன்று என்றே சொல்ல வேண்டும்.
நீதித்துறையில் தலையிடப் போவதில்லை என பகிரங்கமாகவே அவர் செய்துள்ள அறிவிப்பு தற்போதைய சூழலில் மிகவும் துணிச்சலான ஒரு விடயம்தான்.
இருந்த போதிலும் அந்த அறிவிப்பை அவர் மெய்பித்துக் காட்ட வேண்டியக் கடப்பாட்டைக் கொண்டுள்ளதால் மக்கள் இவ்விவகாரத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள்.
அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட், நஜிபின் மனைவி ரோஸ்மா, சபா மாநில துணை முதல்வர் புங் மொக்தார் மற்றும் பாலிங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் போன்றோரின் ஊழல் வழக்குகள் எவ்வித அரசியல் தலையீடுமின்றி நகர்வதை அன்வார் உறுதி செய்ய வேண்டும்.
இனிமேலும் ஊழல் புரிய முற்படும் அம்னோ தலைவர்களை தயவு தாட்சண்யமின்றி உடனுக்குடன் தண்டிக்க வகை செய்வது அதைவிட அவசியமாகும்.
எனவே இந்தக் கூட்டாட்சியை ஒரு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்னோவைத் தூய்மைப்படுத்த அன்வார் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது வெகுசன மக்களின் அபிலாஷையாகவும் இருக்கும்.