விக்னேஸ்வரன் பதவி விலகினால் மஇகா மீட்சி காணுமா?

இராகவன் கருப்பையா –நடந்து முடிந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அதன் தலைவர் விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என அடி மட்ட உறுப்பினர்கள் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

பொதுவாகவே தேசிய முன்னணியின் அனைத்து கட்சிகளும் மிகவும் மோசமான வகையில் பின்னடைவு அடைந்தனர்.

அதோடு இன-மதவாத அரசியலும் அதோடு ஒருங்கிணைந்த அவருடையத் தலைமைத்துவம் மீது நாடு தழுவிய நிலையில் அதிருப்தி அலை எழும்பியுள்ள போதிலும் இது பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கு நிறைய பேருக்குத் துணிச்சல் இல்லை.

ஆனால் சமூக வலைத்தளங்களின் வாயிலாகத் தங்களுடையக் கருத்துகளை அவர்கள் தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.எனினும் ஜொகூர் மாநில ம.இ.கா.வின் தகவல் பிரிவுத் தலைவர் தேவா கொஞ்சமும் தயக்கமின்றி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அடி மட்டத்தில் உள்ளப் பிரச்சினைகளை ம.இ.கா. தலைமைத்துவம் கவனிக்கவே இல்லை என்று கூறிய அவர் கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கட்சி அடைந்த படுதோல்வி ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டார்.உள்ளூரிலேயே நாணயமிக்க, பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெற்ற சிறந்தத் தலைவர்கள் இருக்கையில் ‘வான்குடை வேட்பாளர்களை’க் கொண்டு வந்து இறக்கியது தலைமைத்துவம் செய்த பெரியத் தவறு என்றார் அவர்.

கடந்த 2018ஆம் ஆண்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிட்ட 10 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்ததற்கு முழுப் பொறுப்பேற்று அப்போதையத் தலைவர் சுப்ரமணியம் பதவித் துறந்தார். கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் அதே போல ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

புதிய அமைச்சரவை அறிவிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன், ‘அரசாங்கத்தில் இடம்பெற எங்களுக்கு விருப்பம் இல்லை’ என வீரவசனம் பேசிய விக்னேஸ்வரன், 2 நாள்கள் கழித்து, ‘பதவி கிடைத்தால் எடுத்துக் கொள்வோம்’, என பல்டியடித்ததும் சமூக வலைத்தளங்களில் கிண்டலாகப் பரவியுள்ளது.

புதிய அமைச்சரவையில் ம.இ.கா.வுக்கு இடம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு பாரிசான் தலைவர் அஹ்மட் ஸாஹிட்டை தாம் கேட்டுக் கொண்டதாகக் கூறிய விக்னேஸ்வரன், அது கிடைக்காத பட்சத்தில் ‘ம.இ.கா. தற்போது எதிர் கட்சியைப் போல் உள்ளது’, என்று புலம்புவதை பலர் கேலியாகப் பேசுகின்றனர்.

இப்படியாக முன்னுக்குப்  பின் முரணாக பேசிக் கொண்டிருக்கும் அவர் வேரொருவருக்கு வழி விட்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அடிமட்ட உறுப்பினர்கள் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.பாரிசான் தலைமைத்துவம் பக்காத்தானுக்கு ஆதரவுக் கொடுக்க முடிவு செய்த போது சில அம்னோ உறுப்பினர்களுடன் சேர்ந்து ம.இ.கா.வும் ம.சீ.ச.வும் பாஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தும் பெரிக்காத்தானுக்கு ஆதரவு வழங்கக் கிளம்பிச் சென்றன. இந்த விவகாரம் பிறகு அம்பலமாகிவிட்டது.

இப்படிப்பட்ட துரோகச் செயலுக்கு இப்போது அங்கீகாரம் கோருவது அர்த்தமில்லாத ஒன்று என்பதில் மாறுபட்டக் கருத்து இருக்க முடியாது. அது ஒரு புறமிருக்க, பக்காத்தான் கூட்டணி ஆட்சியமைத்தால், ம.இ.கா.வின் முதலீட்டு நிறுவனங்களான மைக்கா ஹோல்டிங்ஸ் மற்றும் எ.ஐ.இ.டி. மட்டுமின்றி அரசாங்கத்தின் மித்ரா தொடர்பான நிதி மோசடிகள் மீதும் தடவியல் ஆய்வு செய்யப்படும் என அன்வார் எற்கெனவே அறிவித்திருந்தார்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது, யார் வழிமறித்தது, யார் களவாடியது, போன்ற விவரங்கள் இந்திய சமூகத்திற்கு தெரிந்தாக வேண்டும் என அன்வார் குறிப்பிட்டார். தேவை ஏற்பட்டால் அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூட அவர் மேலும் தெளிவுபடுத்தினார். கட்சி இப்படிப்பட்ட எதிர்மறையான சூழலில் மூழ்கிக் கிடக்கும் பட்சத்தில் எந்தத் துணிச்சலில் விக்னேஸ்வரன் அமைச்சரவையில் இடம் கோருகிறார் எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ம.இ.கா. தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் போதிலும் நீதித்துறை சம்பந்தப்பட்ட எந்த விவகாரத்திலும் தாம் தலையிடப் போவதில்லை என அன்வார் திட்டவட்டமாகக் கூறியுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆக, இதனையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ம.இ.கா.வின் எதிர்கால நலன முன்னிருத்தி விக்னேஸ்வரன் பதவி விலக வேண்டும் என கட்சிக்குள்ளேயே இப்போது புகைச்சல் கிளம்பிவிட்டது என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் அவர் பதவி விலகினால், ஒரு சிறுபான்மை கட்சியின் பலம் கூடுமா என்பதும் ஒரு கேள்விக்குறியே!