இராகவன் கருப்பையா – மலேசிய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்பவானாக 60 ஆண்டுகளுக்கும் மேல் தடம் பதித்த மூத்தக் கட்சியான அம்னோ தற்போது வரலாறு காணாத வகையில் பள்ளத்தில் விழுந்துக் கிடக்கிறது.
இரும்புக் கரங்களுடன் அரசாங்கத்தை நிர்வகித்த அக்கட்சி ஒரு விடயத்தை வெளிக் கொணர்ந்தால் அதுதான் நாட்டிற்கே வேத வாக்காக இருந்தது ஒரு காலக் கட்டத்தில். அக்கட்சியை மீறி வேறொன்றுமே இல்லை எனும் சூழல் அப்போது.
ஆனால் ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று சும்மாவா சொன்னார்கள்?
பல வேளைகளில் வரம்பு மீறிய அகங்காரத்துடன் செயல்பட்ட அம்னோவின் சரிவு படாவி பிரதமராக இருந்த காலத்திலேயே தொடங்கியது என்ற போதிலும் இந்த பரிதாப நிலைக்கு வித்திட்டவர் அவருக்கு அடுத்து பிரதமர் பதவியை ஏற்ற நஜிப்தான் என்பதை உலகறியும்.
கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவை முதுகெலும்பாகக் கொண்ட பாரிசான் கூட்டணி தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைய முதல் முறையாக இழந்தது.
அதற்கு முக்கியக் காரணம் ஏறத்தாழ மூன்றரை மாதங்களுக்கு முன்னதாக தலைநகரில் நடைபெற்ற மாபெரும் ஹிண்ட்ராஃப் பேரணிதான் என்பதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
அப்பேரணியின் பிரதானத் தலைவர்கள் 5 பேரை பிரதமர் படாவி கொடூரமான ‘ஈசா’ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததால் வீருகொண்டு எழுந்த இந்தியர்களின் ஒட்டு மொத்த வாக்குகளும் எதிர் கட்சிகளுக்குத் திசைமாறியது வரலாறு.
நாடலாவிய நிலையில் நிறையத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை இந்தியர்களின் வாக்குகள்தான் நிர்ணயித்து வந்துள்ளதை அநேகமாக அப்போதுதான் பாரிசான் உணர்ந்திருக்கும்.
முன்னதாக 2005ஆம் ஆண்டில், அம்னோ பொதுப் பேரவையின் போது அக்கட்சியின் அப்போதைய இளைஞர் தலைவர் ஹிஷாமுடின் மலாய்க்காரர்களின் பாரம்பரிய ஆயுதமான ‘க்ரிஸ்’ ஒன்றை உருவி மற்ற இனத்தவரை அச்சுறுத்துவதைப் போல் உயர்த்திக் காட்டினார்.
அந்தச் சம்பவமும் மலாய்க்காரர் அல்லாதாருக்கிடையே பெரும் மனக் கசப்பை ஏற்படுத்தி அம்னோவிற்கு எதிராக மேலும் அதிகமான வாக்குகளை சிதறச் செய்தது.
தவற்றை உணர்ந்த அவர் தேர்தலுக்குப் பிறகு மன்னிப்புக் கேட்ட போதிலும் அம்னோவின் ஆதிக்கத்தில் அச்சம்பவம் ஒரு கரும் புள்ளியை ஏற்படுத்திவிட்டது என்பதுதான் உண்மை.
பிறகு 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 13ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவும் அது சார்ந்த பாரிசானும் நூலிலையில் வெற்றி பெற்ற போதிலும் மொத்தத்தில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகளே அக்கூட்டணிக்குக் கிடைத்ததானது ஒரு கெட்ட சகுனத்தின் தொடக்கம் என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் அதனைத் தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் அந்தக் கூட்டணி மன்னைக் கவ்வியது. அதன் பிறகு 22 மாதங்கள் கழித்து அரங்கேறிய அட்டகாசங்கள் எல்லாரும் அறிந்ததே.
அத்தேர்தலில் அம்னோ மொத்தமாகக் குப்புறக் கவிழ்ந்ததற்கு நஜிபும் அவருடைய 1MDB ஊழலும்தான் மூலக் காரணம் என்பதில் துளியளவும் சந்தேகமே இல்லை.
நஜிப் உள்பட கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் பலருடைய ஊழல் விவகாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலமானதைத் தொடர்ந்து காலங்காலமா விசுவாசமாக இருந்த இலட்சக்கணக்கான அதன் உறுப்பினர்களில் ஏராளமானோர் அதனை விட்டு விலகத் தொடங்கினார்கள்.
இருப்பினும் மலாக்கா மற்றும் ஜொகூர் மாநிலத் தேர்தல்களில் பதிவான மகத்தான வெற்றிகளைத் தொடர்ந்து முழு நம்பிக்கையுடன் கடந்த மாதம் களமிறங்கிய அக்கட்சி எதிர்பாராத ‘சுனாமி’யில் முழ்கி அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கிளந்தான், திரங்கானு, கெடா, பினேங், பெர்லிஸ், சிலாங்கூர் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கூட அம்னோ வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சன்னம் சன்னமாகத் தனதுப் புகழை இழந்த அந்த மூத்தக் கட்சி தனிப்பட்ட வகையில் 4ஆவது இடத்தையும் ஒரு கூட்டணி என்ற வகையில் 3ஆவது இடத்தையும் பிடித்து தேர்தலுக்குப் பிறகு ஒரு வாரகாலமாக திக்கற்றுத் தவித்தது.
பெரிக்காத்தானுடன் இணைந்தால் பாஸ் கட்சிக்கும் பெர்சத்துவுக்கும் பின்னால் 3ஆவது இடத்தில் வெறும் கிள்ளுக்கீரையாகத்தான் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை உணர்ந்த அம்னோ கொஞ்சமாவது தனது சுயமறியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு பக்காத்தானுடன் கைக்கோத்தது.
நாட்டின் முதல் பிரதமர் தெங்கு அப்துல் ரஹ்மான் காலத்தில் இருந்ததைப் போல அப்பழுக்கற்றக் கட்சி என்ற நற்பெயரை மீண்டும் சம்பாதிப்பதற்கு நீண்ட நாள் பிடிக்கும் எனும் போதிலும் அதற்கான அடித்தளத்தை இப்போதே அமைக்கவில்லயென்றால் இயற்கையாகவே அக்கட்சி அஸ்தமனமாவதை யாராலும் தடுக்க முடியாது.
பக்காத்தானின் அரவணைப்பில் அரசாங்கத்தில் இருப்பதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அதற்கான நவடிக்கைகளை அம்னோ உடனே முடுக்கிவிட வேண்டும். ஏனெனில் இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு எப்போதுமே அக்கட்சி மீள்வதற்கான வாய்ப்பு இருக்காது.
அதோடு தற்போது இனவாதமும் மதவாதமும் ஒன்றிணைந்த வகையில் உருவாகி வரும் அரசியலுக்கு அம்னோதான் முழுக்காரணம் எனலாம். கொள்கை அடிப்படையில் மதவாத அரசியலுக்கு வழி வகுக்கும் வகையில் அரசியல் கொள்கை மாற்றத்தையும் அமுலாக்கம் செய்தது அம்னோதான்.