புதிய அரசாங்கத்தில் சிறப்பு தூதர்களுக்கு வேலையில்லை

இராகவன் கருப்பையா – பொதுத் தேர்தலில் தோற்றுப் போனவர்களையும் ‘எனக்கும் ஏதாவது ஒரு பதவி வேண்டும்’ என்று சிணுங்குபவர்களையும் சமாதானப்படுத்தும் நோக்கத்தில், அவசியமே இல்லாதப் பதவிகளை உருவாக்கி மக்களின் வரிப்பணத்தை வீணடித்தக்  காலம் கடந்துவிட்டது.

‘சிறப்புத் தூதர்கள்’, ‘சிறப்பு ஆலோசகர்கள்’, போன்ற பெயர்களில் இவர்களுக்கென மாதந்தோறும் இலட்சக்கணக்கில் செலவிடப்பட்டு வந்த வழக்கம் நீண்ட நாள்களாகவே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த இலட்சணத்தில் இவர்களுக்கு அமைச்சர் அந்தஸ்து வேறு!

‘இதெல்லாம் தேவையே இல்லாத நியமனங்கள், அரசாங்கப் பணத்தை விரயமாக்க வேண்டாம்’, என அப்போது எதிரணியில் இருந்த ஜ.செ.க. மற்றும் பி.கே.ஆர். கட்சிகள் மட்டுமின்றி பொது மக்களும் காலங்காலமாக மன்றாடிய போதிலும் எல்லாமே ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’தான்.

நஜிப், முஹிடின், சப்ரி, ஆகிய 3 முன்னாள் பிரதமர்களும் தான்தோன்றித்தனமாக மக்களின் வரிப் பணத்தை இதற்காக அள்ளி இறைத்தார்கள்.

ஆனால் இத்தகைய அனியாயங்களுக்கு எல்லாம் புதிய பிரதமர் அன்வார் இப்போது ஒரு முடிவு கட்டிவிட்டார். ஒரு பிரயோஜனமும் இல்லாத இத்தகைய நியமனங்கள் இனிமேல் இருக்காது என அவர் செய்த அதிரடி முடிவு வரவேற்கத்தக்கது.

கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தலில் சுங்ஙை சிப்புட் தொகுதியில் தோல்வியைத் தழுவிய சாமிவேலுவுக்கு ‘ஏதாவது செய்ய வேண்டுமே’ என்ற எண்ணத்தில் 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி அவரை தெற்கு ஆசியாவுக்கான சிறப்புத் தூதராக அப்போதையப் பிரதமர் நஜிப் நியமித்தார்.

ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு அப்பொறுப்பை வகித்த சாமிவேலுவை 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஆட்சியமைத்தப் பிறகு அப்போதையப் பிரதமர் மகாதீர் பதவி நீக்கம் செய்தார்.

அதே போல 5 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலில் பேராக்கின் தைப்பிங் தொகுதியில் தோல்வியடைந்த பி.பி.பி. கட்சித் தலைவர் கேவியஸை போக்குவரத்து அமைச்சின் சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்தார் நஜிப்.

இந்தப் பதவியும் 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஆட்சியின் போது காலியானது குறிப்பிடத்தக்கது.சாமிவேலுவைப் போலவே 2011ஆம் ஆண்டில் சீனாவுக்கான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்ட முன்னாள் ம.சீ.ச. தலைவர் ஒங் கா திங் சுமார் 6 ஆண்டுகளுக்கு அப்பதவியில் இருந்தார்.

பிறகு 2012ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கான சிறப்புத் தூதராக நியமனம் பெற்ற அம்னோவின் ஜமாலுடின் ஜார்ஜிஸ் 3 ஆண்டுகள் கழித்து நீக்கப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லைப் புறமாக வந்து ஆட்சியைக் கைப்பற்றிய முஹிடின், சரவாக் மாநிலத்தின் பிந்துலு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தியோங் கிங் சிங்கிற்கு அமைச்சரவையில் இடமளிக்க முடியாத பட்சத்தில் சீனாவின் சிறப்புத் தூதராக அவரை நியமித்து  சமாதானப்படுத்தினார்.

அதே ஆண்டில் முன்னாள் மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட்டை கிழக்கு ஆசியாவுக்கான சிறப்புத் தூதராக நியமனம் செய்தார் முஹிடின்.

தனது சிறுபான்மை அரசை தற்காத்துக் கொள்வதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருந்த முஹிடின் அதே காலக்கட்டத்தில் பாஸ் கட்சித் தலைவர் ஹாடியை மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமித்தார்.இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் ஹாடி ஒரு பயங்கரவாதி என சில அரபு நாடுகள் முத்திரைக் குத்தியுள்ளதால் அந்தப் பக்கமே இவர் தலைகாட்ட முடியாமல் முடங்கிக் கிடந்தார்.

இந்த விவகாரம் குறித்து முஹிடினுக்கும் ஹாடிக்கும் நன்றாகவேத் தெரியும். இருந்த போதிலும் சுயநல அரசியலுக்குதான் அவ்விருவருமே முன்னுரிமைக் கொடுத்தனர். மக்களின் வரிப்பணம் நாசமாவதைப் பற்றி அந்த இருவரும் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் பதவியேற்ற சப்ரி, இந்த விடயத்தில் தானும்  சளைத்தவரல்ல என்பதைப் போல 3 மாதங்கள் கழித்து ம.இ.கா. தலைவர் விக்னேஸ்வரனை தெற்கு ஆசியாவுக்கான சிறப்புத் தூதராக பொறுப்பேற்கச் செய்தார்.

அதே காலக்கட்டத்தில் முன்னாள் சமயத்துறை அமைச்சர் ஜமில் கிர்ரையும் முன்னாள் துணை சபாநாயகர் அஸாலினாவையும் முறையே சமய விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் சட்டத்துறை ஆலோசகராகவும் தனக்கென விசேசமாக நியமித்துக் கொண்டார் சப்ரி.

அத்துறைகளுக்கு எல்லாம் முறையாக அமைச்சர்கள் உள்ள போதிலும் இத்தகையக் கூடுதல் நியமனங்கள் அறிவிலித்தனமான அதிகப்பிரசங்கித்தனம் என்பதில் ஐயமில்லை.

அதே போல எல்லா நாடுகளிலுமே முறையான அரசதந்திரத் தூதர்கள் பொறுப்பில் உள்ள போதிலும் மக்கள் நலனை கிஞ்சிற்றும் கருத்தில் கொள்ளாத சிறப்புத் தூதர்கள் எனும் அரசியல் நியமனங்கள் இதுவரையில் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை வீணே கரைத்துள்ளது வேதனைக் குறிய ஒன்று.