பெரிக்காத்தான் சாதனையும் மகாதீரின் வேதனையும்

இராகவன் கருப்பையா –  எதிர்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தானின் தற்போதைய அபரித வளர்ச்சி முன்னாள் பிரதமர் மகாதீரின் திட்டமிட்ட இனவெறிக் கனவு என்றால் அது மிகையில்லை.

தனியொரு மனிதனாக இருந்து, ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’, என்பதைப் போல பெர்சத்து கட்சியைத் தோற்றுவித்து இன்றைய அதன் வளர்ச்சிக்கு வித்திட்டு உரமிட்டவர் அவர்தான் என்பதில் மாறுபட்டக் கருத்து இருக்கவே முடியாது.

கடந்த 2016ஆம் ஆண்டில் கட்சி விதிகளை மீறியக் குற்றச்சாட்டின் பேரில் அப்போது துனைப் பிரதமராக இருந்த முஹிடினையும் மகாதீரின் புதல்வர் முக்ரிஸையும் முன்னாள் பிரதமர் நஜிப் அம்னோவிலிருந்து நீக்கினார்.

அடிமட்ட ஆதரவாளர்கள் அவ்வளவாக இல்லாத அவ்விருவரும் திக்கற்ற நிலையில் தவித்த போது அவர்களை கரை சேர்க்கும் முயற்சியில்தான் பெர்சத்து கட்சியை தோற்றுவித்தார் மகாதீர்.

தலைவராக முஹிடினும் துணைத் தலைவராக முக்ரிஸும் அவைத் தலைவராக மகாதீருமாக அப்புதியக் கட்சி உதயம் கண்டது.

இன்னும் 2 ஆண்டுகளில், அதாவது 2018ஆம் ஆண்டில் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்தும் பொருட்டு வடக்கில் இருந்து தெற்கு வரையிலும் கிழக்கு மலேசியாவிற்கும் சூறாவளிப் பயணங்களை மேற்கொண்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கட்சியை வளரச் செய்தார் மகாதீர்.

மலேசிய அரசியலுக்கு இனி வரும் காலங்களில் பல்லினங்களைக் கொண்ட கட்சிகளே வேண்டும் என பரவலானக் கருத்துகள் நிலவிய போதிலும் அம்னோவை வேரோடு அழிக்க வேண்டுமென்றால்  இன்னொரு மலாய்க்காரக் கட்சி வேண்டும் என இனவெறிக் கொள்கையுடன் பகிரங்கமாகவே அறிவிப்புகளைச் செய்து மேகாத் திட்டங்களையும் வகுத்தார் அந்த அரசியல் சாணக்கியர்.

பெர்சத்து முற்றிலும் ஒரு புதியக் கட்சி என்பதால் ‘பூவோடு சேர்ந்தால்தான் நாரும் மணக்கும்’ என்பதை நன்கு புரிந்து கொண்ட மகாதீர், அதனை பக்காத்தான் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.

பக்காத்தானின் ஆதரவோடு 14ஆவது பொதுத் தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட மொத்தம் 52 தொகுதிகளில் 12 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.  அந்த 12 பேரில் அவரும் முக்ரிஸும் முஹிடினும் அடங்குவர்.

இந்த வெற்றியால் உந்தப்பட்ட மகாதீர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அம்னோவைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களை பெர்சத்து வசம் இழுத்து அக்கட்சியை மேலும் வலுப்படுத்தினார்.

எனினும் கட்சி வலுவடைந்தவுடன், குருவை மிஞ்சிய சிஷ்யனாக முஹிடின் தனக்கு சாதகமான வேறு பலத் திட்டங்களைத் தீட்டி பி.கே.ஆர். கட்சியிலிருந்து சில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈர்த்து பக்காத்தான் ஆட்சியைக கவிழ்த்தது வரலாறு.

பெருவாரியான அரசியல் தவளைகளைக் கொண்டு கட்சியில் தனது தனிப்பட்ட பலத்தைப் பெருக்கிக் கொண்ட முஹிடின் ‘ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த’ மாதிரி மகாதீரையும் முக்ரிஸையும் மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் களையெடுத்தார்.

மகாதீர் இல்லையென்றால் முஹிடினின் அரசியல் வாழ்க்கை 6 ஆண்டுகளுக்கு முன்பே அஸ்தமனமாகியிருக்கும் என்பதுவே நிதர்சனம்.

பெர்சத்து கட்சியை தனது அரசியல் பயணத்திற்கு மிகவும் லாவகமாக பயன்படுத்திக் கொண்ட முஹிடின் அக்கட்சியை தற்போது அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் சென்று கிட்டதட்ட நாட்டையே ஆளும் அளவுக்கு அதனை உருமாற்றியுள்ளார்.

இனவாத நோக்கத்தோடு மகாதீர் தொடக்கிய அக்கட்சி தற்போது பாஸ் கட்சியுடன் சேர்ந்து மதவாதத்தையும் தனது பிரதானக் கொள்கையாகக்  கொண்டுள்ளது.

பல்லினங்களைக் கொண்ட இந்நாட்டில் ஒரு இனத்தின் நலனை மட்டுமே முன்னிருத்தி தோற்றுவிக்கப்பட்ட அக்கட்சியை வித்திட்ட மகாதீர் அதன் அலையிலேயே அடித்துச் செல்லப்பட்டு அரசியல் வானிலிருந்து தற்போது மறையும்  தறுவாயில் உள்ளார்.

மகாதீர் என்ற இந்த மாமனிதர் அதோடு நின்று விடவில்லை, பெஜூவாங் என்ற இன்னொரு இனவாத கட்ட்சியையும் தோற்றுவித்து அதில்  தோல்விகண்டார். மகாதீர் ஒரு சகாப்தமாக உருவாக வேண்டியவர், ஆனால், அவரின் சாணக்கியமானது இனவாதத்தையும் மதவாதத்தையும் வேரூண்ட அடிதளமைத்தது. அதில் சிக்கிய அவரின் புதிய கட்சி படு தோல்வியை தழுவியது. சூது கவ்வும்.