இந்தியர் ஏழ்மையை அகற்ற தேசிய கொள்கை தேவை – இன அடிப்படை ஒதுக்கீடு போதாது

இராகவன் கருப்பையா – இம்மாதத் தொடக்கத்தில் நாட்டின் 10ஆவது பிரதமர் அன்வார் இப்ராஹிம் தமது அமைச்சரவையை அறிவித்த போது ஒரு இந்தியருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஏமாற்றமடைந்த நம் சமூகத்தினர் உரிமைகுரலை சற்று உக்கிரமாகக் குரல் எழுப்பினார்கள்.

அதே போல கடந்த வாரம் துணையமைச்சர்கள் பட்டியலை அவர் வெளியிட்ட போதும் நம்மவர்களிடையே அதிர்ப்ப்தி மேலிட்டதைக் காண முடிந்தது.

நமது எதிர்பார்ப்புகள் புறக்கணிக்கும் போது, கடந்த காலங்களின் நிலைமைகளோடு ஒப்பிட்டு, ஏமாற்றத்தின் விளிம்பில் நமது நிலையைக்கருதி குரல் எழுப்புவது ஒரு வகையில் முக்கியம். அது தான் நமது அரசியல் அறைகூவல் ஆகும்.

அமைச்சரவையில் நமது சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது நமக்கெல்லாம் வருத்தமளிக்கும் ஒன்றுதான். யாருக்குமே இதில் மாறுபட்டக் கருத்து இருக்க வாய்ப்பில்லை. இருந்த போதிலும் இப்போது நாட்டை நிர்வாகம் செய்வது பக்காத்தான் அரசாங்கம் இல்லை என்பதை முதலில் நாம் உணரவேண்டும்.

பாரிசான் கூட்டணி நாட்டை ஆட்சி செய்த காலத்தில் கூடிய பட்சம் 2 அமைச்சர்கள் இருந்தார்கள். அதே போல பக்காத்தானின் ஆட்சியில் 4 அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டது வரலாற்றில் இல்லாத ஒன்று.

எனினும் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாட்டின் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்ட நிலையில் இன வாதத்தையும் மத வெறியையும் முன்னிருத்தி அச்சத்திற்குரிய ஒரு திசையில் பயணிப்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

இந்த வட்டாரத்திலேயே, சனநாயக அமைப்பில், ஒரு அரசியல் கூட்டணி இன-மத வெறி ஆதிக்கத்தில் நாட்டை ஆட்சி செய்ய முனையும் நிலை அநேகமாக மலேசியாவில் மட்டும்தான் உள்ளதைப் போல் தெரிகிறது.

இத்தகைய சூழலுக்கு வழி விடாமல் பல்லினங்களையும் அரவணைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்லும் முயற்சியில்தான் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளார் அன்வார்.

இந்தக் கூட்டாட்சியில் ஒருங்கிணைந்துள்ள குறைந்தது 5 கூட்டணிகளுக்குள் 15-கும் மேற்பட்டக் கட்சிகள் சம்பந்தப்பட்டுள்ளன என்பதும் மலேசிய அரசியலில் இதுவரையில் இல்லாத ஒன்று.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் அனைத்துக் கட்சிகளையும் சரிசமமாக அனுசரிக்க வேண்டியக் கட்டாயத்தில் உள்ள அன்வாருக்கு இந்த நெருக்குதல்கள் ஒருவகையில் பதிவு செய்யப்பட வேண்டியதுதான்.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் அல்லவா!இன்னொரு கண்ணோட்டத்தில், அமைச்சரவையில் எத்தனை இந்திய அமைச்சர்கள் இருந்தாலும் நமக்குக் கிடைக்க வேண்டியதுதானே கிடைக்கும்! அதிகமான அமைச்சர்கள் இருந்தால் அதிகமான சலுகைகள் கிடைத்துவிடுமா என்ற கேள்வியும்  எழுகிறது.

சட்டியில் உள்ளதுதானே அகப்பையில் வரும்! ஒரு அகப்பையாக இருந்தாலும் 5 அகப்பைகளைத் திணித்தாலும் சட்டியில் ஏற்கெனவே உள்ளதுதானே வெளிவரும்! ஐந்து அகப்பைகளை உள்ளே போட்டால் சட்டி பெரிதாகி 5 மடங்கு அதிகமான உணவா கிடைக்கும்!

எனவே நம் சமூகத்திற்கென அரசாங்கம் ஒதுக்கும் நிதியை கடந்த காலங்களில் இடையில் தடம் மாறியதைப் போல் இல்லாமல் தேவைப்படுவோருக்கு முறையாக வந்து சேருவதை உறுதி செய்வதுதான் அவசியம்.

ஆக எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. நமக்கான ஒதுக்கீடுகள், குறிப்பாக மித்ரா வழியான உதவிகள் களவானி அரசியல்வாதிகளால் திசைத் திருப்பப்படாமல் இருப்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.

சிவகுமார் மட்டுமே ஒரே இந்திய அமைச்சராக இருக்கிறார், போதுமான உதவியை அவரால் செய்ய முடியுமா என ஐயப்பாடுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் இந்தியர்களுக்கான அமைச்சர் இல்லை. மாறாக நாட்டின் மனிதவளத் துறைக்கு அமைச்சர் என்பதை மறந்துவிடக் கூடாது.

அந்த வகையில் சமூகம் ஒட்டு மொத்த அமைச்சரவை பொருப்புடன்  இந்திய சமூகத்திற்குத் தேவையானவற்றைக் கவனித்து வர வேண்டும்.

இந்நாட்டில் கீழ் மட்டத்தில் இருக்கும் பி40 இந்திய சமூகத்தினரும் ‘ஓராங் அஸ்லி’ எனப்படும் பூர்வக்குடி மக்களும்தான் அதிக அளவில் ஏழைகளாக உள்ளனர் என தேர்தலுக்கு முன் மட்டுமின்றி அதற்குப் பிறகும் கூட அன்வார் பல தடவை குறிப்பிட்டுள்ளார்.

அதன் அடிப்ப்டையில், கடந்த காலம் போல் மித்ரா பணம் என்று ஒரு ரிம 100  மில்லியனை ஒதுக்கினால், அதன் வழி இந்திய ஏழ்மை களைய முடியாது என்பதையும் நாம் அறிவோம்.

எனவே நம் சமூகத்திற்கு ஒதுக்கப்படும் தொகை மட்டும் பத்தாது அது மட்டும் ஒரு வழியல்ல என்பதை அன்வாரும் உணர்வார். அதன் அடிப்படையில் அரசாங்கத்தின் தேசிய அளவிளான ஏழ்மை ஒழிப்பு கொள்கை திட்டங்களில் பி 40 இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டையும் அதன் அமுலாக்கத்தையும் அன்வார் தெளிவு படுத்த வேண்டும்.

தற்போதைய அரசாங்கம், ஒரு இன-மத வெறி அரசியல்வாதிகளின் கைகளில் விழுந்துவிடாமல், குறைந்த பட்சம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான நல்லாட்சியை வழங்குவதற்கு தயாராகி வருகிறது.

இதற்கு நாம் அனைவருமே ஒத்துழைப்பு வழங்கி ஒரு புதிய வரலாறு படைக்க முற்படவேண்டும்.