இராகவன் கருப்பையா – நம் நாட்டில் நாடு தழுவிய நிலையில் தோட்டங்களில் வசித்து வந்த நமது சமூகத்தினர், மேம்பாட்டு நீரோட்டத்தில் பலதடவை விடுபட்டுப் போனது ஒரு சோகமான அத்தியாயம்.
இருந்த போதிலும் பல அரசாங்கங்கள் மாறியுள்ள நிலையிலும் இந்தத் துயரம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருப்பதுதான் நமக்கு வேதனையளிக்கும் ஒரு விடயமாக உள்ளது.
ஆகக் கடைசியாக சிலாங்கூர் மாநிலத்தின் பத்தாங் பெர்ஜுந்தாய் பகுதியில் உள்ள 5 தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் இத்தகைய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
மேரி, சுங்ஙை திங்கி, மிஞ்ஞாக், புக்கிட் தாகார் மற்றும் நைகல் கார்ட்னர், ஆகிய அந்தத் தோட்டங்கள் ஒரு காலக்கட்டத்தில் மாநிலத்திலேயே ரப்பர் உற்பத்திக்கு மிகவும் பிரசித்திப் பெற்றப் பகுதியாக விளங்கியது.
எனினும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அத்தோட்டங்களின் உரிமம் கைமாறிய போது அங்கு வசித்து வந்த ஆயிரக் கணக்கானோரின் வாழ்க்கையில் இருள் சூழத் தொடங்கியது.
அந்த 5 தோட்டங்களின் உரிமையாளரான ‘சொக்ஃபின்’ எனும் ஃபிரஞ்சு நிறுவனம் காலத்தின் கட்டாயத்தால் அவற்றை ‘பெர்ஜயா’ குழுமத்திடம் விற்றதைத் தொடர்ந்து அங்கு வசித்தவர்களில் நிறைய பேர் நகர்ப்புறங்களுக்கு தன்னிச்சையாகவே குடிபெயர்ந்தனர்.
ரப்பர் உற்பத்திக்கானத் தேவைகளும் குறைந்த நிலையில் சுயமாக மாற்றுத் தொழில்களில் ஈடுபடத் தொடங்கிய சுமார் 80கும் மேற்பட்டக் குடும்பங்கள் அங்கேயே தொடர்ந்து வசித்து வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன் ‘தாகார்’ நிறுவனத்திடம் அத்தோட்டங்களை விற்பனை செய்த ‘பெர்ஜயா’, அங்கிருப்பவர்களுக்கு புதிய இடத்தில் வீடு கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கான வீடுகளை பெர்ஜயா வழங்கியுள்ள மாற்று இடத்தில் அரசாங்கம் கட்டித்தர ஏற்பாடு செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.
எனினும் ஏறத்தாழ 3 தலைமுறையாக அங்கு வசித்துவரும் அவர்களுடைய உற்சாகமும் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை.
ஏனெனில் வீடுகளைக் கட்டுவதற்கென வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி வேறு பலத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதால் இந்த நிர்மாணிப்புப் பணிகளை அரசாங்கத்தால் தொடங்க இயலவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இரு வாரங்களுக்கிடையில் வீடுகளைக் காலி செய்யுமாறு ‘தாகார்’ நிறுவனம் அண்மையில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.
அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென இப்படி நட்டாற்றில் விடப்பட்டச் சூழலில் பரிதவிக்கும் அந்த 80கும் மேற்பட்டக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்னதான் செய்வார்கள்?
இந்தச் சூழலுக்கு யார்தான் காரணம்? சொக்ஃபின் நிறுவனமா? பெர்ஜயா நிறுவனமா? புக்கிட் தாகார் நிறுவனமா? அரசாங்கமா? அல்லது பாதிக்கப்பட்டவர்களா?
ஒரு காலத்தில் நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய ரப்பர் உற்பத்திக்கு அடித்தளமாக விளங்கியவர்களின் சந்ததியினர்தான் இவர்கள். ஆனால் வசிப்பதற்கு நிரந்தரக் கூரையில்லாமல் இன்று பரிதவித்து நிற்கின்றனர்.
இதுபோன்ற சூழலில் நம் இனத்தவர் சிக்கித் தவிப்பது காலங்காலமாக இந்நாட்டில் நிகழ்ந்து வரும் ஒரு அவலம்தான். பத்தாங் பெர்ஜுந்தாய் விவகாரம் புதிதான ஒன்றல்ல.இருந்த போதிலும் இதுபோன்ற சோகங்களுக்கு எப்போதுதான் ஒரு நிரந்தரத் தீரவு பிறக்கும் என்று தெரியவில்லை.
அதுவரையில் கட்டாய வெளியேற்றதிற்கு எதிரான போராட்டங்களும் தொடரும் என்பதுதான் பாதிக்கப்படும் மக்களின் நியதியாக உள்ளது .