பட்டதாரி மாணவர்களின் குத்தாட்டம் – சாதனையா, வேதனையா?

இராகவன் கருப்பையா – அண்மையில் நடைபெற்ற உள்நாட்டு பல்கலைக் கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது இந்திய மாணவர்கள் சிலர் போட்ட குத்தாட்டம் நம்மில் பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது. அது  சமுதாயத்திற்கு அவமானத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறதா?

ஓர் உழைக்கும் வர்க்கத்தின் அன்றாட வெளிப்பாடாக இருக்கும் ஏழ்மைப் பண்பாடு அவர்களின் வேதனையையும் வெளிப்படுத்தும். கோபத்தில் பேசும் சொற்கள், மிரட்டல், அதட்டல், அடி தடி போன்றவையும் அடங்கும். அவைதான் அந்த மனிதர்களின் வெளிப்பாடு. அவர்கள் பட்ட வேதனைகள், ஏமாற்றம், தாங்கிய வலியும் சோதனைகளும் அவர்களை அவ்வாறு இயங்க வைக்கின்றன. இது ஒரு சங்கிலி பிணைபாக தொடரும். அதிலிருந்து விடுபடுவது ஒரு சமூகத்தின் சவாலாகும்.

ஆனால், பட்டப்படிப்புவரை வந்தவர்கள், தங்களது பழைய நிலையை மறக்காமல், அதை ஒரு புதிய கோலத்தில் வெளிப்படுத்தி அதன் வழி வந்த வரலாற்றை நினவு கூர்ந்து, வீழ்ந்த தமிழினம் மீண்டும் எழ அதை ஒரு சவாலாக உருவாக்கி இருந்தால் அதில் தவறில்லை.

ஆனால், நடந்தது ஒரு கோமாலித்தனம்.

பட்டமளிப்பு வைபவம் முடிந்தவுடன் மண்டபத்திற்கு வெளியே ஆண், பெண், இரு பாலரும் போட்ட குத்தாட்டம் முழுக்க முழுக்க நகைப்புக்கு உரியது. அதில் வெளிப்பட்டது அடிமைதனத்தின் விடுதலையல்ல, தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கமும், உணர்வு நிலையின் அடிமைத்தனமும்தான்.

படித்துப் பட்டம் பெறுவது வாழ்நாளில் மறக்க மூடியாத, மகிழ்ச்சிகரமான ஒரு வைபவம்தான். அதனைக் கொண்டாடுவதில் தவறில்லை – கொண்டாடத்தான் வேண்டும்.

ஆனால் அத்தகையக் கொண்டாட்டங்கள் வரம்பு மீறிப் போகாமல் இருப்பதை பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

பொதுவாக கூறப்பட்ட சில கருத்துக்களின் தொகுப்புகள்:

“பல்கலைக் கழக வளாகத்தில் உருமி மேளக் கலைஞர்களைக் கொண்டு வந்து தெருக் குத்து நடனமாடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அச்சம்பவத்தின் காணொலிகள் சமூக வலைத்தளங்களில்  அதிகமாகப் பகிரப்பட்டு நம் சமூகத்தினரின் கோபத்தையும் தூண்டியுள்ளது.”

“பட்டம் பெற்ற ஒரு மாணவருக்கு தேங்காயைக் கொண்டு ஆரத்தி எடுப்பதைப் போன்றக் காட்சிகளையும் கூட அக்காணொலியில் பார்க்க முடிந்தது.”

“பட்டமளிப்பு உடைகளுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. அவற்றை எல்லாரும் அணிய முடியாது. அந்த உடைகளை அணிந்திருப்பவர்கள் மிகவும் பண்பார்ந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும் என பொது மக்கள் சாடுகின்றனர்.”

“பட்டம் பெற்றவர்களில் ஏறத்தாழ 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மற்ற இனத்தவர்கள் மிகவும் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளும் போது நம் மாணவர்கள் மட்டும் ஏன் சாக்கடைக் கூத்து நடத்துகின்றனர் என்பதுவே பெரும்பாலோரின் ஆதங்கமாகும்.”

“’ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரியாவது வேண்டும்’,  ‘ஒவ்வொரு குடும்பத்திலும் குறந்தது ஒரு தொழில் முனைவராவது உருவாக வேண்டும்’, போன்ற எழுற்சி மிக்க சுலோகங்களை முன்வைத்து நம் சமுதாயம் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற சம்வங்கள் ஒரு பின்னடைவுதான்.”

கல்விக் கற்ற சமுதாயமாக நாம் மாற வேண்டும் எனும் தூர நோக்கில் அனைத்துத் தரப்பினரும் இப்போது கடுமையாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

துவண்டு கிடக்கும் நம் சமுதாயத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுச் செல்வதற்கான மாபெரும் பொறுப்பு பட்டதாரிகளின் கைகளில்தான் உள்ளது.

தங்களுக்கு அடுத்த நிலையில் வளர்ந்து வரும் இளைய மாணவர்களுக்கு நல்லதொரு உதாரணமாக விளங்குவதற்கான கடப்பாட்டை அவர்கள் மறந்துவிடக் கூடாது.

எனவே தங்களுடைய நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுவது மட்டுமின்றி சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்துள்ள இது போன்ற நிகழ்வுகளுக்கு இடமளிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.சமுதாயப் பற்றுடைய எல்லாத் தரப்பினரும் பட்டதாரி மாணவர்களின் நகர்வுகள் அனைத்தையும் உற்சாகத்துடனும் மிகுந்த ஆர்வத்துடனும் கண்காணித்து வருகின்னர். இதனை அம்மாணவர்கள் நன்கு உணர்வது அவசியமாகும்.

ஆர்வக் கோளாறில் கொண்டாட்டங்கள் பண்பு தவறக் கூடாது. ‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்பதையும் அவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கண் எதிரே, கழுகுக் கண்களுடன் தங்களை வரவேற்கக் காத்திருக்கும் பரந்த வெளியுலகை சற்று கவனிக்க வேண்டும்.

ஆண்ட சமுதாயம் மீண்டும் ஆழ வேண்டும் என்ற உணர்வை தூண்டும் வகையில் நமது பட்டத்தாரிகள் இலக்கணம் வகுக்க வேண்டும்.