எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தமது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று முழக்கமிடுவது ஒன்றும் விசித்திரமல்ல. போட்டியிடும் ஒவ்வொருவரும் வெற்றியில் தான் நம்பிக்கை கொண்டிருப்பர். ஆனால், நடந்து முடிந்த பதினைந்தாம் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும், கூட்டணிக்கும் அறிது பெரும்பான்மை கிடைக்காமல் போனது ஆச்சரியம்தான்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியது. டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி எண்பத்திரண்டு இடங்களைப் பெற்று முதலிடம் வகித்தது. அதற்கு அடுத்து, டான் ஶ்ரீ முகைதீன் தலைமையிலான கூட்டணி எழுபத்திரண்டு இடங்களைப் பெற்றிருந்தது. இந்த இரு கூட்டணிகளும் நடுவண் அரசை அனுமதிக்கும் அதிகாரத்தைக் கோரியது.
மாமன்னரோ அறிது பெரும்பான்மை இல்லாதபோது நாட்டின் நலனைக் கருதி ஒற்றுமை அரசை நிறுவும்படி பணித்தக் கட்டளையை முகைதீன் தரப்பு ஏற்கவில்லை. அதிக இடங்களைப் பெற்றிருந்த நம்பிக்கை கூட்டணிக்கு அரசு அமைக்கும் அதிகாரம் வழங்கப்பெற்றது.
பொதுத் தேர்தலில் மக்கள் எந்த ஒரு கட்சிக்கும் (கூட்டணிக்கும்) அறிது பெரும்பான்மை வழங்காததை எந்த ரகத்தில் சேர்ப்பது? வாக்காளர்களின் விவேகமான முடிவு என்பதா அல்லது அரசியல் கட்சிகள் போட்ட கணக்கு தவறாகிவிட்டது என்பதா?
சில அரசியல் கட்சிகள் தங்களது கடந்த காலப் பெருமையைப் பாடினர். சிலர் இன, சமய அரசியல் வாதத்தை முன்வைத்து வெற்றி காண முயன்றதும் உலகம் அறியாதது அல்ல. சில அரசியல் கட்சிகள் அவிழ்த்துவிட்ட பொய்யான கருத்துக்கள் விசித்திரமானவை என்பதைவிட வேதனையானவையாகும். தேசிய முன்னணியை வழிநடத்தும் அம்னோ நம்பிக்கை கூட்டணியோடு எந்த உறவும் வைக்க மாட்டோம் என அறிவித்தது. அப்படிப்பட்ட முடிவுக்கு முக்கியக் காரணம் நம்பிக்கை கூட்டணியில் ஜனநாயகச் செயல் கட்சியின் அங்கத்துவமாகும்.
ஜனநாயகச் செயல் கட்சி அந்தோனி லோக்கின் முடிவு நாட்டைக் காப்பாற்றியது. பொதுத் தேர்தலுக்கு முன்னமே ஜனநாயகச் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் அம்னோவுடன் இணைந்துச் செயல்பட முடியும் என்று கூறியதை மறந்திருக்க மாட்டீர்கள்.
அந்தோனி லோக்கின் கருத்து புரட்சிகரமானதாகவோ புதிதாகவோ கருத இயலாது. இங்கே வரலாற்று உண்மையை அறிந்து கொள்வோம்.
ஜனநாயகச் செயல் கட்சியின் முன்னோடிதான் ஐம்பதுகளில் சிங்கப்பூரில் உதித்த மக்கள் செயல் கட்சி 1963ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவில் இணைவதற்கு முன்பு காலஞ்சென்ற சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. மலாயாவின் பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.
அப்போது அம்னோவுடன் இணைந்துச் செயல்பட மக்கள் செயல் கட்சி தயார் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கான சமிக்ஞைகள் தெளிவாகவே காணப்பட்டன.
மலேசியாவில் இணைந்த சிங்கப்பூர் அங்கு இயங்கிய மக்கள் செயல் கட்சியை மலாயாவில் பதிவு செய்து 1964ஆம் நடந்தப் பொதுத் தேர்தலில் பங்கு பெற்றது. சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி இப்படி ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று துங்கு அப்துல் ரஹ்மான் எதிர்பார்க்கவில்லை.
அம்னோவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டது லீ குவானின் போக்கு. 1964ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டவர் சி.வி. தேவன் நாயர். அக்காலகட்டத்தில் மலாயாவின் பிரபல தொழிற்சங்கத் தலைவர் வி.டேவிட்டுக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி கண்டார் தேவன் நாயர். இதற்குப் பிறகு, லீ குவான் யூவுக்கும் மலேசியத் தலைவர்களுக்கும் குறிப்பாக அம்னோ தலைவர்களுக்கு இடையில் பலத்த வேறுபாடு வளர்ந்தது.
இறுதியில், சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டது. அப்போது தேவன் நாயர் மட்டும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். மற்ற மக்கள் செயல் கட்சி மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பீயத்தை இழந்தனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தேவன் நாயர் மற்றும் சிலர் ஒன்றுகூடி ஜனநாயகச் செயல் கட்சியை அமைத்து வரலாறு படைத்தனர். எனவே, இன்று ஜனநாயகச் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் அம்னோவுடன் இணைந்துச் செயல்பட முடியும் என்று வெளியிட்டக் கருத்து ஆச்சரியமானதாகவோ விசித்திரமாகவோ கருத வேண்டியதில்லை.
இப்பொழுது ஜனநாயகச் செயல் கட்சிக்கும் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சிக்கும் யாதொரு தொடர்பும், உறவும் இல்லை. சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சி ஜனநாயக சோசலிசத்தை மதிக்கவில்லை என்ற கருத்து பரவலாகவே இருக்கிறது. ஜனநாயகச் செயல் கட்சி ஜனநாயக சோசலிசத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கூட்டணிக்குப் பலமான தூணாக விளங்குவது நாற்பத்திரண்டு உறுப்பினர்களைக் கொண்ட ஜனநாயகச் செயல் கட்சியாகும். ஒற்றுமை அரசு நியமிக்கப்பட்டதும் பிரதமர் அன்வர் இபுராஹீம் அமைத்த அமைச்சரவையில் நியமிக்கப்பட்டோர் நம்பிக்கை தரவில்லை என்பது உண்மை.
கடந்த காலத்தில் ஜனநாயகச் செயல் கட்சியின் சில முக்கியத் தலைவர்கள் நாகாக்கத் தவறியதால் சினம் கொண்ட சரவாக் தலைவர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு தரமாட்டார்கள் என்பதும் தெரிந்தது. அவர்கள் இன, சமய அரசியலுக்கு முதலிடம் நல்கும் முகைதீனின் கூட்டணிக்கு ஆதரவு தரும் பட்சத்தில் நாட்டின் நிலை என்னவாகும்?
இதுதான் முக்கியமாகப்பட்டது.
முகைதீன், இஸ்மாயில் சப்ரி அமைச்சரவைகள் உலகிலேயே மிகப் பெரிதான ஒன்றை அமைத்தது எதற்கு? தங்களின் பதவிகளைத் தற்காத்துக் கொள்வதற்காக. அதே முறையை மீண்டும் பயன்படுத்தத் தயங்காதவர்தான் முகைதீன் என்பது தெளிவானதும் அடுத்த ஆக்ககரமான நடவடிக்கையில் இறங்கியது ஜனநாயகச் செயல் கட்சி. தமக்கு அமைச்சரவையில் பதவி தேவையில்லை என்பது ஒன்று. அடுத்து, அன்வர் அம்னோவுடன் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டால் அதற்குத் துணையாக நிற்பது. அதோடு கோபத்துடன் இருந்த சரவாக் தலைவர்களை உடனடியாகச் சந்தித்து மன்னிப்புக் கோருவது போன்ற நடவடிக்கைகள் நம்பிக்கை கூட்டணியின் தலைமையிலான ஒற்றுமை ஆட்சி மிளிர உதவின. மாமன்னரும் இதைத்தானே விரும்பினார்.
அமைச்சர் பதவி வேண்டாமென ஜனநாயகச் செயல் கட்சி சொன்னது நல்லதொரு அணுகுமுறை. இந்த நிலையை அன்வர் இபுராஹீம் ஏற்றுக்கொள்ளாததானது 1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலேசிய சீனர் சங்கம் படும் தோல்வியைக் கண்டது.
அதன் தலைவர் துன் டான் சியூசின் அமைச்சர் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகச் சொன்னதைத் துங்கு அப்துல் ரஹ்மான ஏற்றுக்கொள்ளவில்லை. அருமையான, நாகரிகமான அரசியல் அணுகுமுறையை அன்வர் இபுராஹீம் கடைப்பிடித்தது அரசியல்வாதிகள் அனுசரிக்க வேண்டிய நல்ல மரபாகும்.
ஜனநாயகச் செயல் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் நடந்ததை விளக்கி தாம் எடுத்த முடிவைப் பற்றி எதிர்காலம் தீர்மானிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தோனி லோக் கையாண்ட முறையைச் சிந்தித்துப் பார்க்கும்போது மகாபாரத நிகழ்வு கவனத்திற்கு வருகிறது.
துரியோதனன் பிறந்தபோது சில தீய, ஆபத்தான சமிக்ஞைகள் காணப்பட்டன. எனவே, நூறு மகன்களைப் பெற்ற திருதராஷ்டிரன மூத்தவன் துரியோதனனைக் கைவிடும்படி அனுபவமிக்கவரும், விவேகமான விதுரரும் மற்றும் பிராமணர்களும் சொன்னார்கள்.
அப்போது, விதுரர் சொன்னதைக் கவனியுங்கள். “நாட்டுக்கும் உன் மக்களுக்கும் நன்மை செய்யும் பொருட்டு துரியோதனனைக் கைவிடுவீர். குடும்பத்துக்காக ஒரு தனிநபரைக் கைவிட வேண்டும்; ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பத்தைக் கைவிட வேண்டும். நாட்டுக்காக ஒரு கிராமத்தைக் கைவிட வேண்டும். ஆத்மாவுக்காக உலகையே கைவிட வேண்டும்” என்பதுதான் விதுரரின் விளக்கம்.
திருதராஷ்டிரன் பிறவி குருடன் மட்டுமல்ல செவிடனும் கூட என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனெனில், துரியோதணன் வளர்ந்து நாட்டின் அழிவிற்கு காரணமானான் என்பதைக் காண்கிறோம்.
அந்தோனி லோக் தமது சுயநலத்தைப் பொருட்படுத்தாது நாட்டு நலனில் கரிசனம் கொண்டு செயல்பட்டது போற்றத்தக்கச் செயல் எனின் மிகையாகாது. இனி நாட்டை நல்ல வழிக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு அன்வர் இபுராஹீமுக்கு உண்டு.