இராகவன் கருப்பையா – அறுபது ஆண்டுகளுக்கும் மேல் பிரதான அரசியல் கட்சியாக நாட்டை வழி நடத்திய அம்னோ தனது எதிர் காலத்தைப் பற்றித் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டிய காலம் கணிந்து விட்டது.
அக்கட்சியின் தேய்மானம் கடந்த 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற 12ஆவது பொதுத் தேர்தலின் போது தொடங்கி சன்னம் சன்னமாக அதன் படு வீழ்ச்சிக்கு தற்போது வித்திட்டுள்ளது.
கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் தொடர்ந்தாற் போல் அது ஆட்சியை இழந்துவிட்ட போதிலும் தட்டுத் தடுமாறி அதிர்ஷ்டவசமாகத்தான் இன்னமும் அரசாங்கத்தில் அது தொத்திக் கொண்டிருக்கிறது.
அம்னோவை ஒரேயடியாக குழி தோண்டிப் புதைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட பெர்சத்து கட்சி தனதுத் திட்டத்தில் ஓரளவு வெற்றி கண்டுள்ள நிலையில் அதன்(அம்னோவின்) அஸ்தமனத்தைத் தடுத்து நிறுத்தியது பக்காத்தான்தான் என்றால் அது மிகையில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக பக்காத்தான் மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் பேரில் கட்சித் தாவல் தடுப்புச் சட்டம் அமலக்கு வந்ததால்தான் அம்னோவின் தலை தப்பியது என்றுக் கூட சொல்லலாம்.
இல்லையேல் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து துருதுருத்தக் கால்களுடன் அரசியல் தவளைகளாகத் தாவுவதற்குத் தயாராய் நின்றிருந்த பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம்னோவை சுத்தமாகக் காலி செய்திருப்பார்கள்.
தனது பங்காளிக் கட்சிகளின் தயவின்றி சுயமாகவே அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு ஒரு காலத்தில் வலுவோடுத் திகழ்ந்த அக்கட்சி கடந்த பொதுத் தேர்தலில் வெறும் 26 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது சற்றும் எதிர்பாராத ஒரு அதிர்ச்சி.
மிகத் துரிதமாக மாற்றம் கண்டு வரும் தற்போதைய அரசியல் சூழலில், நாட்டை ஆட்சி செய்வதற்கு ‘ஓட்டுனர் இருக்கை’யில் இடம் கிடைக்கும் என இனிமேலும் அக்கட்சி கங்கணம் கட்டுவதில் அர்த்தமில்லை. அது நடைமுறைக்கு அப்பாற்பட்ட காலம் கடந்த ஒரு பகல் கனவு என்றே சொல்ல வேண்டும்.
எனவே மலேசிய அரசியலில் அக்கட்சி தொடர்ந்து வேரூன்றி நிற்க வேண்டுமானால் முதல் வேலையாக பாரிசான் கூட்டணியை அது கலைக்க வேண்டும்.
ம.இ.கா.வையும் ம.சீ.ச.வையும் இழுத்துத் திரிவது அம்னோவுக்குத் தேவையில்லாத ஒரு பாரம்தான். அவ்விருக் கட்சிகளையும் அவற்றின் சொந்த சமூகங்களே புறக்கணித்துள்ள நிலையில் கூட்டணியில் அவற்றின் பங்களிப்பு எவ்வகையிலும் பிரயோஜனமாக இல்லை.
தேர்தலுக்குப் பிறகு, பாரிசானை விட்டுப் பிரிந்து பெரிக்காத்தானுடன் சோரம் போகத் தயாராயிருந்த அவ்விருக் கட்சிகளின் நம்பிக்கை துரோகச் செயல் அண்மையில் அம்பலமானது நாடறிந்தது.
அம்னோவின் தயவின்றி நாட்டின் எந்தத் தொகுதியிலும் தாங்கள் ஜெயிக்க முடியாது என்பதை அக்கட்சிகள் மறந்துவிட்டன போலும்.
இப்படிப்பட்ட சூழலில் அவ்விருக் கட்சிகளையும் அவர்களுடைய வழியிலேயே அனுப்பிவிட்டு தன்னை பலப்படுத்திக் கொள்வதில் அம்னோ கவனம் செலுத்த வேண்டும். அக்கட்சி இந்நிலைக்கு ஆளானதற்கு முன்னாள் பிரதமர் நஜிபும் இதர ஊழல்வாதிகளும்தான் மூலக் காரணம் எனும் உண்மையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எனவே அப்படிப்பட்ட ஊழல்வாதிகளைக் களையெடுத்துவிட்டு ‘நல்லப் பிள்ளை’ தோற்றத்தை சம்பாதிப்பதற்கு அக்கட்சி பாடுபட வேண்டியது அவசியமாகும். பக்காத்தானில் நிரந்தரப் பங்காளியாக இணைந்தால் பி.கே.ஆர்., அமானா மற்றும் ஜ.செ.க. ஆகியக் கட்சிகளின் ஒத்துழைப்போடு தனது பலத்தை அம்னோ பெரிக்கிக் கொள்ள வாய்பிருக்கிறது.
பக்காத்தானின் குடையில்தான் இது சாத்தியமாகும். வெறும் ‘மண் குதிர்’களான ம.இ.கா.வையும் ம.சீ.சி.வையும் நம்பி வெளியே சென்றால் அம்னோவின் எதர்காலத்திற்கு உத்தரவாதம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே இத்தகைய அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அம்னோ தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
மதவாதிகளின் கைகளில் நாடு மாட்டிக் கொண்டு பாழாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் தாழ்நிலையிலிருந்து தன்னை மீட்சியுறச் செய்வதற்கும் இது அவசியமாகும்.மத-இனவாத கட்சியாக இருக்கும் அம்னோ, ஒரு மிதவாத கொள்கையின் வழி நாட்டை சீரமைக்க இணைய வேண்டும். அதுதான் மலேசியாவை முற்போக்கு உடைய ஒரு பல்லின நாடாகவும், அதே வேளையில் மலாய் இனத்தின் காவலராகவும் இருக்க வகை செய்யும்..
இது போன்ற நிலையில், பெரிக்காத்தானில் உள்ள வலது சாரி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சத்துவை சாமாளிக்க இந்த பல்லின ஐக்கிய கூட்டணியின் செயல்பாடு அத்தியவசியமாகும்.