இராகவன் கருப்பையா – பக்காத்தான் ஆட்சியமைத்தால் இந்நாட்டின் இந்திய சமூகத்திற்கு விடிவு காலம் பிறக்கும் எனும் எதிர்பார்ப்பில் கிட்டதட்ட ஒட்டு மொத்த சமூகமும் அந்தக் கூட்டணிக்கு கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தது.
அக்கூட்டணியின் தலைமையில் தற்போது ஒற்றுமை அரசாங்கம் அமைந்துள்ள போதிலும் புதிய ஆட்சியில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மிகக் குறைவாக உள்ளதை ஒரு ஏமாற்றமாக எடுத்துக் கொண்டு பல்வேறு தரப்பினர் இன்னமும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியர்களின் நலன், குறிப்பாக பி40 தரப்பினரின் தேவைகள் கவனிக்கப்படும் என பிரதமர் அன்வார் உறுதியளித்துள்ள போதிலும் எப்படிப்பட்டத் திட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது, அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என நம் சமூகம் ஆவலோடு காத்திருக்கிறது.
“இந்தியர்களுக்கு நான் மட்டுமே பொறுப்பல்ல, மாறாக ஒட்டு மொத்த அமைச்சரவையும் இணைந்து நம் சமூகத்தின் நலனைப் பேனிக் காக்கும்”, என ஒரே இந்தியப் பிரதிநிதியான மனிதவள அமைச்சர் சிவகுமார் உறுதியளித்ததும் நமக்குத் தெரிந்ததே.
இப்படிப்பட்ட சூழலில், துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட், சர்ச்சைக்குரிய ஒருவரை தீடீரென அறிமுகப்படுத்தி, “இவர்தான் இந்தியர்களின் நலனைப் பாதுகாப்பார்”, என்று செய்த அறிவிப்பினால் நம் சமூகம் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளது.
தனது சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் ராவ் நாடு முழுவதும் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் களைவார் என ஸாஹிட் செய்த அறிவிப்பு யாருமே எதிர்பாராத ஒன்று.
இந்நாட்டில் நம் சமூகத்திற்குக் கொஞ்ச நஞ்மானப் பிரச்சினைகளா உள்ளன? கல்வி, சமூகம், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, அடையாள ஆவனங்கள், கோயில் உடைப்பு, போன்ற ஏகப்பட்டப் பிரச்சினைகளில் காலங்காலமாக நம் சமூகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதற்கென ஒரு முழு அமைச்சரை நியமித்தால் கூட அவ்வளவு சீக்கிரத்தில் இந்தச் சிக்கல்களைக் களைய முடியாது என்பதும் எல்லாருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட சூழலில் கொஞ்சம் கூட தகுதியும் திறமையும் இல்லாத ஒருவரை எதன் அடிப்படையில் அப்பொறுப்புக்கு ஸாஹிட் நியமனம் செய்தார் என்பதுவே பலருடையக் கேள்வியாக உள்ளது.
அரசு சாரா இயக்கமொன்றை நடத்தி வரும் அவர் அம்னோவின் தீவிர ஆதரவாளராவார். பல தருணங்கில் முன்னாள் பிரதமர் நஜிபையும் அம்னோவையும் வெறித்தனமாக ஆதரித்து பல்வேறு சர்ச்சைகளில் மாட்டிக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியென்றால் நன்றிக் கடனாகத்தான் ஸாஹிட் அவரை நியமித்துள்ளாரா எனும் கேள்வியும் கூட இப்போது எழுகிறது.கடந்த பொதுத் தேர்தலில் ஜ.செ.க.வின் சிவக்குமாரோடு மேலும் 10 இந்தியர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாத் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களில் நால்வர் பி.கே.ஆர். கட்சியையும் 5 பேர் ஜ.செ.க.வையும் ஒருவர் ம.இ.கா.வையும் சேர்ந்தவர்கள்.
பினேங்கின் புக்கிட் கெலுகோர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் சட்டத்துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இதர 9 பேரும் இதுவரையில் எந்தப் பொறுப்புக்கும் நியமனம் பெறவில்லை.
ரமேஷோடு ஒப்பிடுகையில் இவர்கள் அனைவருமே மிகுந்த ஆற்றலுடைய, துடிப்பு மிக்க செயல்திறன் படைத்தவர்கள் என்பதில் ஐயப்பாடு இல்லை. அது மட்டுமின்றி இவர்கள் எல்லாருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
இவர்களில் ஒருவரை தேர்வு செய்யாவிட்டாலும் கூட, குறைந்த பட்சம் ஒரு கல்விமானையோ ஓய்வு பெற்ற நீதிபதியையோ, பொருளாதார வல்லுனரையோ நியமனம் செய்திருக்கலாம் என்பதே வெகுசன மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இல்லையேல் சமூக ஆர்வளர்களைக் கொண்ட சக்திமிக்க ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருக்கலாம் என்று கூட நமக்கு எண்ணத் தோன்றுகிறது.
நம் சமூகத்தின் மீது மிகுந்தப் பற்றுடைய, சமூக மேம்பாட்டில் அக்கரையுடைய நிறைய பேர் வெளியே இருக்கையில் சம்பந்தமே இல்லாத ஒருவரை நியமித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும் என மக்கள் படும் கோபத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக நம் சமூகத்திற்கு வந்து சேர வேண்டிய அரசாங்க உதவிகள் வழி மறிக்கப்பட்டு சூரையாடப்பட்டிருப்பது ஸாஹிட்டுக்குத் தெரியாதா என்ன? இனிமேலாவது கவனமாக இருக்க வேண்டும் என்று ஏன் அவருக்குத் தோன்றவில்லை?
மக்களுக்காக பாடுபட்டிராத ஒருவரை, மக்களால் விரும்பப்படாத ஒருவரை இப்படியொரு முக்கியமானப் பொறுப்பில் அமர்த்தியிருப்பதானது, நம் சமூகத்திற்கு மீது அன்வாரின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள அக்கரையின்மையை காட்டுவதாகவே பொருள்படும்!