ம.இ.கா.வின் பந்தா பேச்சினால் ஒரு பிரயோஜனமும் இல்லை

இராகவன் கருப்பையா- கடந்த மாதம் நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மலேசிய அரசியல் வானில் எதிர்பாராத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இனவாதக் கட்சிகளான அம்னோ, மஇகா மற்றும் மாசீச ஆகிய மூன்றும் மோசமான தேர்தல் முடிவுகளால் பலி கடா ஆக்கப்பட்டனர். இதன் பின்னணியில் மதவாத அடிப்படையில் பெரிக்காத்தான் கட்சி வரலாறு காணாத ஆதரவைப்பெற்றது.

நிலைமையைச் சரி படுத்த அன்வார் தலைமையில் ஒரு கூட்டணி உருவானதிற்கு முதன்மை காரணம், நாட்டை மதவாதிகளிடமிருந்து காப்பாற்றத்தான் என்பதை மறுக்க இயலாது.

அவை அனைத்தும் நாடு சுபிட்சமாக முன்னோக்கி நகர்வதற்கான முயற்சிகள் என்பதை மறுப்பதற்கில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் நாட்டு மக்கள் பட்ட அவதிகளைக் களைவதற்குப் பிரதமர் அன்வார் ஒரு இக்கட்டான சூழலில் பயணிக்கிறார். அதோடு பல அதிரடித் திட்டங்களையும் அறிவித்து வருகிறார்.

இருந்த போதிலும் நம் சமூகத்தைத் தூக்கிவிடுவதற்கான முன்னெடுப்புகள் எதனையும் இதுவரையில் காணவில்லை என்பது நமக்கெல்லாம் சற்று ஏமாற்றம்தான்.

இத்தகைய சூழலில் ம.இ.கா. தலைவர்கள் மட்டும் சம்பந்தமில்லாமல் நாவடக்கமின்றி ‘எடக்கு மடக்காக’ப் பேசித் திரிவது ஏற்புடையதாகத் தெரியவில்லை. ‘தவளை தன் வாயால்தான் கெடும்’ என்பதைப் போலவே உள்ளது இவர்களுடைய போக்கு.

தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் இணைந்துள்ள கூட்டணிகளும் தனிப்பட்ட கட்சிகளும் இரு வாரங்களுக்கு முன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது நாம் அறிந்ததே.

பாரிசானின் பங்காளி எனும் வகையில் ம.இ.கா.வுக்கும் அந்த உடன்படிக்கையில் பங்குண்டு. ஆனால் அந்த ஒப்பந்தம் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு அவமானம் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் இராஜசேகரன் அண்மையில் சாடினார்.

சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளும் ஒருங்கிணைந்த நிலையில் நாட்டிற்குப் பயன்மிக்க சீரான ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்ட நிலையில் ம.இ.கா. மட்டும் அவ்வப்போது ‘பந்தா’ காட்டுவதைப் போல் அறிக்கைகள் வெளியிடுவதில் எவ்விதப் பிரயோஜனமும் இல்லை.

அந்த ஒப்பந்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சரியான முறையில் உள்ளடக்கவில்லை என்றும் அதனை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும், பாரிசானின் உச்சமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான அவர் குறிப்பிட்டார்.

தனது கருத்து, ‘கண்ணாடிக் கூண்டில் இருந்து கொண்டு கல் எறிவதை’ப் போல் உள்ளது என்பதைக் கொஞ்சமாவது அவர் உணர்ந்துள்ளாரா என்று கூடத் தெரியவில்லை.

பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, “இது என்னுடைய தனிப்பட்ட கருத்து, கட்சிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை”, என்று நழுவிக் கொள்வதைச் சில அரசியல்வாதிகள் தங்களுடைய ‘சாமர்த்தியம்’ என்று நினைக்கின்றனர்.

இவர்களுடைய தனிப்பட்ட கருத்து யாருக்கு வேண்டும்? அப்படியென்றால் கட்சியை விட்டு வெளியாகி அதன் பிறகு அறிக்கை விட வேண்டும். கட்சியின் போர்வையில் மறைந்து கொண்டு, அறிக்கை வெளியிட்டு, ‘தனிப்பட்ட கருத்து’ என்று ஒதுங்கக் கூடாது.

முன்னதாக, ஒற்றுமை அரசாங்கத்தில் ம.இ கா. இடம் பெறாததால் இந்நாட்டு இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளை அக்கட்சி கவனிக்காது என அதன் தலைவர் விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கையினால் யாரும் அதிர்ச்சி அடைந்ததாகவோ  வருத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.

மாறாக அதனை ஒரு கேலிக் கூத்தாகத்தான் வெகுசன மக்கள் பார்க்கின்றனர். அல்லும் பகலும் பாடுபட்டு எண்ணற்ற மக்கள் பிரச்சினைகளைக் களைந்து வந்த மாதிரி அவர் பேசியதை மக்கள் ஒரு தமாசாகவேக் கருதுகின்றனர்.

இனிமேல் கட்சியின் நலனில் மட்டுமே ம.இ.கா. கவனம் செலுத்தும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டது அவர்களுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தியச் சமூகத்தின் ஆதரவைப் பேரவில் இழந்துவிட்ட அக்கட்சியின் தலைவர் இப்படி ஏட்டுக்குப் போட்டியாகப் பேசியது முதிர்ச்சி மிக்க ஒரு செயல் அல்ல.

கெடாவின் பாடாங் செராய் தொகுதியில் நடைபெற்ற இடை தேர்தலின் போதும் தேவையில்லாமல் அதிகப்பிரசங்கித்தனமாக அறிக்கை வெளியிட்டுக் கட்சிக்குக் கிடைக்கும் தறுவாயில் இருந்த ஒரு வாய்ப்பை அவர்கள் கெடுத்துக் கொண்டார்கள்.

அரசாங்கத்தில் துணையமைச்சர் பதவி எதனையும் தாங்கள் ஏற்கப் போவதில்லை எனக் கட்சி தலைமையகம் வெளியிட்ட ஒரு அறிக்கையினால் அந்தச் சாத்தியமும் கைவிட்டுப் போனது.

இம்மாதத் தொடக்கத்தில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன், “அரசாங்கத்தில் இடம்பெற எங்களுக்கு விருப்பம் இல்ல”, என வீரவசனம் பேசிய விக்னேஸ்வரன், இரண்டு தினங்கள் கழித்து, “பதவி கிடைத்தால் எடுத்துக் கொள்வோம்”, என முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதையும் மக்கள் கிண்டலாகப் பேசினார்கள்.

ஆக அண்மைய காலமாக அக்கட்சியினரின் ‘பந்தா’ பேச்சுகளைக் கூர்ந்து கவனித்து வரும் பொது மக்கள், இதெல்லாம் தேவையில்லாத, பயனற்ற வீண் விதண்டாவாதம் என்றே கருதுகின்றனர்.

சமூகத்திற்கு மட்டுமின்றிக் கட்சிக்கும் கூட ஒரு பிரயோஜனமும் இல்லாத கருத்துகளையும் செயல்பாடுகளையும் நிறுத்திக் கொண்டு அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான முன்னெடுப்புகளை அக்கட்சி மேற்கொள்வதே சிறப்பு.