தமிழ் மொழி வளர்ச்சியில் கெடா எழுத்தாளர் இயக்கம் முன்னோடி

இராகவன் கருப்பையா – நம் நாட்டில் உள்ள தமிழ் எழுத்தாளர் சங்கங்கள் உட்பட சில இயக்கங்கள்  மொழி வளர்ச்சிக்காக துடிப்பாக செயல்பட்டு வருகின்றன, அவற்றில் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கம் ஒரு முன்னோடி என்றால் அது மிகையில்லை.

தமிழ் எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்தாற் போல் பல்வேறுத் திட்டங்களை மேற்கொண்டு வரும் அவ்வியக்கம் கடந்த வாரம் தனது 50ஆம் ஆண்டு பொன் விழாவை மிக விமர்சையாகக் கொண்டாடியது.

நடப்பு எழுத்தாளர்களை ஊக்குவித்து வழிநடத்துவதோடு நின்றுவிடாமல் இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதிலும் நாம் முனைப்புக் காட்ட வேண்டும். அவ்வாறு செய்தால்தான் தமிழ் மொழியை நாம் அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டுச் செல்ல முடியும் என்று கூறுகிறார அவ்வியக்கத்தின் தலைவர் மாரி சச்சிதானந்தம்.

சுங்ஙை பட்டானி, காந்தி நினைவு மண்டபத்தில் நடைபெற்ற அவ்விழாவின் சிறப்பு அங்கமாக ‘கடாரக் கதாமஞ்சரி’ எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு நூல் ஒன்று வெளியீடுக் கண்டது. கெடா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர்கள் 30 பேரின் சிறந்தப் படைப்புகளை உள்ளடக்கி அந்நூல் வெளியாகியுள்ளது.

சச்சிதானந்தத்தின் கைவண்ணத்தில் உருவான ‘மீண்டும் ஒரு வழக்குரைகாதை’, மணிராமுவின் ‘பாறை’, தேவி இராமசாமியின் சிந்தனையில் ‘நம்பினோர் கெடுவதில்லை’, மற்றும் கலைஞர்தாசன் எழுதிய ‘சட்டக்காரப் பொண்ணு சட்ட இல்லாமல் இருக்கிறாய்’, முதலிய சிறுகதைகளும் அற்றுள் அடங்கும்.

முன்னதாக, மொத்தம் 100 இடைநிலைப் பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கென இரு வெவ்வேறு பயிலரங்குகளை அவ்வியக்கம் நடத்தியது.

எழுத்தாளர் பாலமுருகன் தலைமையில் சிறுகதை பயிரங்கமும் கவிஞர் புண்ணியவான் தலைமையில் கவிதை பயிலரங்கமும் நடத்தப்பட்டன.

அந்த மாணவர்கள் அனைவருமே தங்களுடையத் தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக எடுக்க உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தலா 20 ரிங்கிட் மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளை வழங்கி அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 200 புத்தகங்களில் சிலவற்றை வாங்குவதற்கும் தங்களுடைய இயக்கம் வழிவகுத்ததாகக் கூறினார் சச்சிதானந்தம்.

மாணவர்களுக்கான சிறுகதைப் போட்டிகளையும் தொடர்ந்து நடத்தி வரும் அவ்வியக்கம் சிறந்த படைப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான பயிற்சிகளையும் கூட அவர்களுக்கு வழங்குகின்றது.

அடுத்த ஆண்டிலிருந்து 35 வயதிற்கும் குறைவான இளையோருக்கான சிறுகதைப் போட்டியொன்றைத் தனியாகத் தொடக்கி அதனை ஆண்டு தோறும் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தமது தலைமை உரையின் போது சச்சிதானந்தம் (படம்) குறிப்பிட்டார்.

இந்நாட்டில் தமிழ் மொழிக்கும் தமிழ் பள்ளிக் கூடங்களுக்கும் தொடர்ந்தாற் போல் மிரட்டல்கள் ஏற்பட்டுவரும் சூழல் நிலவுவதால் இத்தகைய முன்னெடுப்புகள் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும்.

தமிழ் மொழிக்கு பாதகம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், அடுத்தத் தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குவதற்கும் இது போன்றத் தொடர் நடவடிக்கைகள் அத்தியாவசியமானவை மட்டுமின்றி அதற்கான அவசரமும் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

‘தமிழ் பள்ளியே நமது தேர்வு’, தமிழைக் காப்பாற்றுவோம்’, என்றெல்லாம் நாள் தோறும் முழக்கமிட்டு வெறுமனே இருந்துவிட்டால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. கெடா மாநில தமிழ் எழுத்தாளர் இயக்கத்தின் நடவடிக்கைகளை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு நாடு தழுவிய நிலையில் உள்ள இதர எழுத்தாளர் சங்கங்களும் தேவையான நடவடிக்கைகளை முடுக்கிவிடுவது அவசியமாகும்.