பள்ளிக்கூடங்களில் இனத்துவேசம்: அமைச்சரின் கவனத்திற்கு வருமா?

இராகவன் கருப்பையா – பகடிவதை, பாலியல் தொல்லை, தீவிரவாதம் மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கைகள் போன்ற எதிர்மறையான அம்சங்களில் இருந்து பள்ளிக்கூடங்கள் முற்றாக விடுபடுவதை உறுதி செய்வதற்கு தனது அமைச்சு பாடுபடும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் செய்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்று.

எந்த ஒரு மாணவரும் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடாமல் குறைந்தபட்சம் 5ஆம் படிவம் வரையில் கல்வியைத் தொடருவதற்குத் தேவையான எல்லாவற்றையும் அமைச்சு கவனித்துக் கொள்ளும் என்று அவர் மேலும் உறுயளித்தார்.

எனினும் ‘இனத்துவேசம்’ எனும் ஒரு பூதாகரப் பிரச்சினை பல்லாண்டுகளாக பள்ளிக்கூடங்களில் விஷக் கிருமி போல இருந்து வருவதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார்.

‘தீவிரவாதம்’ என்று அவர் குறிப்பிட்டது இதைத்தானா அல்லது உண்மையிலேயே இனத்துவேசப் பிரச்சினையை அவர் மறந்துவிட்டாரா அல்லது அதுபற்றி அவர் அறிந்திருக்கவில்லையா என்று தெரியவில்லை.

இனத்துவேசப் பிரச்சினைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது நம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள்தான் என்பது கடந்த 2021ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

நம் இன மாணவர்களில் சுமார் 87 விழுக்காட்டினர் இந்தக் கொடுமைக்கு இலக்காகியுள்ளதாக அந்த ஆய்வுக் காட்டுகிறது.

இவர்களில் பெரும்பாலோர் கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து மவுனமாகவே சோகத்தைச் சுமந்து காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

அவர்களுடைய பெற்றோர்கள் பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கெதிராகவோ சக மாணவர்களுக்கு எதிராகவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க இயலாமல் பரிதவிக்கின்றனர்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ள பள்ளி நிர்வாகமும் அரசியல்வாதிகளும் பெரும்பாலான வேளைகளில் ஏனோதானோ எனும் போக்கில் பாராமுகத்துடன் இருக்கின்றனர்.

ஆனால் அவர்களைப் போல ஃபட்லினாவும் பேசாமல் இருந்துவிட முடியாது, இருக்கவும் கூடாது. இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு அவர் முனைப்புக் காட்டவேண்டும்.

பள்ளிக்கூடங்களில் இனத்துவேசத்திற்கு மூலக்காரணமே ஆசிரியர்கள்தான் என 74% மாணவர்கள் குறிப்பிட்டுள்ளதையும் அந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. இதனையும் ஃபட்லினா கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அண்மையில் ஜொகூரில் இரு இளம் பள்ளி மாணவிகள் தங்களுடைய கைப்பந்து(வோலிபொல்) பறிற்றுனரால் தாக்கப்பட்ட சம்பவம் நாடு தழுவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்வதைவிட பெரும் சர்ச்சையாக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோ மட்டுமின்றி அதன் துணையமைச்சர் அடாம் அட்லி மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஃபைஸால் அஸுமுவும் கூட அதனை வன்மையாகக் கண்டித்தார்கள்.

இதனைப் போலவே இனத்துவேசத்தையும் உடனுக்குடன் கண்டிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அரசியல் காரணங்களுக்காக தெரியாததைப் போல இருந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்தால்தான் புதிய அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கை மெய்பிக்கப்படுவதாக பொருள்படும்.

கடுமையான இனத்துவேசத்திற்கு இலக்காகி எத்தனை மாணவர்கள் பள்ளிப்படிபை இடையில் கைவிடுகின்றனர் எனும் புள்ளி விவரம் இல்லை. இருந்த போதிலும் ஃபட்லினாவின் எண்ணம் முழுமையாக நிறைவேற வேண்டுமென்றால் இப்பிரச்சினையைக் கலைவதற்கு அவர் தீவிர முனைப்புக் காட்ட வேண்டும்.

source:https://www.malaymail.com/news/malaysia/2021/09/16/survey-one-in-two-malaysians-faced-discrimination-in-schools-ethnic-indians/2006075