இராகவன் கருப்பையா – சமூகவியலின் அடிப்படையில் வறுமை பண்பாடு என்பது ஒருவகையான பண்பாடு.அதில் மனித இயல்பு அனுபவங்களின் குறீயீடாக வெளிப்படும். அதோடு அந்த தரப்பின் வாழ்வியல் இயல்புகளையும் வெளிப்படுத்தும்.
அவ்வகையில் வறுமையில் உழன்று அதன் வழி உருவாக்கப்படும் பண்பாட்டில், சில தரப்பினர் மனிதனுடைய தகுதி என்பதை அவரவர் பெற்ற அனுபவத்தை மையமாக கொண்டு வெளிக்கொணர்கிறார்கள்.
இதன் விளைவாக, ஒன்றிலிருந்து ஒன்று விலகி, சமூகத்தால் ஒடுக்கப்படும் குழுக்கள், வெகுண்டு தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றனர்.
நமது நாட்டில் இதை நாம் கையாளும் முறையில் கண்டிப்பாக மாற்றம் தேவை.இந்நாட்டில் பல்வேறு நிலைகளில் நம் சமூகம் அவ்வப்போது இனத்துவேசத்திற்கு உள்பட்டு அவதிப்படுவது கிட்டதட்டப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது.
அதிலும் குறிப்பாக பள்ளிக்கூடங்களில் மற்ற இனத்தவரால் நம் பிள்ளைகள் இன ரீதியாக அலைக்கழிக்கப்படுவது புதிய விடயம் ஒன்றுமில்லை.
ஆனால் நம் இனத்தை நாமே இழிவுபடுத்திக் கொண்டால் என்னவென்று சொல்வது? இந்த அவலத்திற்கு எப்படி தீர்வு காண்பது?பொங்கள் திருநாள் தமிழர்களின் பாரம்பரியமிக்க ஒரு கொண்டாட்டம். தமிழகத்தில் மட்டுமின்றி நம் நாடு உள்பட உலகம் முழுவதும் காலங்காலமாக இப்பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக நம் நாட்டில் அண்மைய காலமாக அரசியல் தலைவர்கள் உள்பட மற்ற இனத்தவரும் நம் சமூகத்தோடு சேர்ந்து இத்திருவிழாவைக் கொண்டாடி மகிழ்வது நமக்கு பெருமை சேர்க்கும் ஒன்றுதான். பொங்கல் கொண்டாடப்படும் தினங்களை ‘இந்தியர்களின் பாரம்பரிய வாரமாக’ அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என பிரபல அரசியல் தலைவர் ஒருவர் பரிந்துரைக்கும் அளவுக்கு நம் நாட்டில் அது பிரசித்திப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செய்தால் ஒற்றுமையையும் கலாச்சாரத்தையும் வளர்க்க உதவுவது மட்டுமின்றி இந்நாட்டு இந்தியர்களின் பாரம்பரியக் கலாச்சாரத்தை தற்போதைய ஒற்றுமை அரசாங்கம் அங்கீகரிப்பதாகவும் அது அமையும் என கிளேங் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜ.செ.க. கட்சியின் சார்ல்ஸ் சந்தியாகோ குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொங்கல் தினத்தன்று கெடா சுங்ஙை பட்டானியில் நிகழந்த ஒரு சம்பவம் இப்புனிதத் திருவிழாவுக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூகத்தையும் தலைகுனியச் செய்துள்ளது.
மண்பானையில் பொங்கல் வைத்துக் கொண்டாடும் நம் பாரம்பரியத்தை சுக்கு நூறாகத் தகர்த்தெரியும் வகையில் ‘ட்ரெக்டர்’ எனப்படும் மண்வாரி இயந்திரம் ஒன்றில் பால் காய்ச்சி புதுமையை ஏற்படுத்த முனைந்த ஒரு கூட்டத்தின் கேவலமானச் செயலை அனைத்துத் தரப்பினரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
சமூக வலைத் தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்ட அந்தக் காணொலிகளை கண்ணுற்ற நம் சமூகத்தினர் மிகுந்த சினமடைந்துள்ளனர். அவர்களில் பலர் நம் இனத்தை கேவலப்படுத்திய அந்தக் கும்பலுக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.பிரிதொரு சம்பவத்தில் சில இந்திய இளைஞர்கள் ‘பீர்’ வகை மதுபானங்களை மண் பானையில் ஊற்றி பொங்கல் கொண்டாடியக் காட்சிகளும் சமூக வலைத் தளங்களில் பரவலாகக் காணப்பட்டது.
பொங்கல் வைக்கும் வைபவத்திற்கு மாசு கற்பிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வரம்பு மீறியச் செயலையும் பொது மக்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.இத்தகைய அராஜகங்கள் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் நிகழும் அறிவிலித்தனமான சீர்கேடுகள் என்ற போதிலும் நம் சமூகம் பாரம்பரியமிக்க அதன் அடையாளத்தை இழந்து சீரழிவுக்கு வழிக் கொணர்வதைப் போல் உள்ளது.
இந்நாட்டில் மற்ற இனத்தினர் இப்படியெல்லாம் தங்களுடைய சொந்த மதத்தையோ இனத்தையோ அவமானப்படுத்தும் வகையில் இழிவுச் செயல்களை அரங்கேற்றுவதுக் கிடையாது. ஆனால் நம் இனத்தை நாமே கேவலப்படுத்திக் கொண்டால் அதற்கு இனத்துவேசம் எனும் அவலச் சாயத்தை பூச முடியுமா? அதற்கு பதிலாக நாம் கண்டிப்பாக ஒரு சுயவிமர்சன கண்ணோட்ட பார்வையில் மீண்டும் நம் இனத்தின் ஆயிரமாண்டு வரலாற்றை புரட்டிப்பார்க்க வேண்டும்.