இந்திய சமுதாயம் ஒன்றுபடவேண்டும்; இல்லையேல் அழிவு ஏற்படும்!

[- Karanraj Sathianathan]

நாம் எப்பொழுதும் அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எப்படி நம்மை ஏமாற்றுகின்றனர், என்ன பொய்களை சொல்கின்றனர் ஆகியவற்றை நினைவில் பதிவு செய்து வைக்கவேண்டும். அதோடு அவர்கள் கூறும் புள்ளி விபரங்களை உண்மையா பொய்யா என்று பரிசோதிக்க வேண்டும். இல்லையேல் இவர்கள் நம்மை தங்களின் இனிய பேச்சால் ஏமாற்றிவிடுவார்.

தேசிய முன்னணிக்கு நாம் 54 ஆண்டுகள் கொடுத்ததும் அவர்கள் நம்மை நடுத்தர வாழ்க்கையிலிருந்து இப்பொழுது பெரும்பான்மையரை பரம ஏழைகளாக மாற்றிவிட்டனர். நமது இரண்டு வங்கிகளையும் பறித்துக்கொண்டனர். துன் சம்பந்தனார் ஒருவரே ஏழையாக இந்த உலகத்தை விட்டு போனார். இவர் 17 தோட்டங்களை வாங்க பல ஊர்கள், தோட்டங்கள் தோறும் சென்று RM10.00 நம் சமுதாயத்தினரிடம் பெற எவ்வளவோ சிரமப்பட்டார். பலரின் பேச்சுக்கும் பழிக்கும் ஆளானார். இப்பொழுது தலைநகரில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேலான உயர்ந்த கட்டிடங்களில் இந்தியர்களுக்கு என்று விஸ்மா துன் சம்பந்தன் தான் இருக்கிறது. தேசிய நில நிதி கூட்டறவு சங்கம் ஒன்றுதான் நாட்டிலே இந்தியர்களுக்கு இருக்கும் ஒரு நல்ல இலாபகரமான நிறுவனம்.

மற்ற மஇகா தலைவர்கள் தங்களை உயர்த்தி கொண்டார்களே தவிர தங்கள் இன சமுதாயத்தை ஏழைகளாக மாற்றிவிட்டனர். இவர்களில் தன்னை சாதனை தலைவர் என்றும் மாமனிதர் என்றும் கூறிகொள்ளும் நபர்தான் படு பயங்கரமாக இந்திய சமுதாயத்தின் உரிமைகளையும் சலுகைகளையும் மகாதிரிடம் விற்று தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது அடிமைகளுக்கும் பணமும் சொத்துகளையும் வியாபார தளங்களையும் வெளிநாட்டு சொத்துகளையும் வாங்கி குவித்துள்ளார்.

66,400 பங்குதாரர்களுடைய மைக்கா ஹோல்டிங்க்சை நொடிக்க வைத்த சாதனை தலைவர். இவர் காலத்தில் 80 தமிழ்ப்பள்ளிகளை நாம் இழந்தோம். மீதி உள்ள 523 பள்ளிகளையாவது நல்ல நிலைக்கு கொண்டுவந்தாறேண்டால் அதுவும் இல்லை.

பெரும்பாலானவர்களுக்கு சொந்த நிலங்கள் கூட இல்லை. நல்ல கட்டிடங்கள் இல்லை. இந்து கோவில்களிலும் இதே பிரச்னைதான். நாம் எல்லா நிலைகளிலிருந்தும் கீழ் நோக்கித்தான் சென்றோம். அரசாங்க வேலைவாய்ப்புகளை இழந்தோம். உயர் நிலைக் கல்வி நிலையங்களில் நமக்கு படு வீழ்ச்சிதான் ஏற்பட்டது. உண்மையை சொல்லவேண்டுமானால் நாம் இந்த நாட்டு பிரஜைகள் என்பதே தேசிய முன்னணி அரசாங்கத்திக்கு மறந்து விட்டது. அது நம்மை ஏதோ கொடிய விலங்குகள் போல நடத்துகிறது. பல இளைஞ்சர்கள் சுட்டும், காவல் நிலையத்திலும் சிறைசாலையிலும் ஏன் வீட்டிலும் கம்போங் மேடானிலும் கொல்லப்பட்டனர். இவர்களை கொன்றவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள். நமக்கு பல கட்சிகளும் அரசு சாராத இயக்கங்களும் இருந்தும் யாரும் வாயைத் திறக்கமாட்டார்கள். ஏனெனில் இவர்களுக்கு அம்னோ அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் பிச்சைகளுக்கு நன்றி உள்ள நாய்களாகவே வாழ்கிறார்கள்.

மக்கள் கூட்டணி சற்று அதிகமாக நம்மை கவனித்துகொள்கிறது.  அடுத்து அவர்கள் நம்மை மனிதர்களாக பார்கின்றனர். ஆனாலும் இவர்களும் நமக்கு செய்யவேண்டிய கடமைகளையும் உதவிகளையும் குறைவாகவே செய்கின்றனர். இனிமேல் நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே குரலில் நம் உரிமைகளை கேட்டால்தான் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் நம் எதிர்கால சந்ததியினருக்கும் நல்வாழ்க்கை கிடைக்கும். இல்லையேல் நம் அழிவை நோக்கிதான் போவோம்.

ஏன் நம் சமுதாயத்தால் ஒன்றுபட முடியவில்லை? மலேசியாவில் நாம் இருபது இலட்சம் பேர்தான் இருக்கிறோம். சீனர்கள் நம்மை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தாலும் ஏதாவது பிரச்னை வந்தால் எல்லோரும் ஒன்றுபட்டு விடுவார்கள் – அவர்கள் ஆளும் கட்சியிலும் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் தங்கள் சமுதாயதிக்கோ, தாய் மொழிக்கோ, கோவில்களுக்கோ ஏதாவது பாதகம் ஏற்பட்டால் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவர். நம் சமுதாயம் மட்டும் இதில் விதிவிலக்காக இருக்கிறது.

அனைவருக்கும் நன்றாக தெரியும் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு –  ஒற்றுமை இல்லாமல் பிரிந்து வாழ்ந்தால் நமக்கு அழிவே வரும். நமது இனத்தின் மேலும், தாய்மொழியின் மேலும் அதிக பற்றுதல் வையுங்கள்!

TAGS: